வாரந்தோறும் நிகழ்த்தப்படும் குத்பாக்கள் சமூகத்திற்கு தகவல்களை கடத்தக்கூடிய ஒரு சமூக ஊடகமாகத் திகழ்கின்றன.
புரட்சிகரமான சமூக மாற்றத்தை உண்டுபண்ணும் கேந்திர நிலையங்களாகவே மிம்பர் மேடைகள் அன்று தொடக்கம் இன்று வரை காணப்படுகின்றன.
எனவே, அவற்றில் ஆற்றப்படும் உரைகள் வினைத்திறன் மிக்கதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் நெறிப்படுத்தப்பட வேண்டுமென்று பல கட்டுரைத் தலைப்புக்களில் அலசி ஆராயப்பட்டுள்ளன.
என்றாலும், இவ்வனைத்திலும் மிக முக்கிய புள்ளியாகத் திகழ்வது நேர முகாமைத்துவமாகும். ஒரு பேச்சாளரின் சாணக்கியத்தையும் அவரின் ஆளுமையையும் வெளிக்காட்டுவதே அவர் கையாளும் நேர முகாமைத்துவம் என்றால் அது மிகையாகாது.
இன்று சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினராலும் முன்வைக்கப்படக்கூடிய, குத்பா உரைகள் பற்றிய விமர்சனங்களில் நேர முகாமைத்துவம் பேணப்படாமை இன்றியமையாததாகும்.
ஒரு பேச்சாளர் மிகத் திறமையாகவும் ஆக்கபூர்வமாகவும் தனது உரையை முன்வைத்து, குறித்த நேரத்தை விடவும் அவரது உரை நீண்டால் அவரது அனைத்து முயற்சிகளும் ஆற்றில் கரைத்த புளிபோல் மாறிவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
நேர முகாமைத்துவம் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்
நேரம் உண்மையில் பெறுமதிமிக்கது, விலைமதிக்க முடியாதது. பத்தரை பசும் பொன்கூட மனிதனின் ஆயுளில் ஒரு வினாடிக்கு ஈடாகாது. காலம், நேரம் அவ்வளவு பெறுமதிவாய்ந்தவை, உச்ச பயனடையும் வகையில் நன்கு திட்டமிடப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டியவை, வீணடிக்கத்தகாதவை என்பதையெல்லாம் உணர்த்தும் பொருட்டு காலம், இரவு, பகல் விடியற்காலை, காலை, முற்பகல் என்பவற்றின் மீது அல்லாஹுத் தஆலா சத்தியமிடுகிறான்.
“காலத்தின் மீது சத்தியமாக” (103:01)
“இரவின் மீது சத்தியமாக அது மூடிக்கொள்ளும் போது. பகலின் மீது சத்தியமாக அது வெளியாகிய போது”. (92: 01– 02),
“விடியற்காலையின் மீது சத்தியமாக” (89: 01),
“காலையின் மீது சத்தியமாக அது தெளிவாகிய போது” (81:18), “முற்பகல் மீது சத்தியமாக” (93:01) என புனித அல்குர்ஆனில் ஆங்காங்கே காணலாம்.
காலத்தை சரிவர முகாமைத்துவம் செய்வது தனிமனிதப் பொறுப்பாகும். அதுபற்றி மறுமையில் விசாரணை உண்டு. இது இலகுவில் பதில் சொல்லித் தப்பிக்க முடியுமான விடயமன்று. ஆயுட்காலத்தை கழித்த முறைபற்றி அல்லாஹ்விடம் சரியாகக் கணக்குக் காட்ட வேண்டும். பின்வரும் நாயக வாக்கியம் இதனைத் தெளிவுபடுத்துகின்றது.
“நான்கு விடயங்கள் பற்றி அவன் விசாரிக்கப்படும் வரை ஓர் அடியானின் பாதங்கள் மறுமை நாளில் அசையமாட்டா. அவனின் வாழ்நாள் பற்றி அதனை அவன் எதில் கழித்தான், அவனின் வாலிபம் பற்றி அதனை அவன் எதில் கழித்தான், அவனின் செல்வம் பற்றி அதனை அவன் எங்கிருந்து சம்பாதித்தான், மேலும் அதனை அவன் எதில் செலவழித்தான், அவனின் அறிவு பற்றி அதிலே அவன் என்ன செய்தான்.” (அறிவிப்பவர்: முஆத் இப்னு ஜபல் (ரழி), நூல்: அல்- முஃஜம் அல்-கபீர்)
மனித ஆயுள் மிக மிகக் குறைவானது. இக்குறுகிய வாழ்நாளுக்குள்தான் மனிதன் மறுமைக்காக சம்பாதிக்க வேண்டும், சேமிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் இடையில் இவ்வுலகத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். தான் மட்டுமா? பெற்றார், மனைவி, மக்கள், உற்றத்தார், சுற்றத்தார் எனப் பலரும் உளர். இவர்களையும் தன்னுடன் சேர்த்துக் கவனித்தாக வேண்டும். தனிப்பட்ட வாழ்வில், குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில், பொருளாதார வாழ்வில், தொழில் வாழ்வில் பலதும் பத்தும்.
எனவேதான், நேரத்தை நாம் சரியாகத் திட்டமிட்டு நம்மை நாம் இயக்க வேண்டியுள்ளது. காலமும் நேரமும் எம்மனிதருக்காகவும் காத்திருப்பதில்லை என்பது ஆங்கில முதுமொழியொன்றின் பொருளாகும். நாம் நேரத்தைப் பயன்படுத்தினோமோ, இல்லையோ கழிகின்ற ஒவ்வொரு நொடிப் பொழுதும் நிச்சயமாக திரும்பிவரப் போவதில்லை, அதனை எவ்விலை கொடுத்தும் பிரதியீடு செய்து கொள்ள முடியாது. ஓர் அரேபிய கவிதையின் தமிழாக்கம் இது:
“உமது ஆயுள் எண்ணப்படக்கூடிய சில மூச்சுகள். உம்மிலிருந்து ஒரு மூச்சு சென்ற போதெல்லாம் ஆயுளில் ஒரு பகுதி உமக்கு குறைந்து விட்டது.”
விடியற்காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும்வரை நமது வேலைகளை திட்டமிட்டுக் கொண்டு தொழிற்பட வேண்டும். நேரத்துக்கு ஒரு வேலை, வேலைக்கு ஒரு நேரம் என்ற வகையில் நம்மை நாம் பயிற்றுவிக்க வேண்டும். நாளையை இன்றே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
அவசியமானது எது, அதி அவசியமானது எது, அவசரமானது எது, அதி அவசரமானது எது, முக்கியமானது எது, அதி முக்கியமானது எது, குடும்பம் சார்ந்தது எது, தொழில் சார்ந்தது எது, சமூகம் சார்ந்தது எது என்றெல்லாம் வகைப்படுத்தி அவைகளுக்குத் தேவையானளவு நேரத்தைத் திட்டமிட்டு ஒதுக்க வேண்டும்.
பின்னர் அதற்கேற்ப காரியமாற்ற வேண்டும். இதுவே உண்மையான நேர முகாமைத்துவம்.
நேர முகாமைத்துவத்தில் இஸ்லாம் வெகு கண்டிப்பாக உள்ளது. நேர முகாமைத்துவத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை விட வேறொருவர் எமக்கு முன்மாதிரியாகத் தேவையில்லை எனத் துணிந்து கூறுமளவுக்கு அவர்கள் சொல்லாலும் செயலாலும் நேர முகாமைத்துவம் செய்து காட்டியுள்ளார்கள்.
அன்னாரின் இரவு, பகல் இரண்டுமே திட்டமிடப்பட்ட வகையில் கழிந்தன.
வெட்டி வேலைகள், விடயங்களுக்கு காலத்தை, நேரத்தை ஒதுக்கலாகாது. இவ்வகை விடயங்கள், வேலைகள், ஒன்றுகூடல்கள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகள் சமகாலத்தில் ஏராளமாக, தாராளமாக உள்ளன. தெரிந்தவர்கள், நண்பர்கள், சகபாடிகள், உறவினர்கள் அழைக்கின்றனர் என நியாயம் சொல்லிக் கொண்டு வீணர்களுடன் சேர்ந்து தானும் தனது பொன்னான நேரத்தை மண்ணாக்கலாகாது.
செய்ய வேண்டியவை, ஆற்ற வேண்டியவை நிறைய இருக்கத்தக்க அவற்றையெல்லாம் ஒருபக்கம் வைத்து விட்டு ஏதேதோ உருப்படியற்ற காரியங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்தபின் இதற்கு நேரமில்லை, இதற்கு நேரமில்லை என முனங்கியவண்ணம், கூக்குரலிட்ட வண்ணம் கட்டாயம் செய்ய வேண்டிய பணிகளைத் தள்ளிப்போடுதல், செய்யாது விடல், அரைமனதுடன் செய்தல், செய்நேர்த்தி இல்லாமல் செய்தல் அறிவுபூர்வமானதல்ல.
நேரம் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் அளித்துள்ள ஓர் அமானிதம். அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவரவர் கையிலுள்ளது. இதன் மூலமே நேர அமானிதம் பேணப்படுகின்றது. நேர முகாமைத்துவம் செய்யாதவர் மொத்தத்தில் தன்னைத் தானே ஒழுங்குபடுத்தாதவர். எனவே, குத்பா உரைகளிலும் கதீப்கள் நேர முகாமைத்துவம் பேண வேண்டும்.
குத்பா உரைகளில் நேர முகாமைத்துவம்
குத்பா உரைகள் சுருக்கமாக அமைதல் அவசியமாகும். மாநாடுகள் நடத்தும்போது உரைகளைக் கேட்பதற்கென மக்கள் நேரம் ஒதுக்கி வருகின்றார்கள். ஆனால், ஜும்ஆவுக்கு கடமை என்பதற்காக மக்கள் வருகின்றனர். அது நீண்ட உரைகளைக் கேட்கும் நேரமல்ல.
அரசு ஊழியர்கள் தமக்குக் கிடைக்கும் பகலுணவு நேரத்தில் தொழுகை முடிந்து, உண்டுவிட்டு கடமைக்குச் செல்லும் நிர்ப்பந்தத்தில் இருப்பர். பயணிகள் தமது பயணத்தை இடை நிறுத்திவிட்டு வந்திருப்பர். உணவகங்களை (ஹோட்டல்களை) மூடிவிட்டு வந்தவர்கள் தொழுகை முடிந்து கடையைத் திறந்து பகலுணவு வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பர். குத்பாவுக்கு நேரத்துடன் வந்த வயோதிபர்கள், நோயாளிகள் இயற்கைத் தேவைகளை அடக்கிக் கொண்டு ‘எப்படா குத்பா முடியும்’ என்ற ஏக்கத்தில் இருப்பர்.
இந்த நிர்க்கதி நிலையில் சில கதீப்கள் நேரம் அறியாமல் ஒரு மணித்தியாலம், ஒன்னேகால் மணித்தியாலம் என்று குத்பாவை நீட்டிக்கொண்டு செல்வர். அதுவும் குத்பாவில் விஷயமும் இருக்காது. அந்தக் குத்பாவுக்கு தலைப்பும் இடமுடியாது. நிறையவே ஒத்த கருத்துச் சொற்களை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பர். நேரம் போதாது என்ற நிலை இருந்தாலும் குர்ஆன் வசனங்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்களையும் கூட இராகமிட்டு நீட்டி நிதானித்து ஓதிக் கொண்டிருப்பார்கள்.
இதுபோன்ற செயற்பாடுகளால் மக்கள் குத்பா மீது வெறுப்புக் கொள்கின்றனர். சிலர் கடைசி நேரத்தில் கலந்து கொள்வோம் என்ற தோரணையில் செயற்படுகின்றனர். இது மக்களை சலிப்படையச் செய்துள்ளது. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
“அம்மார் (ரழி) எமக்கு குத்பா உரை நிகழ்த்தினார். அது சுருக்கமாகவும் அழகாகவும் அமைந்தது. அவர் குத்பா முடிந்து இறங்கியபின் இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாமே என்று கேட்ட போது, ‘தொழுகை நீளமாகவும் குத்பா சுருக்கமாகவும் இருப்பது ஒரு மனிதனின் மார்க்க விளக்கத்தின் அடையாளம்’ என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். எனவே, தொழுகையை நீட்டுங்கள், குத்பாவை சுருக்குங்கள். ஏனெனில், பேச்சில் சூனியம் உண்டு” என அம்மார்(ரழி)கூறினார்.
அறிவிப்பவர்: வாஸிர் இப்னு ஹையான் (ரழி), நூல்: முஸ்லிம்: 869-47, தாரமீ: 1597, அஹ்மத்:18317
எனவே, குத்பா சுருக்கமாக இருக்க வேண்டும். சுருக்கம் என்றால் எந்தளவென்று சரியாக மட்டிட முடியாது.
“நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரையை நீட்டமாட்டார்கள். அது சுருக்கமான சில வார்த்தைகளாகவே அமைந்திருக்கும்” என ஜாபிர் இப்னு ஸமூரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: அபூதாவூத் 1107, அஹ்மத்: 20846)
இந்த அறிவிப்பு ஸஹீஹானது என அல்பானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
“நபி (ஸல்) அவர்கள் வாய் வழியாகவே நான் சூறா கஃபை மனனமிட்டேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதன் மூலம் அவர்கள் குத்பா நிகழ்த்துவார்கள்” என பின்த் ஹாரிதா (ரழி) கூறுகின்றார். (நூல்: முஸ்லிம்: 873-51, அபூதாவூத்: 1100)
சூறா கஃப் அல்குர்ஆனின் 50ஆவது அத்தியாயமாகும். இது 60 வசனங்களைக் கொண்டது. இந்த சூறாவை திருத்தமாக ஓதுவதென்றால் சுமார் 15 நிமிடங்கள் எடுக்கலாம். அதே வேளை குத்பதுல் ஹாஜா ஓதுவதற்கு 5 நிமிடம் எடுக்கலாம். இந்த அறிவிப்பில் சூறா கஃபை ஓதுவார்கள் என்று கூறாமல் கஃப் மூலம் குத்பா நிகழ்த்துவார்கள் என்று கூறப்படுவதன் மூலம் அதை வைத்து வேறு தகவல்களும் கூறியிருக்கலாம்.
இன்றைய நடைமுறைக்கு அமைவாக சாதாரணமாக 25–30 நிமிடங்களுக்குள் குத்பா அமைவது நல்லதாகும்.
குத்பா உரைகள் தொடர்பில் பின்வரும் அவதானங்களும் உள்ளன.
· இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் குத்பாக்கள் இடம்பெறாமை. கதீப்களின் மொழிப் பிரச்சினை இதற்கு முக்கிய காரணமாகும். வாசிப்புப் பழக்கத்திலுள்ள பலவீனம், நவீன மொழி பற்றிய குறைந்த பரிச்சயம் இதற்கு சில காரணங்களாக இருக்கலாம்.
· கால, மாற்றங்களுக்கேற்ப தலைப்புக்கள் இல்லாமை. நாட்டு நிலைமைகள், உலகில் நடக்கும் மாற்றங்கள், இதற்குப் பின்னால் காணப்படும் சர்வதேசிய சக்திகள் பற்றிய போதிய தெளிவின்மை இதற்கு காரணங்களாக இருக்கலாம். இதனால் எடுத்த அனைத்திற்கும் இது யூத, நஸாராக்களின் திட்டம் என்று சொல்லக்கூடிய வார்த்தைகளை அதிகம் செவிமடுக்கின்றோம்.
· ஒரு தலைப்பில் குத்பாவை நிகழ்த்தாமல் சிதறிய அமைப்பில் குத்பாக்கள் உள்ளமை. முடிவாக கதீப் சொல்ல வரும் கருத்தை கிரகிக்க முடியாதுள்ளமை.
· அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதில் காட்டும் ஆர்வம், சுபசோபனம் கூறுவதில் இல்லாமை. எச்சரிக்கை செய்வது, தண்டனைகள் பற்றி விரிவாகப் பேசுவது சில கதீப்களின் பண்பாக மாறியுள்ளது.
· இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவது சிரமமானது என்ற மனப்பதிவை கொடுக்கும் வார்த்தைகளே அதிகம் பிரயோகிக்கப்படுகின்றன.
அதன் இலகுத்தன்மையுடன் சேர்த்து இஸ்லாத்தை முன்வைப்பது அரிதாகிவிட்டது. இதனால்தான் மிகத் தெளிவாக ஹராமில்லாத பல விடயங்களையும் ஹராம் என்று கூறும் கதீப்களை மிம்பர்களில் காண்கின்றோம்.
· அதிகமான குத்பாக்கள் கேட்க முடியாதளவு உரத்த குரலில் நிகழ்த்தப்படுகின்றன. இது எமது மரபாகவும் மாறியுள்ளது. ஆக்ரோஷமில்லாமல், அமைதியான உள்ளத்துடன் உறவாடும் குத்பாக்களை கேட்பது மிகவும் குறைவாகவே உள்ளது.
· சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள், முதன்மை கொடுக்கப் பட வேண்டிய அம்சங்கள், அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய அம்சங்களை மையப்படுத்திய குத்பாக்கள் மிகவும் குறைவு. கருத்து வேறுபாடுள்ள, கிளை அம்சங் களில் தான் அதிகமான குத்பாக்கள் இடம்பெறுகின்றன.
இதனால் குத்பாக்களின் உயிரோட்டம், பயன் குறைவடைந்து செல்கின்றது. சமூகத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டிய குத்பாக்கள், சிலபோது சமூகத்துக்கு மத்தியில் பிளவையும், பிடிவாதத்தையும் அதிகரிக்கச்செய்துள்ளது.
எனவே, மேற்கூறப்பட்டவற்றையும் கருத்திற்கொண்டு குத்பா உரைகளை நேர முகாமைத்துவத்துடனும், ஆக்கபூர்வமானதாகவும் முன்வைக்கும் போது ஊக்கம் தரவேண்டிய குத்பாக்கள் தூக்கம் தரமாட்டாது.-Vidivelli
- அரபாத் ஸைபுல்லாஹ் (ஹக்கானி), திஹாரிய.