மஹர சிறைச்சாலை வளாக பள்ளியை மீள ஒப்படைக்குக
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதியமைச்சர் நிமல் சிறிபால உத்தரவு
மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல், சிறைச்சாலை அதிகாரிகளால் ஓய்வு அறையாக மாற்றப்பட்டு புத்தர் சிலையொன்றும் வைக்கப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் குறிப்பிட்ட ஜும்ஆ பள்ளிவாசலை தொழுகைக்காக கையளிக்கும் படி நீதி சட்ட மறுசீரமைப்பு, மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் 100 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றினைக் கொண்டதாகும்.
இப்பள்ளிவாசல் கட்டடம் புனரமைக்கப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வுஅறையாக மாற்றப்பட்டு அங்கு புத்தர் சிலையொன்றும் வைக்கப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தருமான எம்.யூ.எம். அலி சப்ரி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் கலந்துரையாடிய போதே தான் குறிப்பிட்ட உத்தரவினை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த 26 ஆம் திகதி பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீதியமைச்சில் சந்தித்து இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினர். தற்போது முஸ்லிம்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ள பள்ளிவாசலை மீண்டும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யும்படியும் வேண்டிக்கொண்டனர்.
இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடுவதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு பெற்றுத்தருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவரது உறுதிமொழிக்கமையவே பள்ளிவாசலை மீண்டும் முஸ்லிம்களுக்காக திறந்து விடுவதற்கு அமைச்சரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுத் தாக்குல்களின் பின்பு பள்ளிவாசல் முஸ்லிம்களின் பாவனைக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்ததுடன் சமயக் கடமைகளுக்கும் தடையேற்படுத்தப்பட்டிருந்தது. பள்ளிவாசல் உடைமைகளைக் கூட உபயோகப்படுத்துவதற்கு முஸ்லிம்கள் அனுமதிக்கப்படவில்லை. ஜனாஸா தொழுகைகள் கூட மையவாடியிலேயே மேற்கொள்ளப்பட்டன.
பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் நேற்று வக்பு சபை பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியதுடன் ஆவணங்களைப் பரிசீலித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சரின் சுமுகமான தீர்வுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உட்பட சிவில் சமூக அமைப்புகள் நன்றிகளைத் தெரிவித்துள்ளன.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்