மாற்றத்தை வேண்டி நிற்கும் ஹஜ் பிரயாண ஏற்பாடுகள்

0 671

தியா­கத்தின் உச்­சத்தை எடுத்­துக்­காட்டும் புனித ஹஜ் கடமை இன்று ஒரு களி­யாட்­டத்தை நோக்­கிய சுற்­று­லா­வாக இலங்­கையில் மாற்றம் பெற்­றுள்­ளது. இவ்­வாறு மாற்றம் பெறு­வ­தற்­கான கார­ணங்­களை ஓர­ள­வா­வது விளக்க இக்­கட்­டு­ரையின் மூலம் முயற்­சிக்­கின்றேன். எமக்குத் தெரிந்த வகையில் சுமார் முப்­பது வரு­டங்­க­ளுக்கு முன் ஹஜ்­ஜுக்கு ஹஜ்­ஜா­ஜி­களை அழைத்துச் செல்ல ஒருசில பிர­யாண முக­வர்கள் ஏற்­பா­டு­களை செய்து வந்­தார்கள். ஆனால் அவர்கள் அனை­வரும், ஒரு புனி­த­மான சேவையை செய்­கின்றோம் என்ற உணர்­வோடு, எவ்­வித இலாப நோக்­கு­மற்று இச்­சே­வையை செய்து வந்­ததால் அவர்கள் இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் மிகவும் மதிப்­புக்­கு­ரி­ய­வர்­க­ளா­கவும், அல்­லாஹ்வின் அருள் பெற்­ற­வர்­க­ளா­கவும் காணப்­பட்­டார்கள். அவர்­களின் ஒவ்­வொரு செய­லிலும் புனிதக் கட­மையின் வழி­காட்­டிகள் என்ற உணர்வே மிகைத்­தி­ருந்­தது. இதன் மூலம் ஹஜ்­ஜா­ஜி­களும் எல்­லோரும் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய சர்­வ­தேச ரீதி­யாக மிகக் குறைந்த கட்­ட­ணத்­தி­லேயே தமது வாழ்வில் ஒரு­முறை மாத்­திரம் நிறை­வேற்­று­ம் கட்­டாயக் கட­மை­யான (வசதி படைத்­தோ­ருக்கு) இக்­க­ட­மையை நிறை­வேற்றி வந்­தார்கள். அதற்­கான சகல வச­தி­க­ளையும் அர­சாங்­கமும் ஏற்­ப­டுத்திக் கொடுத்­தது. ஹஜ் பிர­யாண முக­வர்­க­ளி­டையே எவ்­வித போட்­டியோ, பொறா­மையே, பொய்­யான வாக்­கு­று­தி­களோ, ஹஜ் செய்­ப­வர்­களை தமது பக்கம் ஈர்ப்­ப­தற்­கான வானொலி, தொலைக்காட்சி, பத்­தி­ரிகை விளம்­ப­ரங்­களோ அப்­போது எதுவும் இருக்­க­வில்லை.

ஹஜ் பிர­யாண மாபி­யாக்­களின் தோற்றம்
இன்று ‘மாபி­யாக்கள்’ என்ற சொல் எமது ஊட­கங்­களில் பல்­வேறு வித­மான மனித நாக­ரி­கத்­துக்கு கேடு விளை­விக்கும் செயற்­பா­டு­களில் ஈடு­படும் குழு­வி­ன­ருக்கு பொது­வாகக் கூறப்­ப­டு­கின்­றது.

‘Any Organized Group of Criminals resembling the Mafia in its way of operating’.
“தமது செயற்­பா­டு­களில் சட்­ட­வி­ரோத பயங்­கர வழி­களில் செயற்­படும் குழு­வி­னரே மாபியா” என வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.
இன்று ஹஜ் பிர­யாண முக­வர்­க­ளாக செயற்­ப­டு­ப­வர்­களில் பலர் இஸ்­லா­மிய விழு­மி­யங்­களை மட்­டு­மன்றி சாதா­ரண மனித விழு­மி­யங்­க­ளைக்­கூட கவ­னத்தில் எடுக்­காது எவ்­வ­ழி­யி­லா­வது அதிக பணத்தை ஈட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்­கோ­ளு­ட­னேயே மிக அதீத வேட்­கை­யோடு செயற்­ப­டு­வ­த­னா­லேயே இவர்­களை “மாபி­யாக்கள்” என அழைப்­பதை தவிர வேறு சொற்­பி­ர­யோகம் எனக்குக் கிடைக்­க­வில்லை. இவ்­வாறு இவர்கள் செயற்­ப­டு­வதை என்னால் பின்­வரும் நிலை­களில் உறு­திப்­ப­டுத்த முடியும்.

குறு­கிய காலத்தில் அதி உச்ச வரு­மானம்
சாதா­ர­ண­மாக ஒரு தொழிலில் ஈடு­படும் ஒருவர் நாட்டின் சட்ட ஒழுங்­கு­களை பின்­பற்றி தொழில் செய்­யும்­போது அவனால் அதிக இலா­பத்தை ஈட்ட முடி­யாது. அதிலும் ஒரு முஸ்­லிமைப் பொறுத்­த­வ­ரையில் அவன் மிக அதி­க­மான கடப்­பா­டு­க­ளுடன் ஹறாம், ஹலால் பேணி ஈடு­பட வேண்­டி­யுள்­ளதால் அவ­னாலும் மிக அதி­க­மான கொள்ளை இலாபத்தை ஈட்­ட­மு­டி­யாது. இவ்­வ­ள­வுக்கும் அவ­னது பண முத­லீடு, நெற்றி வியர்வை சிந்­திய உட­லு­ழைப்பு, குடும்ப உறுப்­பி­னர்­களின் பல்­வேறு தியா­கங்கள் என்­பன எல்லாம் அங்கு முத­லீடு செய்­யப்­ப­டு­கின்­றன. ஆனால், ஹஜ் பிர­யாண முகவர் தொழிலில் ஈடு­படும் ஒருவர் மிகக் குறு­கிய காலத்தில் பல கோடி ரூபாக்­களை சம்­பா­திப்­பதை, இத்­தொ­ழிலில் ஈடு­படும் பலரை நாம் அவ­தா­னிக்கும்போது, மிக இல­கு­வாகக் கண்டு கொள்­ளலாம். சாதா­ர­ண­மாக, தாம் அழைத்துச் செல்லும் ஒரு ஹாஜி­யி­ட­மி­ருந்து அனைத்து செல­வு­களும் போக ஒரு லட்ச ரூபாயை நிகர இலாப­மாக ஹஜ் முக­வ­ரினால் பெற்றுக்கொள்ள முடி­கின்­றது. எமது ஊர்­க­ளி­லேயே ஹஜ் முக­வர்­க­ளாக செயற்­படும் பலர், சாதா­ரண நிலை­யி­லி­ருந்த தமது வாழ்வுச் சூழலை, ஹஜ் பிர­யாண முகவர் தொழிலில் ஈடு­பட்ட மிகக் குறு­கிய காலத்­தி­லேயே பல்­வேறு வாழ்க்கை வச­தி­க­ளையும் பெற்று ஊரி­லேயே மிகப் பெரிய கோடீஸ்­வ­ரர்­க­ளாகத் திகழ்­வதை என்னால் நிரூ­பிக்க முடியும். தனக்கும் தனது பிள்­ளை­க­ளுக்கும் வாக­னங்கள், பல­கோடி செல­விட்ட ஆடம்­பர வீடுகள், கொழும்பில் வீடுகள், வங்­கி­களில் கோடிக்­க­ணக்கில் பண முத­லீடு என்­ப­ன­வெல்லாம் எனது கூற்றை நிரூ­பிக்கும் சான்­று­க­ளாகும். இவ்­வா­றான ஹஜ் பிர­யாண முக­வர்கள் பலர் தாம் ஏற்­க­னவே வகித்து வந்த நிரந்­தர வரு­மா­ன­மு­டைய கொழுத்த சம்­பளம் பெறும் அர­சாங்க உத்­தி­யோ­கத்­தையே துச்­ச­மாகத் தூக்கி எறிந்­து­விட்டு ஹஜ் பிர­யாண முகவர் தொழிலில் நிரந்­த­ர­மாக ஈடு­ப­டு­ப­வர்­க­ளாவர். அண்­மையில் ஹஜ் பிர­யாண முகவர் தொழிலில் ஈடு­படும் ஒருவர், மற்­றொ­ரு­வ­ரு­ட­னான வாய்த்­தர்க்­கத்தின் போது அவ­ரை­ய­றி­யா­ம­லேயே அவர் ஹஜ் பிர­யாண தொழிலின் மூலம் தான் சம்­பா­தித்த பல சொத்­துக்­களை பட்­டி­ய­லிட்டு காட்­டி­யதை என்னால் நிரூ­பிக்க முடியும். இவ்­வாறு அதிக கொள்ளை இலாப­மீட்டும் தொழி­லாக இன்று ஹஜ் பிர­யாண முகவர் தொழில் மாற்றம் அடைந்­துள்­ளதை எம்மில் பலர் நிதர்­ச­ன­மாக அறிந்தும், அது­பற்றி பகி­ரங்­க­மாக கதைப்­பதை தவிர்த்துக் கொண்டு வரு­கின்­றனர். இவ்­வாறு கொள்ளை இலா­ப­மீட்டும் தொழி­லாக எடுத்துக் கொள்­ளாமல் அதை ஒரு புனி­த­மான சேவை­யாக – குறைந்த இலாபத்­துடன் வழி நடாத்திச் செல்லும் பல ஹஜ் பிர­யாண முக­வர்­களும் எமது நாட்டில் உள்­ள­தையும் நான் மனப்­பூர்­வ­மாக ஏற்­றுக்­கொண்டு அவர்­க­ளுக்கு ‘துஆ’வும் செய்­கிறேன்.

ஹஜ்­ஜா­ஜி­களை கவரும் விளம்­ப­ரங்கள்
இன்று இலங்­கை­யி­லுள்ள வானொலி, தொலைக்­காட்சி, தின­சரிப் பத்­தி­ரி­கை­களில் எல்லாம் ஹஜ் பிர­யாண முக­வர்­களின் விளம்­ப­ரங்­களே நிறைந்து காணப்­ப­டு­கின்­றன. அதி­க­மான பணத்தை செல­விட்டு செய்­யப்­படும் இவ்­வி­ளம்­ப­ரங்கள் மூலமே, ஹஜ் பிர­யாண முகவர் தொழில் எவ்­வ­ளவு இலாபம் தரக்­கூ­டி­யது என்­பதை எம்மால் மிக இல­கு­வாக அறிந்து கொள்ள முடியும். இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தில் கட­மை­யாற்றும், ஒரு முஸ்லிம் அதி­காரி பின்­வ­ரு­மாறு கூறினார். இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தில் வரு­மா­னத்தில் அதிக வரு­மானம் முஸ்­லிம்­களின் விளம்­ப­ரங்கள் மூல­மா­கவே பெறப்­ப­டு­வ­தா­கவும் அதிலும் 95 வீத வரு­மா­னங்கள் ஹஜ், உம்ரா பிர­யாண முக­வர்­களின் விளம்­ப­ரங்கள் மூல­மா­கவே கிடைப்­ப­தையும் ஒளிவு மறை­வின்றிக் கூறினார். அந்­த­ள­வுக்கு தமது ஹஜ், உம்ரா பிர­யாண தொழிலை பல்­வேறு வழி­களில் விளம்­ப­ரப்­ப­டுத்தி, அதிக வாடிக்­கை­யா­ளர்­களை தம் பக்கம் கவர்­வதில் இவர்கள் குறி­யாக உள்­ளனர். அவர்கள் விளம்­ப­ரப்­ப­டுத்தும் சில வாச­கங்கள் பின்­வ­ரு­மாறு உள்­ளன.
• “ஹஜ்­ஜா­ஜி­க­ளுக்கு நட்­சத்­திர ஹோட்­டல்­களில் தங்­கு­மிட வசதி”.
• “கஃபத்­துல்­லா­வுக்கு மிக அண்­மையில் ஹோட்­டல்கள்”.
• “தினமும் வாய்க்கு ருசி­யான பிரி­யாணி சாப்­பாடு மற்றும் உள்­ளூரில் கிடைக்­கக்­கூ­டிய வகை­யி­லான சாப்­பாட்டு ஒழுங்­குகள்”
• “நேர­டி­யாக மக்கா, மதீ­னா­வுக்கு செல்­லக்­கூ­டிய விமான சேவை ஒழுங்­குகள்’’
• “உங்கள் ஊரி­லி­ருந்தே விமான நிலை­யத்­துக்கு அழைத்துச் செல்­லக்­கூ­டிய குளி­ரூட்­டப்­பட்ட பஸ் வச­திகள்”.
இவ்­வாறு பல விளம்­ப­ரங்கள். இவை­களில் எது­வுமே புனி­த­மான – தியா­கத்தின் உறை­வி­ட­மான – ஹஜ் இபா­தத்தின் உயி­ரோட்­டத்தை நினை­வு­ப­டுத்­து­வ­தாக அமை­யா­தது மட்­டு­மன்றி, அக்­கு­றிக்­கோள்­களை மாசு­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­துள்­ளன.

பொய்­யான வாக்­கு­று­திகள்
ஹஜ்­ஜா­ஜி­களை தொடர்ந்து கவ­ரு­வ­தற்­காக அவர்­க­ளுக்­கான வழி­காட்டல் கருத்­த­ரங்கு என்ற பெயரில், ஹஜ்­ஜுக்கு செல்­வ­தற்கு முன்பே, ஆடம்­ப­ர­மான ஹோட்­டல்கள், வர­வேற்பு மண்­ட­பங்­க­ளுக்கு அவர்­களை வர­வ­ழைத்து மிக அதிக செலவில் விஷேட சாப்­பாட்டு வைப­வங்­களை ஹஜ் முக­வர்கள் பல­முறை ஒழுங்கு செய்­கின்­றனர். அவ்­வ­ருடம் ஹஜ்­ஜுக்கு செல்­வ­தற்கு பதிவு செய்­துள்­ள­வர்­களை மட்­டு­மன்றி அடுத்­த­டுத்த வரு­டங்­களில் ஹஜ்­ஜுக்கு செல்­லக்­கூ­டி­ய­வர்­க­ளாக தாம் கருதும் முக்­கிய பிர­மு­கர்­க­ளையும் அந்த விருந்து வைப­வத்­துக்கு மிகத்­திட்­ட­மிட்ட முறையில் அழைக்­கின்­றனர். இவ்­வாறு சுமார் 70 ஹஜ்­ஜா­ஜி­களை அழைத்துச் செல்லும் ஒரு முகவர் ஒரு வைப­வத்­துக்கு மட்டும் வர­வேற்பு வைபவ மண்­டபம் உட்­பட செல­வு­க­ளுக்கு சுமார் பத்து லட்சம் ரூபா­வுக்கு மேல் செல­வி­டு­வதை நிரூ­பிக்க முடியும். இவ்­வாறு பல விருந்து வைப­வங்கள் பிர­யா­ணத்­துக்கு முன்­னா­லேயே முக­வர்­களால் ஒழுங்கு செய்­யப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான வைப­வத்தின் ஓர் அங்­க­மாக தம்­மோடு இத்­தொ­ழிலில் உறு­து­ணை­யாக ஈடு­படும் ஒரு மெள­லவி மூலம் ஒரு வழி­காட்டல் பயானும் ஒழுங்­கு­செய்­யப்­படும். இறு­தியில் ஹஜ் முகவர் தமது ஹஜ் குழுவில் இணைந்து கொண்­டோ­ருக்கு என்­னென்ன வச­திகள், ஏனைய சரித்­திர இடங்­க­ளுக்­கான பிர­யா­ணங்கள் பற்­றி­யெல்லாம் மிக விஷே­ட­மாக உரை­யாற்­று­வார்கள். அவர்­களின் உரைகள் எல்லாம் அவ்­வ­ருடம் ஹஜ்­ஜுக்கு செல்­ப­வர்­க­ளுக்கு மட்­டு­மன்றி, அடுத்­த­டுத்த வரு­டங்­களில் செல்ல உத்­தே­சித்­துள்­ள­வர்­க­ளுக்கும் நாவூறும் வகையில் மிகக் கவர்ச்­சி­க­ர­மா­ன­தாக அமையும். அவ்­வாறு அங்கு வழங்­கப்­படும் வாக்­கு­று­தி­களில் முழு­வதும் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை. சில வேளை­களில் அவ்­வாறு வாக்­கு­றுதி வழங்­கிய சில வர­லாற்றுப் பிர­யா­ணங்­க­ளுக்கு மேல­திக கட்­ட­ணங்­க­ளையும் ஹஜ்­ஜா­ஜி­க­ளிடம் அற­வி­டு­வதை நான் கண்­டுள்ளேன். இவ்­வாறு பொய்­யான பல வாக்­கு­று­தி­களை இப்­பு­னித கட­மை­யி­லேயே வழங்­கு­வதை பல ஹஜ் முக­வர்கள் வழக்­க­மாகக் கொண்­டுள்­ளனர். ஒவ்­வொரு வரு­டமும் ஹஜ்­ஜுக்கு சென்று வந்த பல ஹஜ்­ஜா­ஜி­களை நாம் சந்­தித்து உரை­யா­டு­கின்­ற­போது, ஹஜ் முக­வர்­களால் தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளையும், பொய்யும், புரட்டும் நிறைந்த தமது அனு­ப­வங்­க­ளையும், புனி­த­மான கட­மையை நிறை­வேற்றி வந்த நாம் நாவ­டக்­க­மாக இருக்க வேண்டும் என்ற எண்­ணத்தைக் கூட கைவிட்டு மிகப் பகி­ரங்­க­மாகக் கதைப்­பதை நாம் பல­முறை கண்­டுள்ளோம்.

கஃபத்­துல்லாவில் நடக்கும் மோச­டிகள்
2014ஆம் ஆண்டில் நான் ஹஜ்­ஜுக்கு சென்­ற­போது கட்டாய­மாகக் கொடுக்க வேண்­டிய குர்­பானி (தம்மு) கொடுப்­ப­தற்­காக எமது குழுவில் 20 பேர் வரை தெரிவு செய்­தார்கள். தொடர்ந்து தவாப், திலாவத் ஏனைய இபா­தத்­து­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த நாம், ஹஜ் முக­வ­ரோடு குர்­பானி ஆடு­களை பெறக்­கூ­டிய (ஏற்­க­னவே பணம் கொடுத்து ஓடர் செய்­யப்­பட்ட) இடத்­துக்கு போய் பல மணித்­தி­யா­லயம் காத்­தி­ருந்தும் குறிப்­பிட்ட பணத்தை பெற்­றுக்­கொண்ட மெள­ல­வியால் ஆடுகள் கொண்டு வரப்­ப­ட­வில்லை. மட்­டு­மன்றி, அவ­ரிடம் பணம் கொடுத்த வேறு சில முக­வர்­களும் ஆடு­களை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருந்­தனர். பல நூற்­றுக்­க­ணக்­கான ஆடு­களை விநி­யோ­கிக்கும் ஓடர்­களை பெற்ற அவர் அப்­போது தலை­ம­றை­வா­கி­யுள்­ளதை அறிந்து அன்று முழு­வதும் எமது பெறு­ம­தி­யான நாட்கள் வீணாகக் கழிந்­தன. இறு­தி­யாக நாமே வேறொரு இடத்­துக்கு சென்று புதி­தாக ஆடு­களைப் பெற்று குர்­பானி கொடுத்து எமது இருப்­பிடம் திரும்ப இரவு நேர­மா­கி­விட்­டது. குர்­பா­னிக்­காக மக்­காவில் இயங்கும் வங்­கி­களில் பணம் செலுத்தும் நடை­முறை உள்­ள­போதும் ஹஜ் முக­வர்கள் தமது மோசடி உழைப்­புக்­காக அதற்கு ஹஜ்­ஜா­ஜி­களை விடு­வ­தில்லை. இவ்­வா­றான பல மோச­டிகள் மக்கா மதீ­னாவில் ஹஜ் முக­வர்­களால் இடம்­பெ­று­கின்­றன.

அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்ட ஹஜ் இபாதத்
கடந்த இரண்டு தசாப்­தங்­க­ளாக இலங்­கையின் அர­சி­ய­லிலும் சமூக தளத்­திலும் பேசப்­படும் முக்­கிய விட­ய­மாக ஹஜ் வணக்கம் மாறி­யுள்­ளது. அடுத்­த­டுத்து வந்த பல அர­சாங்­கங்­களில் ஹஜ் ஏற்­பாட்­டுக்­கென புதிய புதிய அமைச்­சு­களும் ஏற்­பாட்­டுக்­கு­ழுக்­களும் அமைக்­கப்­பட்டு ஆளுக்காள் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­வ­துடன் மட்­டு­மல்­லாது, ஹஜ் முக­வர்­களால் பல வழக்­குகள் பல வரு­டங்­களில் தொட­ரப்­ப­டு­ம­ள­வுக்கு ஹஜ் பிர­யாண ஒழுங்­குகள் முகவர் மாபி­யாக்­க­ளி­டையே மிக முக்­கிய இடத்தை பெற்­றுள்­ளன. இன்று வரை இதற்­கான தீர்­வுகள் எதுவும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. மட்­டு­மன்றி, ஹஜ்­ஜா­ஜிகள் ஹஜ் பிர­யா­ணத்­துக்­கென செலுத்த வேண்­டிய கட்­ட­ணங்கள் தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணமே உள்­ளன. இன்று ஒரு ஹாஜி தனது முக­வ­ருக்கு மாத்­திரம் ஆறரை இலட்ச ரூபாவை செலுத்த வேண்­டி­யுள்­ளது. இவ்­வ­தி­க­ரிப்பும் பல உள்­நாட்டு வெளி­நாட்டுக் கார­ணங்கள் இருப்­ப­தையும் நாம் மறுப்­ப­தற்­கில்லை. ஆனால் எல்­லா­வற்­றை­யும்­விட ஹஜ் முக­வர்­களின் அதிக இலாப­மீட்டும் பேரா­சையே இவ்­வ­தி­க­ரி­ப்புக்­கான 70% வீத கார­ண­மாக அமைந்­துள்­ளன. ஒவ்­வொரு முக­வரும் பல வழி­களில் போட்­டி­யி­டு­கின்­றனர்.
இலங்­கையில் ஹஜ் பிர­யா­ணத்தில் வரு­டாந்தம் ஹஜ்­ஜா­ஜி­களால் ( 6 X 4000) 2400 மில்­லியன் ரூபாக்கள் முத­லீடு செய்­யப்­ப­டு­வ­தையும் நாம் இங்கு கவ­னிக்க வேண்டும்.

மாற்­றத்தை வேண்டி
ஹஜ் பிர­யாண முக­வர்­களின் விடயம் தொடர்ந்து வந்த பல அர­சாங்­கங்களின் பேசு பொரு­ளாகக் காணப்­பட்­டது. அண்­மையில் ஏற்­பட்ட புதிய அர­சாங்­கத்தின் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் ஹஜ் பிர­யா­ணத்­துக்­கென புதிய கமிட்டி ஒன்றை தெரிவு செய்­துள்­ள­தோடு, ஹஜ்­ஜா­ஜி­களின் நலன்­சார்ந்த பல விட­யங்கள் பற்றி முதன் முறை­யாக பகி­ரங்­க­மாக கருத்­துக்ளை வெளி­யிட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கதே. அதில் முக்­கி­ய­மாக ஒரு ஹாஜியின் பிர­யாண செலவை ஐந்து இலட்­ச­மாக குறைக்க வேண்டும் என்­பதும், ஹாஜி­களை அழைத்துச் செல்லும் பொறுப்பை முழு­மை­யாக அர­சாங்­கத்தின் கீழ் இயங்கும் ஹஜ் கமிட்­டியே ஏற்க வேண்டும் என்­பதும் மிகவும் வர­வேற்­கத்­தக்க விட­யங்­க­ளாகும். எமது அண்­டைய நாடான இந்­தி­யாவில் கூட ஹாஜி­களை குறைந்த செலவில் அர­சாங்க ஹஜ் கமிட்­டி­யி­னூ­டாக அழைத்துச் செல்லும் ஏற்­பாடு பல தசாப்­தங்­க­ளாக நடை­பெற்று வரு­கின்­றது. எனது கட்­டு­ரையில் கூறிய பல மோச­டிகள் மாபியா செயற்­பாடு, கொள்ளை இலாப­மீட்டல் போன்ற பல மோச­மான செயற்­பா­டு­க­ளுக்கு புதிய அர­சாங்­கமும் பிர­தம மந்­தி­ரியும் முன் மொழிந்­துள்ள இவ்­வேற்­பா­டுகள் முற்­றுப்­புள்ளி வைக்கும் என நாம் எதிர்­பார்க்­கலாம். எனினும், சென்­ற­வாரக் கட்­டு­ரையில் கூறப்­ப­டு­வது போன்று பல எதிர் விளை­வு­க­ளையும் நாம் இதில் எதிர்­பார்க்­கலாம். அதற்­கான எதிர் விளை­வு­களை தவிர்ந்து கொள்­ளக்­கூ­டிய சில ஆலோ­ச­னை­களை பின்­வ­ரு­மாறு முன்­வைக்­கின்றேன்.
1. ஹஜ்­ஜுக்குப் பதிவு செய்யும் நடை­மு­றையை ஒவ்­வொரு ஊரி­லு­முள்ள பிர­தேச காரி­யா­லயம், குறிப்­பாக முஸ்லிம் சமய கலா­சார உத்­தி­யோ­கத்தர் மூலம் மேற்­கொண்டு பதி­வு­களை பெறலாம். அதற்­காக அவ்­வூ­ழி­ய­ருக்கு ஊக்­கு­விப்பு கொடுப்­ப­ன­வு­க­ளையும் வழங்­கலாம்.
2. ஒவ்­வொரு ஊரி­லு­முள்ள பள்­ளி­வாசல் நிர்­வாகம் உலமா சபை­களின் ஒத்­து­ழைப்­பையும் பெறலாம். ஹஜ் செய்­ப­வர்­க­ளுக்­கான விஷேட சொற்­பொ­ழி­வு­களை இந்­நி­று­வ­னங்­களின் மூலம் ஏற்­பாடு செய்­வ­தோடு அதற்­கான கொடுப்­ப­ன­வு­க­ளையும் வழங்­கலாம்.
3. ஹஜ்­ஜா­ஜிகள் மக்கா, மதீ­னாவில் தங்­கு­வ­தற்­கான போது­மான ஹோட்­டல்கள், தங்­கு­மி­டங்­களை எவ்­வித குறை­யு­மின்றி முற்­ப­திவு செய்­வ­தற்­கான முன்­னேற்­பா­டு­களை ஹஜ்­க­மிட்டி மிகப் பொறுப்­புடன் செயற்­ப­டுத்த வேண்டும்.
4. அவ்­வாறே விமானப் பிர­யா­ணத்­துக்­கான ஏற்­பா­டு­க­ளையும் முன்­கூட்­டியே பதிவு செய்ய வேண்டும். அதிக விமானப் பதி­வுகள் செய்­யப்­ப­டும்­போது அதி­க­ள­வி­லான விலைக்­க­ழி­வு­களும் எமக்கு கிடைக்கும்.
5. ஹஜ் ஒழுங்­குக்­கென சவூ­தியில் செயற்­படும் அமைச்சர், அமைச்சு, முஅல்லிம், முஹத்திப் போன்­றோ­ரோடு இலங்கை அர­சாங்­கத்தின் அனு­ம­தி­பெற்ற ஹஜ் கமிட்டி கமிட்டி ஊடாக அரச உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.
6. இலங்கை ஹஜ் கமிட்டியில் மிகவும் தைரியமும் அனுபவமும் தகைமையும் கொண்ட உறுப்பினர்களின் தொகை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.
7. ஹஜ்ஜின் இறுதியில் ஒவ்வொரு ஹாஜியிடமும் வினாக்கொத்தின் மூலம் (Questionnaire) அவர்களின் கருத்துக்களை இரகசியமாகப் பெற்று எதிர்காலத்தில் மேலும் பல நல்ல நடைமுறைகளை அமுல்படுத்தலாம்.

ஜம்இய்யத்துல் உலமாவின் பாரமுகம்
ஹஜ் பிர­யாண விட­யத்தில் பல இழு­ப­றிகள் தொடர்ந்த வண்ணம் உள்­ள­போதும் இலங்கை முஸ்­லிம்­களின் சமய, சமூக செயற்­பா­டு­களில் அதிக கவனம் செலுத்த வேண்­டிய அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா இவ்­வி­ட­யத்தில் இன்­று­வரை பாரமு­க­மா­கவே இருந்து வரு­கின்­றது. புதிய அர­சாங்­கத்தால் இப்­போது கூறப்­படும் முன்­மொ­ழி­வு­களைக் கூட அவர்கள் சில வேளை எதிர்க்க முற்­ப­டலாம். ஏனெனில், அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் முக்­கிய பத­வி­களில் உள்ள பலர் இலங்­கையின் மிக முக்­கிய பிர­சித்­தி­பெற்ற ஹஜ் முக­வர்­க­ளாக உள்­ளார்கள் என்­ப­தையும், உல­மா­சபை அவர்­களின் நலனிலேயே அதிக அக்­கறை செலுத்தும் என்­ப­தையும் நாம் மறந்துவிட முடியாது.

‘அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன்.’-Vidivelli

  • பேரா­சி­ரியர் மெள­லவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன்
    (முன்னாள் பீடா­தி­பதி; இஸ்­லா­மியக் கற்கை அரபு மொழிபீடம்,
    தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழகம்)

Leave A Reply

Your email address will not be published.