இலங்கை வாழ் முஸ்லிம்களில் நூற்றுக்கு இரண்டு வீதமானோர் அடிப்படைவாத கருத்துகளில் தீவிரமாக உள்ளதாகவும் இந்நிலைமை எதிர்காலத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையலாமென்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடிப்படைவாத கருத்துகளுக்கு அடிமையாகியுள்ள இந்த முஸ்லிம்களை அந்த அடிப்படைவாத மனோநிலையிலிருந்தும் விடுவிக்க வேண்டும். அதற்கென பாதுகாப்பு அமைச்சு, சமூகம் மற்றும் உளவியலாளர்கள் ஒன்றிணைந்து வெகுவிரைவில் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பிக்க வேண்டுமெனவும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு சுட்டிக்காட்டியுள்ளது. அடிப்படைவாதிகளை இனங்காணுவதற்கு சமூகத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதுடன் பொலிஸ் மற்றும் இராணுவ உளவுப் பிரிவின் தகவல்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
அடிப்படைவாதிகளை அடிப்படை வாதத்திலிருந்து மீட்டெடுக்கும் வகையிலான முன்னேற்றகரமான வேலைத்திட்டமொன்று இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறான வேலைத்திட்டமொன்றினை எமது நாட்டிலும் நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அக்குழு பரிந்துரை செய்துள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு பயங்கரவாதத்தை ஆரம்பத்திலே அழித்தொழிப்பதற்கான சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையொன்றினை கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கையிலே இவ்விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புதிய பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம் தொடர்பாக தேசிய ரீதியில் மேற்கொள்ளப்படவேண்டிய ஏற்பாடுகள் மற்றும் அடிப்படைவாதத்தை இல்லாமற் செய்வதற்கான செயற்திட்டங்கள் பற்றிய அறிவு மேம்படுத்தப்பட வேண்டும். அவதானம் செலுத்தப்பட வேண்டும். இதற்கென பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் போன்றனவற்றின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்று துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் மலிக் ஜயதிலக செயற்பட்டு வருகிறார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்