ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டுச் சேர்ந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் களம் இறங்கவுள்ளதாக ரவூப் ஹக்கீம் கூறியுள்ள கூற்றில் எந்தவித உண்மையுமில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
‘உண்மைக்குப் புறம்பான தகவல் ஒன்றுக்கான தெளிவுபடுத்தல்’ எனும் தலைப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,
கடந்த 23 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டின் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றியதாகத் தெரிவிக்கும் கருத்துக்கள் பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
அதில் ரவூப் ஹக்கீம் எதிர்வரும் பொதுத் தேர்தலில், மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்தேசியக் கூட்டணி மற்றும் சிவில் அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது தொடர்பாக தமது கட்சி கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக இப்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியில் எத்தகைய உண்மையுமில்லை. இது ரவூப் ஹக்கீமின் தனிப்பட்ட கருத்தாகும். தமிழ் தேசிய கூட்டணியுடனோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடனோ கூட்டிணைந்து போட்டியிடுவது குறித்து எத்தகைய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்பதை மக்கள் விடுதலை முன்னணி கவனத்திற்குக் கொண்டு வருகிறது. அத்துடன் மேற்படி கட்சிகளுடன் தேர்தல்களில் கூட்டணியொன்றை ஏற்படுத்திக் கொள்ளும் நிலைப்பாட்டில் மக்கள் விடுதலை முன்னணி இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்வதுடன் மக்கள் விடுதலை முன்னணி, அதனுடனுள்ள தேசிய மக்கள் சக்தி அமைப்புடன் இணைந்தே எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளது என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli
- ஏ.எல்.எம்.சத்தார்