மட்டக்களப்பு தேவாலயத்துக்குள் உட்புகுந்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட நான்கு முஸ்லிம்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு புனித செபஸ்ரியான் தேவாலயத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நான்கு முஸ்லிம்கள் தேவாலயத்துக்குள் நுழைந்துள்ளனர். இதன்போது அங்கிருந்தோர் கலவரமடைந்து குறித்த 4 பேரையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து இவர்களை விசாரணை செய்த மட்டக்களப்பு தலைமையக பொலிசார் விசாரணையின் பின்னர் அன்று மாலையே விடுதலை செய்தனர்.
இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அம்பாறை இறக்காமம் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் மற்றும் அவரது 39 வயதுடைய வாய் பேசமுடியாத மகள், 23 வயதுடைய மகன் , 33 வயதுடைய மருமகன் ஆகியோரேயாவர்.
வாய்பேச முடியாத தமது மகளின் நோயை குணப்படுத்துவதற்காக இரு மோட்டார் சைக்கிளில் இவர்கள் சீயோன் தேவாலயத்துக்கு வந்ததாகவும் அங்கு ஆலயம் மூடப்பட்டுள்ளதையடுத்து அதன் ஆராதனை வேறு இடத்தில் நடப்பதாக அறிந்து இந்த தேவாலயத்துக்குள் நுழைந்ததாகவும் பொலிசாரிடம் வாக்குமூலமளித்துள்ளனர். இதனையடுத்தே இவர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- எம்.எஸ்.எம்.நூர்தீன்