பட்டதாரி நியமனங்களை உடனடியாக இடைநிறுத்துக
உள்ளூராட்சி அமைச்சர், மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம்
அரசாங்கத்தினால் இவ்வாரம் வழங்கப்பட்ட 42 ஆயிரம் பட்டதாரி பயிலுநர் நியமனங்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு ஒரு வாரகாலம் செல்லும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பொதுநிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாவட்ட செயலாளர்கள், அரசாங்க அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வேண்டியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
2020 பெப்ரவரி மாதம் இறுதித் திகதிகளிலும் மார்ச் 1 ஆம் 2 ஆம் திகதிகளிலும் அஞ்சல் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பட்டதாரி பயிலுநர் நியமனக்கடிதங்கள் 2020.02.27 ஆம் திகதியிடப்பட்டவையாகும். இப்பயிலுநர்களில் அநேகர் தேர்தல் காலப்பகுதி ஆரம்பிக்கப்பட்டதன் பின்பே கடமைக்கு சமுகமளிப்பார்கள்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மற்றும் அதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் போதும் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் முன் அனுமதியைப் பெற்று முறையான விதத்தில் விண்ணப்பங்களைக் கோரி தெரிவு செய்வதற்கான பரீட்சையொன்றினூடாக அரச சேவைக்கு மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்புகள் மற்றும் மிக அவசரமான அத்தியாவசிய ஆட்சேர்ப்புகள் தவிர ஏனைய அனைத்து அரச சேவைக்கான ஆட்சேர்ப்புகள் , பயிலுநர் ஆட்சேர்ப்புகள் அனைத்தும் தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தப்பட்டது.
இந்த தேர்தல் காலப்பகுதியினுள் மிக அவசர தேவையின் அடிப்படையில் அல்லது நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்த பட்டதாரி பயிலுநர்கள் ஆட்சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. இந்தப் பயிலுநர்களை ஆட்சேர்த்துக் கொள்வதனூடாக அரசியல் ரீதியிலான ஊக்குவிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் இதற்கு முன்னரும் தேர்தல் காலத்தில் இவ்வாறான நியமனங்கள் வழங்குவதனை இடை நிறுத்தியுள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமுள்ளன.
அதற்கிணங்க இந்த பட்டதாரி பயிலுநர் நியமனங்களை தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு ஒரு வாரகாலம் செல்லும் வரை இடைநிறுத்துமாறு அறியத்தருகிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தின் பிரதிகள் தேர்தல் அணையாளர் நாயகம், தேர்தல் ஆணைக்குழுவின் செயலாளர் மாவட்ட பிரதி, உதவி தேர்தல் ஆணையாளர்கள் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்