கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னெடுத்த விசாரணைகளின் அனைத்து அறிக்கைகளும், குறிப்பிட்ட தாக்குதல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றின் உதவிப் பொதுச் செயலாளர் டிகிரி ஜயதிலக ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழு பாராளுமன்றின் பொதுச் செயலாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே அவ் அறிக்கை கையளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். பல்வேறு தரத்தினைச் சேர்ந்தவர்கள் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் வழங்கியுள்ள சாட்சியங்களை ஆராய்வதற்காகவே குறிப்பிட்ட அறிக்கையைப் பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றமைக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தி ஆராய்ந்த பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு தனது அறிக்கையை கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றுக்கு சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிரியினால் அறிக்கை பாராளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டது. 272 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் உள்ளடங்கப்பட்டிருந்தன.
பிரதி சபாநாயகரின் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, ஆஷு மாரசிங்க, நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அங்கம் பெற்றிருந்தனர்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்