உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்: சி.ஐ.டி. விசாரணைகளை துரிதப்படுத்த செயலணி
தேசிய உளவுத்துறை பிரதானியின் கீழ் கொண்டுவரத் திட்டம்; 6 பேர் உள்ளடக்கம்; வாராந்தம் பாதுகாப்பு செயலருக்கும் அறிக்கை
4/21 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் குறித்து சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இடம்பெறும் விசாரணைகளின் முன்னேற்றத்தை ஆராயவும் அவ்விசாரணைகளை துரிதப்படுத்தவும் விஷேட செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்கள் தொடர்பிலான உண்மைத் தகவல்களை அடையாளம் காணல், உண்மை தகவல்களை சேகரித்தல், புதிய தகவல்கள், சாட்சிகளை சேகரிப்பதன் ஊடாக தாக்குதலுடன் தொடர்புடைய அடிப்படைவாதிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதை நோக்காகக் கொண்டு இந்த செயலணி உருவாக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலர் மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன கூறினார்.
தேசிய உளவுத்துறை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் 6 பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர். மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸுக்கு மேலதிகமாக இக்குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய ஐந்து பேரும் உளவுத்துறைகளில் பிரதான அதிகாரிகளாகத் திகழ்பவர்களென பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இந்த விஷேட செயலணி, சி.ஐ.டி.யின் கீழ் முன்னெடுக்கப்படும் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் நிலைமையை ஒவ்வொரு வாரமும் பாதுகாப்பு செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு அறிவிக்குமெனவும், சி.ஐ.டி.க்குத் தேவையான உளவுத்துறை ஒத்துழைப்புகளையும் அந்தக்குழு நேரடியாகவே வழங்குமெனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
கொழும்பு மற்றும் நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகின. இந்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ வழங்கிய ஆலோசனைக்கமைய இந்த விஷேட செயலணி உருவாக்கப்பட்டது’ என இந்த செயலணி குறித்து பாதுகாப்பு செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று விஷேட அறிக்கையொன்றைப் பாதுகாப்பு அமைச்சு ஊடாக வெளியிட்டிருந்த நிலையில் அந்த அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
‘கடந்த ஆட்சியின்போது இதுகுறித்த விசாரணைகள், செயற்றிறனாக இடம்பெறவில்லை. இந்த விடயத்தில் நியாயமான விசாரணைகளை முன்னெடுக்க நாம் தவறினால், உயிரிழந்த, வாழ்நநாள் பூராகவும் அந்த தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் 500 இற்கும் அதிகமான மக்களுக்கு நியாயம் கிடைக்காது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் அனைத்து உளவுப் பிரிவுகளினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு, குறித்த தாக்குதல்கள் தொடர்பிலான உண்மைத் தகவல்களை அடையாளம் காணல், உண்மைத் தகவல்களை சேகரித்தல், புதிய தகவல்கள், சாட்சிகளை சேகரிப்பதன் ஊடாக தாக்குதலுடன் தொடர்புடைய அடிப்படைவாதிகளை சட்டத்தின்முன் நிறுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கொழும்பு மற்றும் நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகின. கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவாபிட்டி – புனித செபஸ்தியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகியன தாக்குதலுக்கிலக்கான கிறிஸ்தவ தேவாலயங்களாகும்.
இதனைவிட கொழும்பு காலிமுகத் திடலுக்கு சமீபமாகவுள்ள ஷங்கிரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மேற்படி ஆறு தாக்குதல்களும் இடம்பெற்றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையிலான 45 நிமிட இடைவெளியிலேயே ஆகும்.
இந்நிலையில் அன்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ‘ நியூ ட்ரொபிகல் இன்’ எனும் சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்டலில் குண்டுவெடிப்பு சம்பவம் பதிவானது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணியளவில், குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளை இலக்கு வைத்து தெமட்டகொட மஹவில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடாத்தப்பட்டது. அதன்படி இந்த தக்குதல்களால் 30 வெளிநாட்டவர்கள் உட்பட 278 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பில் சி.ஐ.டியின் 12 சிறப்பு குழுக்களும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவும், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
அதன்படி இம்மூன்று பொலிஸ் பிரிவுகளாலும் கைது செய்யப்பட்ட இவ்விவகாரத்தின் மொத்த சந்தேக நபர்களின் எண்ணிக்கை 216 ஆகும். அவர்களில் 70 பேர் தற்போது பிணையிலுள்ள நிலையில், 91 பேரிடம் தடுப்புக் காவலில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. ஏனைய 55 பேரும் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்ப்ட்ட 216 பேரில் 109 பேரை சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும், 78 பேரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரும், 39 பேரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும் கைது செய்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறான பின்னணியில், குறித்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல் விவகாரம் தொடர்பில் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடரும் நிலையில், அவ்விசாரணைகளில் கத்தோலிக்க மக்களுக்குத் திருப்தியில்லையெனக் கடந்த வாரம் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்திருந்தார். அத்துடன், ‘சி.ஐ.டி. இது குறித்து விசாரிக்கின்றதா என தெரியாது. இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள், நிதி உதவி அளித்தவர்கள், அவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தவர்கள், குறித்து உண்மையை நாம் அறிய வேண்டும்’ என கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே, எதிர்கால தேசிய பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பை கருத்திற்கொண்டும், தற்கொலை தாக்குதல்கள் குறித்த பின்னணிகளை வெளிப்படுத்தவும் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு உதவ இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்