உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதையடுத்து நாட்டில் அமுலுக்கு வந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்ட பின்பு நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவினால் முப்படையினருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு தொடர்பான அதிகாரங்கள் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கடற்பரப்பு என்பவற்றின் பாதுகாப்பு அதிகாரங்கள் முப்படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினருக்கு அனைத்து மாவட்டங்களிலும் சமாதானத்தை நிறுவும் பணி எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களையடுத்து அமுலுக்கு வந்த அவசரகாலசட்டம் நீக்கப்பட்டதன் பின்பு ஒவ்வோர் மாதமும் 21 ஆம் திகதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்