பல்லின சமூகம் பரந்து வாழ்கின்ற நமது நாட்டில் முஸ்லிம்கள் சுமார் பத்து சதவீதமேயாகும். மிகச்சிறுபான்மை என்பதால் கடந்த காலங்களில் அவ்வப்போது முஸ்லிம்களுக்கெதிராக விரும்பத்தகாத சில அசம்பாவிதங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இந்த நாட்டில்முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட கெளரவம் அதைவிட அதிகம். மிகக்குறைந்த விகிதத்தில் வாழும்முஸ்லிம் சமூகம் சுதந்திரத்துக்குப் பிந்திய காலந்தொட்டு அண்மைக்காலம்வரை பிற மதத்தவர்களால் மதிக்கப்படுகின்ற ஒரு சமூகமாக இருந்துள்ளது.
செனட்டராக, பலமிக்க அமைச்சர்களாக, சபாநாயகர்களாக, வெளிநாட்டுத்தூதுவர்களாக, உயர்நீதிமன்ற நீதியரசர்களாக என முஸ்லிம்கள் பல உயர் பதவிகளில் இருந்துள்ளனர்.
எனினும், அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகம் பிற சமூகங்களால் எள்ளி நகையாடப்படுகின்ற ஒரு சமூகமாக மாறியுள்ளமை அனைத்து முஸ்லிம்களுக்கும் வேதனை தரும் விடயமாக உள்ளது. இலங்கை வரலாற்றில் இப்போது தான் முஸ்லிம்கள் இல்லாத ஒரு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. தவிரவும் முஸ்லிம் சமூகத்துக்கெதிராக அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகக் கருத்து தெரிவிக்கின்ற நிலையும்தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. இது பிற மத சாதாரண பொதுமக்கள் மத்தியில் முஸ்லிம்கள் மீது வெறுப்பும் குரோதமும் ஏற்பட ஏதுவாகவும் உள்ளன. இந்நிலை தொடருமானால் முஸ்லிம்களின் எதிர்காலம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்பது திண்ணம்.
இவ்வாறானதொரு நிலைக்கு இஸ்லாமிய சமூகம் தள்ளப்பட ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்தான் வழிவகுத்தது என்ற குற்றச்சாட்டை நிராகரிக்க முடியாது. இருப்பினும். அதற்கு முன்பே முஸ்லிம்களுக்கெதிரான விஷமப்பிரசாரங்கள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டதோடு வன்முறைகளும் நடத்தப்பட்டு பெருமளவு சொத்துக்கள்சூறையாடப்பட்டும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டும் கபளீகரம் செய்யப்பட்டன.
தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர விடப்படக்கூடாது என்ற தோரணையில் பகிரங்கமாகப்பேசி வருவது அனைவரும்அறிந்த உண்மை. இவர்கள் இந்த வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் எதை முன்வைக்க விழைகிறார்கள் என்பதைக் கவனிப்போம்.
பிற மதத்தவர்கள் இஸ்லாமிய அடிப்படை வாதம் என்று எதைக்கூறுகிறார்கள் என்று புரியாத முஸ்லிம்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள். அதையும் தாண்டி அடிப்படைவாதம் என்ற சொற்பிரயோகம்குறித்து நிற்கும் அர்த்தத்தை அறியாதோர் அதைவிட அதிகம். அவர்கள் முஸ்லிம் ஆண், பெண் இருபாலாரின் ஆடைகளையே இவ்வாறு சுட்டிக்காட்டுகிறார்கள் என்பது அவர்களின் உரைகளை நோக்கும் போதும் புரிந்துகொள்ள முடிகிறது.
குறிப்பாக பெண்களின் முகத்தை மறைக்கும் புர்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளுக்கு அளவே இல்லை. இந்த ஆடை கலாசாரத்தால் முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அசெளகரியத்தைப்பற்றி அலட்டிக்கொள்ளாத ஒரு மிகச்சொற்ப தொகையினர் இருந்தாலும் முகம் மூடியதால் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் அவதியும் அவமானமும் படுகின்றவர்கள் ஏராளம். இந்நிலையில் இந்த ஆடை விடயத்திலுள்ள சாதக – பாதகங்களை அலசி ஆராய்வது இன்றைய நிலையில் மிக அவசியமாகும்.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பகாலம் தொட்டு தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றோடொன்றாகக் கலந்து வாழ்ந்தனர். அதனால் அக்காலத்தில் முஸ்லிம்களின் மதம், கலாசாரம் உட்பட அனைத்து விடயத்திலும் தமிழ் மக்களின் வாழ்வியல் ஒழுங்கு தாக்கம் செலுத்தியது. தமிழ் பெண்களைப்போல முஸ்லிம் பெண்கள் சாரி அணிந்தார்கள் என்பதற்கு மேலாக திருமணத்தில் தாலி உட்பட பல சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டன. பூப்பெய்வது விழாவாகக்கொண்டாடப்பட்டது.
கால ஓட்டத்தில் அல்குர்ஆனும் ஹதீஸ் கிரந்தங்களும் தமிழில்வந்ததோடு இஸ்லாமிய இயக்கங்களின் வருகையும் இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கின. இதனால் முஸ்லிம்கள் கொள்கை ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பல்வேறு வகையான மாற்றங்களை மேற்கொள்ள இந்த இயக்கங்கள்மக்களை சமூகத்தின் பெயரால் நிர்ப்பந்தித்தன என்றே கூற வேண்டும். இவற்றில் அதிகமானவை இஸ்லாமிய சமூகத்தின்அவசியத்தேவையாக இருக்கின்ற அதேவேளை ஒருசில விடயங்கள் சமூகத்தை பிற சமூகங்களிடமிருந்து பிரித்து சங்கடமான ஒரு நிலைக்குத் தள்ளி விட்டுள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை. இதில்அதிக பங்கு புர்காவுக்கும் ஹபாயாவுக்கும் உண்டு.
பொருளாதாரத்தின்மீது அளவுக்கதிகமாக மோகம் கொள்வதை இஸ்லாம் வன்மையாக வெறுக்கிறது. ஆயினும் முஸ்லிம்களில் குறிப்பிட்ட சத விகிதத்தினர் அளவுக்கதிகமாக பொருளாதாரத்தின்மீது மோகம் கொண்டவர்களாகவும் சொத்து சுகங்களைச் சேகரிப்பதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருப்பதையும் இன்னும் சிலர் அதற்காக கேவலமான போதைவஸ்து கடத்தல், கொலை, கொள்ளை போன்ற படுபாதகச் செயல்களில் ஈடுபட்டு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும் தலைகுனிவுக்கு உள்ளாக்குவதையும் கண்கூடாகக் காண்கிறோம். அதேபோல முஸ்லிம்கள் இஸ்லாம் விரும்பாத நபியின் உணவு வழிகாட்டலுக்கு மாறாக ஆடம்பரமான உணவுப் பழக்கத்தைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இவைகளும் இன்றைய இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் சங்கடங்களுக்கான காரணிகளாக உள்ளதை மறுப்பதற்கில்லை.
எனவே, இவற்றிற்கெதிராகப் பேசவேண்டிய தேவை இருக்கின்ற நிலையில் அதுபற்றி எதுவும் பேசாது கருத்து வேறுபாட்டுக்கு இடமுடைய புர்கா, கறுப்பு நிற ஹபாயா என்பவற்றுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவமும் அதற்கான போராட்டமும் எந்தளவுக்கு நியாயமானது என சிந்திக்கத் தூண்டுகிறது.
நபியுடைய மனைவியரிடம் யாதொரு பொருளை நீங்கள் கேட்க நேரிட்டால், திரைக்கு அப்பால் இருந்து கொண்டே அவர்களிடம்கேளுங்கள். (அல்குர்ஆன்: 33:53)
அந்நிய ஆண்களிடமிருந்து தங்களை மறைத்துக்கொள்ளுமாறு நபி (ஸல்). அவர்களின் மனைவியருக்கு கட்டளை இட்ட அல்லாஹ் ஏனைய பெண்களிடம் இவ்வாறு கூறுகிறான்.
(நபியே!) நம்பிக்கையுள்ள பெண்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்களும் தங்கள்பார்வையைக் கீழ்நோக்கி வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக்கொள்ளவும் அன்றி தங்கள் தேகத்தில் (தாமாக வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர) தங்கள் அழகை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும். (அல்குர்ஆன்: 24:31)
மேற்படி வசனத்தில் அல்லாஹ்வின் கட்டளைகள் வருமாறு–
· பார்வையை கீழ்நோக்கி வைக்க வேண்டும்
· கற்பைப்பாதுகாக்க வேண்டும்
· (தாமாக வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர) அழகை வெளிக்காட்டக்கூடாது
· முந்தானையால் மார்பை மறைக்க வேண்டும்.
பார்வையை கீழ்நோக்கி வைக்குமாறு என்பதிலிருந்தும் தாமாக வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர என்பதிலிருந்தும் முகத்தை மறைப்பது குர்ஆனின் வழிகாட்டலுக்கு முரணானது என்பது புரிகிறது.
மேலும் எல்லா தர்ஜுமாக்களிலும் இதில்வரும் முந்தானை என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. எனினும் நமது ஹபாயா முந்தானையைக் கொண்டதல்ல. இதிலிருந்தே ஹபாயாதான் முஸ்லிம்களின் கலாசார ஆடை என்ற வாதம் வலுவற்றதாகி விடுகிறது.-Vidivelli
- எம்.ஏ.எம்.மர்சூக்,
மருதமுனை.