சங்ககாரவை கொண்டாடும் பாகிஸ்தானியர்கள்

0 813

தனது தனித்­து­வ­மான திற­மை­யாலும் என்­றென்றும் ரசி­கர்­களை ஆத­ரிக்கும் தன்­னி­னிய குணத்­தி­னாலும் உலக வாழ் கிரிக்கெட் ரசி­கர்­களின் மனங்­களை கொள்­ளை­ய­டித்­த­வர்தான் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்­க­கார. தற்­போது அவர் பாகிஸ்தான் ரசி­கர்­களின் மனங்­க­ளி­லும் நாற்­காலி போட்டு அமர்ந்­தி­ருக்­கிறார்.

சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களை மீண்டும் பாகிஸ்­தா­னுக்கு கொண்­டு­வரும் நோக்கில், குமார் சங்­க­கார தலை­மை­யி­லான மெர்­லிபோன் கிரிக்கெட் கழ­க­மா­னது (MCC) பாகிஸ்தான் சென்று அங்கே உள்ள முன்­னணிக் கழ­கங்­க­ளுக்கு எதி­ராக ஒரு ஒருநாள் போட்டி மற்றும் மூன்று ரி20 போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யாடி முடித்­துள்­ளது. இதில் இரண்டு போட்­டி­களில் சங்­கக்­கார தலை­மை­யி­லான எம்.சி.சி. அணியும் இரு போட்­டி­களில் பாகிஸ்­தானின் உள்ளூர் கழ­கங்­களும் வெற்றி பெற்­றுள்­ளன.

பாகிஸ்­தானைப் பொறுத்­த­வரை கிரிக்கட் என்­பது அவர்­க­ளுக்கு உயிர்.

ஆனாலும் தாம் நேசிக்கும் அந்த விளை­யாட்டின் சர்­வ­தேச போட்­டி­களை நேரில் கண்­டு­க­ளிக்கும் வாய்ப்பு அந்த மக்­க­ளுக்­கில்லை. 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கட் அணிக்கு எதி­ராக லாகூரில் வைத்து நடாத்­தப்­பட்ட தீவி­ர­வாத தாக்­கு­தலின் பின்னர் அந்த வாய்ப்பு நழு­விப்­போ­னது. ஆனால் கடந்த வருடம் இலங்கை அணி­யி­னர்தான் மீண்டும் முதன் முத­லாக பாகிஸ்தான் சென்று சர்­வ­தேச போட்­டி­களில் விளை­யா­டி­னார்கள் என்­பது தனிக்­கதை. அதன் பிறகு தனது எம்.சி.சி. அணி வீரர்­களை அழைத்துக் கொண்டு இப்­போது பாகிஸ்தான் சென்­றி­ருக்­கிறார் சங்­கக்­கார.

சங்­க­கார பாகிஸ்­தா­னுக்கு விஜயம் செய்­த­தற்­காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்­சாளர் வக்கார் யூனுஸ் தனது டுவிட்­டரில் இப்­படிக் குறிப்­பி­டு­கிறார்

‘‘உண்­மை­யான நட்பு சிக்­க­லான கால கட்­டங்­க­ளி­லேயே உண­ரப்­ப­டு­கின்­றது. நீங்கள் கிரிக்­கெட்டில் மாத்­தி­ர­மல்ல மனி­த­நே­யத்­திலும் சம்­பி­யன்தான் என்­பதை காட்­டி­யுள்­ளீர்கள். இந்த நெருக்­க­டி­யான சந்­தர்ப்­பத்­திலும் பாகிஸ்­தா­னுக்கு வந்­த­தற்கு நன்றி. எங்கள் இத­யங்­களில் உங்­க­ளுக்கு சிறந்த இடம் உள்­ளது’ என அவர் ட்வீட் செய்­துள்ளார்.

எம்.சி.சி. தலை­வ­ராக சங்கா

மெர்­லிபோன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) 48 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு பாகிஸ்­தா­னுக்குச் சென்­றி­ருக்­கி­றது.

உலகின் மிகப்­பெ­ரிய கிரிக்கெட் கழ­க­மாக அறி­யப்­படும் எம்.சி.சி.யின் தலை­வ­ராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்­க­கார நிய­மிக்­கப்­பட்­ட­தாக ஊட­கங்­களில் தகவல் வெளி­யான நாள் முதல் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் சங்­கா­வுக்கு வாழ்த்­துக்­களும் பாராட்­டுக்­களும் குவிந்த வண்­ணமே இருந்­தன. அத்­துடன் சங்கா பற்­றிய விட­யங்கள் சமூ­க­வ­லத்­த­ளங்­களில் அதிகம் பேசப்­பட்­டன.

இங்­கி­லாந்து அல்­லாத ஒரு வெளி­நாட்டு நபர் எம்.சி.சி கழ­கத்­துக்கு தலைமை தாங்­கு­வது இதுவே முதல் தடவை என்­பது சங்­கக்­கா­ரவின் தனி அடை­யாளம் மாத்­தி­ர­மின்றி இலங்­கைக்கு மாத்­தி­ரமே கிடைத்­துள்ள கௌர­வ­மு­மாகும்.

இதற்கு முன்னர் எம்.சி.சி தலைவராக டெட் டெக்ஸ்டர், டெரக் அண்­டர்வுட், மைக் பியர்லே, காலின் கவர்டி, மைக் கேர்டின் மற்றும் குப்பி ஆலின் போன்ற பலர் இருந்­துள்­ளனர். 233 வருட எம்.சி.சி வர­லாற்றில் முதல் முறை­யாக நம் நாட்டு குமார் சங்­க­கார தலை­மைப்­ப­த­வியை வகிப்­பது நமக்­கெல்லாம் பெருமை தரு­வ­தாகும்.

41 வய­தான சங்கா கடந்த 7 வரு­டங்­க­ளாக எம்.சி.சி.யின் நிரந்­தர உறுப்­பி­ன­ராக உள்ளார். இது தனக்குக் கிடைத்த பெரிய கௌரவம் என அவர் பல­முறை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார். எம்.சி.சி.யின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­ப­டு­வது மிகப் பெரிய மரி­யாதை என கடந்த டிசம்­பரில் அவர் கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

‘என்னைப் பொறுத்­த­வ­ரையில் எம்.சி.சி உலகின் மிகப்­பெ­ரிய கிரிக்கெட் கழ­க­மாகும். அதன் உல­க­ளா­விய அணுகல் மற்றும் ஆடு­க­ளத்­திற்கு உள்­ளேயும் வெளி­யேயும் கிரிக்­கெட்­டுக்­கான தொடர்ச்­சி­யான பலத்தை வழங்­கு­கி­றது” என சங்கா தெரி­வித்­தி­ருந்தார்.

‘‘எங்­க­ளது எல்­லை­க­ளையும் சர்­வ­தேச நற்­பெ­ய­ரையும் விரி­வு­ப­டுத்த எம்.சி.சி கவனம் செலுத்­து­கி­றது. குமார் சங்­க­கார எம்.சி.சி.யின் தலைமைப் பத­வியை ஏற்­றுக்­கொண்­டதை எண்ணி பெருமை அடை­கின்றேன்‘‘ என எம்.சி.சி நிர்­வாகி ரொபர்ட் தெரி­வித்­தி­ருந்தார்.

அவர் களத்திலும் களத்­துக்கு வெளி­யேயும் சிறந்த பங்களிப்பை வழங்­குவார். அவர் இந்­தப்­பதவிக்கு மிகவும் பொருத்­த­மா­னவர் என அவர் மேலும் தெரி­வித்­தி­ருந்தார்.

10 வரு­டங்­களின் பின்னர் பாகிஸ்­தானில் சங்கா

கடந்த ஆகஸ்ட் மாதம் மெர்­லிபோன் கிரிக்கெட் கழ­கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இலங்கை அணியின் முன்னாள் தலை­வரும், உலகின் தலை­சி­றந்த துடுப்­பாட்ட வீர­ரு­மான குமார் சங்­கக்­கார, தனது கழ­கத்­தினை பாகிஸ்தான் அழைத்துச் சென்­றுள்ளார். குறிப்­பாக சங்­கக்­கார 10 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் பாகிஸ்தான் பய­ணிக்கும் முதல் சந்­தர்ப்­ப­மாக இது அமைந்­துள்­ளது. இது குறித்து சங்­க­கார குறிப்­பி­டு­கையில், ” கடந்த காலத்தில் நடந்­த­வற்றை நான் நினை­வு­ப­டுத்தத் தேவை­யில்லை. அந்­நி­கழ்­வுகள் மறக்க முடி­யா­தவை. மீண்டும் தற்­ச­மயம் லாஹூர் வந்­த­தனை நினைக்­கையில் நான் அதிஷ்­ட­சா­லி­யாக உணர்­கின்றேன். கிரிக்கெட் எல்­லோ­ருக்கும் சொந்­த­மா­னது. எனினும், கிரிக்கெட் வீரர்­களை நோக்கும் போது அவர்­க­ளுக்கு அவர்­களின் திற­மையை காட்­டு­வ­தற்­கான ஒரு களமும், அதற்­கான ஆத­ரவும் அவ­சி­ய­மாக உள்­ளது. எனவே, இளம் வீரர்கள் முன்­னு­தா­ர­ண­மாகக் கொள்ள, சிறந்த அடித்­தளம் ஒன்­றினை நீங்கள் உரு­வாக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. இந்த நாட்டில் மிகவும் நீண்ட நாட்­க­ளுக்கு கிரிக்கெட் இல்லை எனில், கிரிக்­கெட்­டிற்­கான பசி இங்கே இருந்து போய்­வி­டவும் கூடும். ஆனால், இந்த நாட்டில் அதிக கிரிக்கெட் போட்­டிகள் விளை­யா­டப்­படும் போது அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசி­கர்­க­ளுக்கும் சிறு­வர்­க­ளுக்கும் தொட்­டு­ண­ரக்­கூ­டிய ஒரு சிறு இடை­வெ­ளி­யிலே கண்­டு­க­ளிக்க முடி­யு­மாக இருக்கும்.” என்றார் .

தொடர்ந்தும் சங்­க­கார கருத்து வெளி­யி­டு­கையில், “ஒரு கருத்­தினை வார்த்­தை­களில் சொல்லிக் காட்­டு­வதை விட அதனை நாம் மைதா­னத்தில் விளை­யாடி அதனை செயலில் காட்­டு­வது சிறந்­தது.பல சர்­வ­தேச தரப்­புக்கள் இங்கே சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்ளும் போது நாம் சொல்ல வரும் செய்­தி­யா­னது இன்னும் உறு­தி­யாக மாறும் என்­ப­தோடு, யாராலும் அதனைப் புறக்­க­ணிக்க முடி­யா­த­வாறும் அமையும். அது இந்த விளை­யாட்­டுக்கு மிகவும் நல்ல விட­ய­மாகும். இந்த நாட்­டிற்கும் அது நல்ல விடயம். அது சர்­வ­தேசப் போட்­டி­க­ளுக்கும் பொருந்தும். பாகிஸ்தான் ஒரு சிறந்த நாடாக இருக்க அவர்­க­ளுக்கு சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டிகள் எந்­த­ள­விற்கு முக்­கி­யத்­துவம் என்­ப­தனை நாங்கள் கவ­னிக்­காமல் விட்­டு­விடக் கூடாது” என சங்­ககார குறிப்­பிட்­டி­ருந்தார்.

சங்­க­கார பாகிஸ்தான் சென்று ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்து கிரிக்கட் மாத்­திரம் விளை­யா­ட­வில்லை. மாறாக அவர் நாட்டின் பல இடங்­களைச் சுற்றிப் பார்த்தார். பல நிகழ்­வு­களில் பங்­கேற்றார். பாகிஸ்­தானின் தேசிய ஆடை அணிந்து கிரிக்கெட் விளை­யா­டினார். கோல்ப் விளை­யாட்­டிலும் பங்­கேற்றார். பாகிஸ்­தா­னி­லுள்ள பிரித்­தா­னிய தூத­ர­கத்தில் இடம்­பெற்ற விருந்­து­ப­சா­ரத்­திலும் பாகிஸ்தான் தேசிய ஆடை அணிந்து பங்­கேற்று கிரிக்கட் விளை­யா­டிய புகைப்­ப­டங்கள் சமூக வலைத்­த­ளங்­களில் அதிகம் பகி­ரப்­பட்­டன. மைதா­னத்தில் நின்­றி­ருந்த சங்க­கா­ர­வுடன் செல்பி எடுப்­ப­தற்கு பாகிஸ்தான் ரசி­கர்கள் காட்­டிய ஆர்வம் அவரை அந்­நாட்டு மக்கள் எந்­த­ளவு தூரம் விரும்­பு­கி­றார்கள் என்­ப­தற்கு சான்­றாகும்.

மற்­றொரு நிகழ்வில் பங்­கேற்ற சங்­க­கார ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கையில்,

“பாகிஸ்தான் பாது­காப்­பற்ற தீவி­ர­வாத நாடு எனும் கருத்து தற்­ச­மயம் படிப் படி­யாக மாற்றம் கண்டு வரு­கின்­றது. பாகிஸ்­தா­னுக்கு வந்து கிரிக்கெட் விளை­யா­டு­வது, ஹோட்­டலில் தங்­கு­வது என்று நிறுத்தி விடாமல் சுற்­றுலாப் பய­ணி­யாகச் சென்று பாகிஸ்­தானின் இயற்கை வனப்­பினை ரசிப்­பது மிகவும் சுவா­ரஷ்­ய­மாக இருக்­கின்­றது” என்றார்.

இல­குவில் மறக்க முடி­யாத லாகூர் தாக்­குதல்

2009 ஆம் ஆண்டில் லாகூர் கடாபி ஸ்டேடியம் அருகே இலங்கை வீரர்கள் 12 பேரை ஏற்­றிச்­சென்ற பஸ் வண்டி தீவி­ர­வா­தி­களின் தாக்­கு­த­லுக்­குள்­ளா­னது. இடம்­பெற்ற துப்­பாக்­கிச்­சூட்டில் ஆறு இலங்கை வீரர்கள் காய­ம­டைந்­தார்கள். மேலும் 6 பொலிஸார் உட்­பட 8 பாகிஸ்­தா­னி­யர்கள் கொல்­லப்­பட்­டார்கள்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி­யு­ட­னான இரண்­டா­வது டெஸ்ட்டின் மூன்­றா­வது நாள் போட்­டிக்­காகச் சென்று கொண்­டி­ருக்­கும்­போதே இலங்கை வீரர்கள் இந்த கொடூர அனு­ப­வத்தைச் சந்­தித்­தனர். குறித்த பஸ் வண்­டியில் பய­ணித்த 12 வீரர்­களுள் குமார் சங்­க­கா­ரவும் ஒருவர் என்­பது இங்கு குறிப்­பிட்டுக் கூறப்­பட வேண்­டிய அம்­ச­மாகும்.

இந்த சம்­ப­வத்தைத் தொடர்ந்து பாகிஸ்­தானில் கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்ளும் அணிகளின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவி வந்தது. பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தன. ஆனால் தாக்குதல் சம்பவத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட இலங்கை அணிதான் பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்கியது.

குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட சங்ககாரதான் மீண்டும் அங்கு சென்று புன்னகையுடன் கிரிக்கெட் விளையாடுகிறார் என்பதை நினைக்கையில் புல்லரிக்கிறது. இது பாகிஸ்தான் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை –பாகிஸ்தான் உறவிலும் இது ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளது எனலாம். பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு எத்தனையோ கிரிக்கட் வீரர்கள் அந்நாட்டில் இருந்தாலும் இன்று அங்கு ஹீரோ சங்காதான் என்பதில் நமக்கும் பெருமைதான்.-Vidivelli

  • எம்.ஏ.எம்.அஹ்ஸன்

 

Leave A Reply

Your email address will not be published.