சம்மாந்துறையைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரும் அக்கட்சியின், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான மாஹிர், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட பின்னர் கருத்து வெளியிடுகையில், கொள்கை ரீதியாக அரசியலை செய்ய வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காகவும் தூயநோக்கிலுமே ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் தான் இணைந்து கொண்டதாகவும் பதவியையும் சொகுசையும் விரும்பியிருந்தால், கட்சியின் தலைவர் அமைச்சராக இருந்தபோதே இணைந்திருக்க முடியும் என்றார்.
மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில், கொழும்பில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் செயலாளர் சுபைதீன், தவிசாளர் அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கொள்கை பரப்புச் செயலாளர் ஜவாத் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான அன்சில், மக்கீன், ஜுனைதீன், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரின் முக்கிய ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த சம்மாந்துறையைச் சேர்ந்த இஸ்மாயில் அண்மைக் காலமாக பொதுஜன பெரமுனவுடன் நெருங்கி செயற்பட்டு வருகின்றார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் இஸ்மாயில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் சம்மாந்துறையைச் சேர்ந்த மாஹிர் அ.இம.கா.வில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli