பலவீனமான அரசியலை முன்னெடுத்துவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் விடுதலை முன்னணியையும் இணைத்துக் கொண்டு அதன் மூலம் தாம் முற்போக்காளர்கள் என நிரூபிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க செயற்பாட்டாளர் முன்னாள் எம்.பி. லால்காந்த தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியையும் இணைத்துக்கொண்டு கூட்டணி அமைத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது என்ற அதன் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில் தெரிவித்ததாவது;
‘யார் என்ன கூறினாலும் நாங்கள் மக்கள் விடுதலை முன்னணியோ அல்லது ஜனபலவேகய (மக்கள் சக்தி) யோ முஸ்லிம் காங்கிரஸுடன் மாத்திரமல்ல மற்றும் பல கட்சிகளுடன் இணையப் போவில்லை. உடன்படிக்கை செய்து கொள்ளப் போவதுமில்லை. இது உறுதியாகும்.
மேலும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது அணி, மஹிந்த ராஜபக் ஷ, கோத்தபாய ராஜபக் ஷ உட்பட ராஜபக் ஷாக்கள் அல்லது அந்த தரப்பினர், ரவூப் ஹக்கீம் மற்றும் அவரது தரப்பினர் ரிஷாத் பதியுதீன் அல்லது அவரது தரப்பினருடன் இணையப் போவதில்லை.
எங்களது கொள்கைகள் பற்றி மக்கள் கேள்வி எழுப்புவதில்லை. மக்களை நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். மக்களுடன் இணைவற்கு அமைப்பொன்றினை நிறுவியுள்ளோம்.
இதேவேளை, ஏனைய அனைத்துக் கட்சிகள் மக்களை நிராகரித்து வருகையில் அக்கட்சிகள் மக்கள் விடுதலை முன்னணியினை விமர்சித்து தாம் முற்போக்குவாதிகள் என்று நாடகமாடி வருகிறார்கள். அதற்கு முயற்சிக்கிறார்கள். அதன் மூலம் அவர்களது இயலாமை வெளிப்படுகிறது. இவை எமக்கு சவாலாக அமையாது என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்