அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய பருவங்களில் மிக முக்கியமான பருவமாகக் கருதப்படுவது, வாலிபப் பருவமாகும். மார்க்கத்தின் அரணாகத் திகழும் வலிமைமிகு வாலிபப் பருவம் என்பது இறைவனால் எமக்களிக்கப்பட்ட மிகப் பெரும் அருள் என்றால் அது மிகையாகாது.
இந்த இளைஞர் சமூகமே எமது வளம். இந்த இளைஞர் கூட்டமே இஸ்லாத்தின் மிகப்பெரும் பலமென்பதை எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இளம் சமூகத்தினரைப் பற்றி அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் மிக விரிவாகப் பேசுகின்றன. ஏனெனில், இவர்கள் சமூகத்தின் முதுகெலும்பு எனக் கணிக்கப்படுகிறார்கள். அன்பு நபி (ஸல்) அவர்கள் ஈமானிய உணர்வுள்ள இளைஞர் சமூகத்தை உருவாக்கினார்கள். இவர்களாலே இஸ்லாத்தின் ஓசை உலகெங்கும் ஒலிக்க ஆரம்பமானது. நபி (ஸல்) அவர்கள் வயோதிபர்களுக்கு கொடுத்த கவனத்தை விடவும் வாலிபர்களுக்கு கொடுத்த கவனம் அலாதியானது.
வரலாறுகளை படித்துப் பாருங்கள்! ஸஹாபி அபூபக்ர் ஸித்தீக் (ரழி) அவர்கள், நபிகள் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்து, முதல் நாளில் இஸ்லாத்தை ஏற்றார், அருமை நபியை முதன் முதலில் உண்மைப்படுத்திய பெருமை அவரையே சாரும். அந்நேரம் அண்ணாரது வயது 37 ஆகும். அபூபக்ர் ஸித்தீக் (ரழி) அவர்கள், இஸ்லாத்தை ஏற்று 20 ஆண்டுகளுக்கு பின் அவரது தந்தை அபூ குஹாபா இஸ்லாத்தில் நுழைகிறார்.
ஸஹாபாக்களின் வரலாறு ஏடுகளை புரட்டிப் பார்த்தால், அநேகமான ஸஹாபாக்கள் 37 வயதிற்குட்பட்டவர்கள். அவர்கள் இஸ்லாத்திற்கு செய்த சேவை அளப்பரியது. நாம் வரலாறு படிக்கிறோம். நபித்தோழர் உஸாமா (ரழி) அவர்களின் கரத்திற்கு படையின் கொடி ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர் 18 வயது வாலிபராக இருந்தார்.
இப்போதுள்ள 18 வயது வாலிபர்கள் ஸுபஹ் தொழுகையை பள்ளிக்கு வந்து நிறைவேற்றக்கூட பலமற்ற இளைஞர்களாக மாறிவிட்டார்கள். இப்பருவத்தில் அவர்களை தமது கையடக்கத் தொலைபேசியை விட்டுப் பிரிந்திருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எங்கு பார்த்தாலும், எங்கு சென்றாலும் இவர்களின் இத்தகைய செயற்பாடு வளர்ந்துவரும் சமூகத்திற்கு ஆபத்தாக மாறியுள்ளது.
எமது வாலிப சமூகத்தை அணுகுங்கள்! அரவணைத்துப் பேசுங்கள்! அவர்களை அனைத்து துறைகளிலும் பயன்படுத்துங்கள்! சமூகத்தை விட்டும் அவர்களை அப்புறப்படுத்தாதீர்கள்! அவர்களிடம் இருக்கும் திறமைகள், ஆளுமைகளை வீணாக்காதீர்கள்! நபி (ஸல்) அவர்கள் தனது ஸஹாபா தோழர்களிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை மிகத் துல்லியமாக இனங்கண்டு அவர்களை பயன்படுத்தினார்கள். சமூகக் காவலாளர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தாவிட்டால் அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இவர்கள் சிறைச்சாலைகளில் காலம் கழிக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வாழுங்கள். முன்னைய காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை தெளிவுபடுத்த வேண்டிய தேவையில்லை.
எ
மது நாட்டில் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், வியாபார நிலையங்கள் கட்டுவதற்கும் அவற்றை முன்னேற்றுவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வாலிபர்கள் விடயத்தில் செய்யப்படவில்லை. இதனால், இலக்கற்ற, சமூகமாக அவர்கள் மாறிவிட்டார்கள். வீட்டில் பெற்றோர்களுக்கும் பாடசாலையில் ஆசிரியர்களுக்கும் கட்டுப்படாதவர்களாக மாறிவிட்டார்கள்.
இறைவனின் இல்லத்தில் இனிய ஓசையில் இறைவனை அழைக்கின்ற இளம் முஅத்தின்களை நியமியுங்கள்!
மக்கா வெற்றி கிடைத்த நாளன்று கஃபாவின் கூரையின் மீது ஏறி நின்று அதான் கூற பிலால் (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் தெரிவு செய்தார்கள். அப்போது அவர்களின் பாங்கொலி மலைக் குன்றுகளுக்கெல்லாம் அப்பால் ஒலிக்கக்கேட்டது. இதனை கேட்ட சில இளம்பிள்ளைகள் அதானை பரிகாசம் செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இச்சிறார்களை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்கள். அவர்களிடம் ஒவ்வொருவராக அதானை சொல்லிக் காட்டுமாறு ஏவினார்கள். அவர்களில் அழகிய தொனியில் அதான் கூறிய சிறியவரை அழைத்து நீங்கள் இஸ்லாத்தை தழுவினால் உங்களை மக்கா பள்ளிக்கு முஅத்தினாக நியமனம் செய்து விடுவேன் என்றார்கள். அவர் உடனே இஸ்லாத்தை ஏற்றார். அந்நேரம் அவரது வயது 13 ஆகும். 13 வயது பிள்ளைக்கு இங்கு என்ன வேலை என்றல்லவா நாம் யோசிப்போம்.
வயது பார்த்து ஒரு பொறுப்பை ஒப்படைக்க நினைக்காதீர்கள்! திறமைக்கும், தகுதிக்கும் முன்னுரிமை வழங்குங்கள்! அவர்களிடம் இருக்கும் ஆற்றல்களை இனம்கண்டு அவற்றை நாம் சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும். ஊரின் தலைமைத்துவத்தை இளைஞர்களிடம் ஒப்படையுங்கள்!
மக்கா வெற்றியின் பிறகு ஒரு தலைவரை நியமிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எப்போதும் நுணுக்கமாக செயற்படுவார்கள். தலைவர் பொறுப்பை ஏற்க யாருக்கு தகுதியும் திறமையும் உள்ளது என்பதை ஊகித்து நாயகம் நபி (ஸல்) அவர்கள் அங்கே அந்நேரத்தில் 21 வயதுள்ள இளம் நபித்தோழர் அத்தாப் இப்னு அஸீத் (ரழி) அவர்களை தேர்ந்தெடுத்தார்கள். எமது ஊர்களில் எங்கேயாவது 21 வயதான தலைவர்களை பார்க்க முடிகிறதா? எனவே, இளைஞர்களை இழிவாகப் பார்க்காதீர்கள்! இலேசாகப் பார்க்காதீர்கள்! ஓரிரு விடயங்களை வைத்து அவர்களை எடைபோடாதீர்கள்!
சகோதரர்களே! வாலிபர்களை வலுப்படுத்த காத்திரமான செயற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்! அவர்களின் பெறுமதியை புரிய வையுங்கள்! இளம் நபித்தோழர்கள் இஸ்லாம் தலைதூக்க செய்த சேவைகளை இப்போதுள்ள வாலிபர்களுக்கு ஒப்பீட்டு ரீதியாக தெளிவுபடுத்துங்கள்!
உலகத் தலைவர் நபி (ஸல்) அவர்கள் 18 வயதுள்ள உஸாமா இப்னு ஸைத் (ரழி) அவர்களை ஒரு படைக்குத் தளபதியாக நியமித்தார்கள். அப்படையிலேதான் உஸாமா (ரழி) அவர்களை விட வயது முதிர்ந்த அபூபக்ர(ரழி), உமர்(ரழி), உஸ்மான் (ரழி) போன்ற ஸஹாபாக்கள் இருந்தார்கள். நண்பர்களே! இவ்வாறு சிறப்பு மிகுந்த நபித்தோழர்கள் இருந்தும் கூட இளம் நபித்தோழர்களை முற்படுத்தியதிலிருந்து நாம் முன்மாதிரியைக் காண வேண்டும்.
பொறுப்புக்களை சுமப்பதற்கு நான் அல்லது எனது குடும்பம்தான் தகுதியென நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனை மறந்துவிட்டு நபியின் வரலாறை படித்து வாழப் பழகிக் கொள்வோம்!
G.C.E. O/L பரீட்சை எழுதிய இளம் மாணவச் செல்வங்களை நெறிப்படுத்துங்கள்!
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிவிட்டு நீண்ட விடுமுறையில் இளைஞர்கள் தமது காலத்தை செலவழிக்கிறார்கள் என்பது குறித்து சமூகத் தலைவர்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். சிலர் அல்லாஹ்வின் பாதையில் சென்று நல்லபல மார்க்க விடயங்களை படித்துக் கொடுத்து அவர்களை வீடுகளில் ஒப்படைப்பதும் வரவேற்கத்தக்க செயற்பாடாகும்.
ஆனால், அவர்கள் விடயத்தில் தொடர்ச்சியான கவனம் செலுத்தாமல் இருப்பதுதான் கவலையளிக்கிறது. மேலும் விடுமுறை காலங்களில் எமது உலமாக்களை வைத்து மார்க்க வகுப்புகளை ஏற்பாடு செய்யலாம். எமது இளம் சமூகத்தினரை நெறிப்படுத்தத் தவறினால் அவர்களிடமிருந்து எதிர்காலத்தில் விளைவுகளும் மோசமாகத்தான் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!
வீட்டில் பெற்றோரின் கவனயீனம் காரணமாகவே அதிக இளைஞர்கள் வழிகெட்டுப் போகின்றார்கள். சில பெற்றோர்கள் வெளிநாட்டில் காலத்தை கடத்துகிறார்கள். இந்நிலையில் பிள்ளைகள் முறையான பயிற்றுவிப்பின்றி வளர்கின்றனர். எப்போதும் பிள்ளைகள் பெற்றோரால் வளர்க்கப்பட வேண்டும். அவர்கள் தானாக வளரக்கூடாது.
இபாதுர் ரஹ்மானின் இனிய பண்புகள் இளைஞர்களிலும் பரிணமிக்க வேண்டும்.
ஸூரத்துல் புர்கானில் இபாதுர் ரஹ்மானின் அருளாளனின் அடியார்கள் எத்தகைய பண்பு கொண்டவர்கள் என்பதை ஆரம்பித்து 12 பண்புகளையும் தெளிவுபடுத்துகிறான். அவைகளை பின்வருமாறு சுருக்கமாக நோக்குவோம்.
* பணிவு.
* வீணர்களுடன் வீண்சண்டை புரியாது. (புத்தி சாதுர்யமாக) நடத்தல்
* இரவில் இறைவனை நின்று வணங்குதல்.
* நரகத்தில் விழாதிருக்க அவனை அஞ்சுதல்.
* வீண்விரயத்தையும், உலோபித்தனத்தையும் விட்டுவிடல்.
* இணைவைப்பை விட்டும் விலகியிருத்தல்.
* கொலை செய்வதிலிருந்து தவிர்ந்திருத்தல்.
* விபசாரத்தை விட்டு விலகியிருத்தல்.
* பாவமன்னிப்பு கேட்டல்.
* பொய்யை தவிர்ந்திருத்தல்.
* உபதேசம், உபன்னியாசம் கேட்டு ஏற்றுக்கொள்ளல்.
* கெஞ்சி, பணிந்து இறைவனை அழைத்தல்.
இறைவன் இளம் நபித்தோழர்களை பொருந்திக் கொண்டான். நபித்தோழர்களும் அவனை பொருந்திக் கொண்டார்கள்.
நபி(ஸல்) அவர்களின் அரவணைப்பில் வாழ்ந்து வளர்ந்த ஸஹாபாக்களில் அதிகமானோர் இளைஞர்களாகத்தான் இருந்தார்கள். இஸ்லாம் மேலோங்க ஸஹாபாக்களின் பங்கு அளப்பரியது. சொல்லொணாத் துயரங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய கட்டங்கள் உருவாகின. இதனால் தான் இறைவன் பின்வருமாறு கூறுகிறான்.
அல்லாஹ் ஸஹாபாக்களை பொருந்திக் கொண்டான். ஸஹாபாக்களும் இறைவனை பொருந்திக் கொண்டார்கள்.
01. அல்லாஹ்வை நாம் திக்ரு செய்தல், ஞாபகமூட்டல்.
02. நபி(ஸல்) அவர்களை நேசித்தல்.
03. அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அமல் செய்தல்.
இம்மூன்று விடயங்களையும் சிந்தனை செய்து பாருங்கள்! ஒரு பக்கம் இவைகளை இறைவனுக்காக மாத்திரம் செய்கிறோம். ஆனால், மறுபக்கம் இருக்கிறது. அதுதான் அல்லாஹ் எங்களை ஞாபகமூட்டுகிறானா? என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இறைவன் எம்மை விண்ணுலகில் (திக்ரு) ஞாபகம் செய்ய வேண்டும்!
இறைவனை நாம் மண்ணுலகில் ஞாபகம் செய்தால், அவன் எம்மை விண்ணுலகில் ஞாபகம் செய்வான். இறைவன் இறை வேதத்தில் இப்படி கூறுகிறா.ன் ஆகவே, நீங்கள் என்னை நினைவுகூருங்கள்; நானும் உங்களை நினைவு கூருவேன். இன்னும்,நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள். (2:152)
(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக. இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவீராக. நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டும் விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். 29:45.
இத்திருவசனங்களைப் பார்க்கும்போது அல்லாஹ்வை திக்ரு செய்வது எவ்வளவு முக்கியமானதென்பது தெளிவாகிறது. ஆகவே, வாலிபர்கள் மாத்திரமல்லாமல் அனைவரும் இறை சிந்தனையுடன் காலத்தைக் கழிப்பது, காலத்தின் தேவையாகும். எமது நாமம் அடிக்கடி இறைவனிடம் பிரஸ்தாபிக்கப்பட வேண்டும். வானவர்கள் எங்களை பற்றி பேச வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் நேசத்திற்கு நாம் தகுதியானவர்களா…?
நபி (ஸல்) அவர்களின் திருநாமம் கேட்டால் ஸலவாத் சொல்கின்றோம். அவர்களை புகழ்மாலை பாடுகின்றோம்.
ஆனால், நபி (ஸல்) அவர்கள் என்னை நேசிப்பார்களா? அவரால் நான் நேசிக்கப்பட தகுதியானவனா? என்னைக் கண்டால் என்ன சொல்வார்கள்? முடிவு செய்யுங்கள்!
அபூ யஸீத் (ரஹ்) அவர்கள் ஒரு தாபிஈ ஆவார்கள். அதாவது, ஸஹாபாக்களை கண்டவர், நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும்போது பிறந்து விட்டார்கள். ஆனால் நபியவர்களைப் பார்க்கக் கிடைக்கவில்லை; ஒருமுறை மஸ்ஜிதுன் நபவிக்கு வருகை தந்தபோது, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அபூ யஸீத் ரஹ் அவர்களை அழைத்து உங்களை நபி (ஸல்) அவர்கள் பார்த்திருந்தால், நேசித்திருப்பார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் 27 வருடம் நபியின் அரவணைப்பில் இருந்தவர்கள். இங்கே இச்சம்பவம் உணர்த்துவது, நபி மீது அவர் கொண்டுள்ள உண்மை நேசத்தையாகும்,
இறைவன் எங்களைப் பொருந்திக்கொள்ள வேண்டும்
நாம் இறைவனை பொருந்திவிட்டோம். அவன் எம்மை பொருந்திவிட்டானா? நான் செய்யும் எந்த வணக்கத்தை இறைவன் ஏற்றுக்கொள்வான்? எமது வெளித்தோற்றத்தை வைத்து முடிவு செய்ய முடியுமா? நான் உண்மையிலே நல்லவனா? கெட்டவனா? இந்தக் கேள்விகளுக்கு யாரிடமும் பதிலை எதிர்பார்க்காதீர்கள்! நீங்களே முடிவு செய்யுங்கள்!
உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் தனது ஜும்ஆ உரையில் இப்படிக் கூறினார்கள்: நீங்கள் மறுமையில் விசாரிக்கப்பட முன் நீங்களே உங்களை சுயவிசாரணை செய்து கொள்ளுங்கள்.! நீங்களே உங்கள் நன்மைகள், தீமைகளின் கனத்தை – பாரத்தை நிறுவை செய்யுங் கள்.! (நூல்: முஹாஸபதுன்னப்ஸ்)
எனவே, நாங்கள் செய்கின்ற வணக்க வழிபாடுகள் எங்களுக்குத்தான் நன்கு தெரியும் எங்களை இறைவன் பொருந்திவிட்டானா என நாங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
பின்வரும் மூவரில் நான் யாராக இருக்கிறேன்?
* முஃமின் அல்லாஹ்வை ஏற்று அவனால் தவிர்க்கப்பட்டதை தவிர்ந்து நடப்பவன். அவனது சொல்லும், செயலும் ஒன்றாகத்தான் இருக்கும்.
* முனாபிக்– நயவஞ்சகன் : அல்லாஹ்வை உள்ளபடி அஞ்சி பயந்து நடக்க மாட்டான். அவன் செய்யும் வணக்கம் பெரும் நடிப்பாகும். அவனது சொல்லும், செயலும் ஒன்றுக்கொன்று முரண்படும்.
* (காபிர்) – இறை நிராகரிப்பாளர்: அல்லாஹ்வை முற்று முழுதாக நிராகரிப்பவன். அவன் கட்டளைகளுக்கு மாறு செய்பவன். அவனது சொல்லும் செயலும் மறுப்பில் ஒன்றுபடும்.
நாம் மேல் கூறிய எவராகவும் இருக்க முடியும். இப்போதே முடிவு செய்யுங்கள்! நான் ஒரு நல்ல இறை பக்தியுள்ள வாலிபனாக மாற வேண்டும். எனது பெற்றோருக்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கின்ற நல்ல மனிதனாக வாழ்ந்து மரணிக்க நாம் அனைவரும் முயற்சி செய்வோம்.-Vidivelli
- தொகுப்பு: அஷ்ஷெய்க் ஐய்யூப் அப்துல் வாஜித் (இன்ஆமீ)