கொரோனா வைரஸ் அல்லது கொவிட் 19 பரவாமல் தடுப்பதற்காக சவூதி அரேபியாவைச் சேர்ந்தோரல்லாத அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் உம்ரா கடமையினை நிறைவேற்ற வருகை தருவதற்கு சவூதி அரேபியா அரசாங்கம் தற்காலிக தடைவிதித்துள்ளமை பாராட்டத்தக்கதாகும் என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் உதவி பொதுச்செயலாளர் எம்.எஸ்.எம். தாஸிம் மெளலவி விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சீனாவில் உருவான கொவிட் –19 என்ற வைரஸ் தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருக்கிறார்கள். மேலும் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 50 ஆக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இத்தொற்று வியாபித்துள்ளது. இந்நிலையிலேயே சவூதி அரசும் உம்ராவுக்கு வருவதற்கு வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக தடைவிதித்துள்ளது. உலக நாடுகள் மூலம் சவூதியில் தொற்று பரவாமலிருப்பதற்காக சிறந்த தீர்மானம் இதுவாகும்.
ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான என்றுகூடக் கூறலாம் மக்களைப் பாதுகாப்பதற்கே சவூதி அரசு இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
ஒட்டகத்தை கட்டி வைத்ததன் பின்னர்தான் இறைவன் மீது தவக்குல் பொறுப்பைச் சாட்டவேண்டும் என்ற நபி மொழிக்கமைய பல இலட்சம் மக்கள் உம்ரா மற்றும் மதீனா மஸ்ஜிதுன் நபவியை தரிசிக்கச் செல்பவர்களின் தற்பாதுகாப்பு விடயமாகக் கருதப்படுகிறது. இத்தீர்மானத்தை அனைத்து நாடுகளும், இஸ்லாமிய அமைப்புகளும் வரவேற்றுள்ளன. இந்நோயை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு உலக நாடுகள் முயற்சிக்கின்றன. நாமும் பிரார்த்திக்கிறோம். புனித ரமழானின் கடமைகள் இதனால் பாதிக்கப்படக்கூடாது. இத்தீர்மானம் தொடர்பில் சவூதி மன்னர், முடிக்குரிய இளவரசர் இலங்கை நாட்டுக்காக சவூதி அரேபியாவின் தூதுவர் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உதவிப் பொதுச்செயலாளரும் ‘அமிஸ்’ நிறுவனத்தின் பணிப்பாளருமான எம்.எஸ்.எம். தாஸிம் மெளலவி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்