டெல்லி மாநிலத் தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி

0 591

இந்­தி­யாவின் டெல்லி மாநிலத் தேர்­தலில் பிர­தமர் நரேந்­திர மோடியின் ஆளும் கட்சி பாரிய பின்­ன­டைவை சந்­தித்­தது. இத்­தேர்­தலில் வெறும் எட்டு ஆச­னங்­களை மாத்­தி­ரமே அக்­கட்­சி­யினால் பெற­மு­டிந்­தது. மோடியின் தீவிர இந்­துத்­துவ தேசி­ய­வாதக் கொள்­கையின் கருத்துக் கணிப்­பாக நோக்­கப்­பட்ட இத்­தேர்­தலில் அக்­கட்சி வெறுப்புப் பிர­சா­ரங்­க­ளையே முன்­னெ­டுத்­தி­ருந்­தது.
கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யா­கிய தேர்தல் முடி­வு­க­ளின்­படி நரேந்­திர மோடியின் ஆளும் பார­தீய ஜனதாக் கட்சி 2015 மாநிலத் தேர்­தலில் பெற்­றுக்­கொண்­ட­தை­விட ஐந்து மேல­திக ஆச­னங்­களைப் பெற்­றுக்­கொண்ட போதும் இத்­தேர்தல் முடி­வுகள் பாரிய ஏமாற்­ற­மாக மாறி எதிர்­பார்ப்­பு­களை தவி­டு­பொ­டி­யாக்கி இருந்­தது. இத்­தேர்­தலில் பாரிய வெற்றி பெற்­றுள்ள ஆம் ஆத்மி கட்சி அங்கு அறுதிப் பெரும்­பான்­மை­யுடன் ஆட்சி அமைக்­க­வுள்­ளது.

கடந்த மூன்று மாதங்­க­ளாக நாட­ளா­விய ரீதியில் மோடியின் கொள்­கைக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்று வரும் நிலையில் டெல்லி மாநில சட்­ட­ச­பையின் ஆட்­சியைக் கைப்­பற்­று­வது பார­தீய ஜனதாக் கட்­சியின் முன்­னு­ரி­மை­களுள் ஒன்­றாக அமைந்­தி­ருந்­தது. கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பாரிய வெற்­றி­பெற்ற மோடி தலை­ந­க­ரையும் வெற்றி கொள்­வதில் விரை­வாகத் தனது கவ­னத்தை திருப்­பி­யி­ருந்தார்.

நரேந்­திர மோடி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றிய குடி­யு­ரிமைச் சட்ட மசோ­தா­வுக்கு எதி­ராக நாட­ளா­விய அளவில் ஆர்ப்­பாட்­டங்கள் தொடர்ந்து இடம்­பெ­று­கின்­றன. குறித்த சட்ட மசோதா சிறு­பான்­மை­யி­ன­ருக்கு, குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்குப் பாகு­பா­டா­ன­தென அதனை எதிர்ப்­ப­வர்கள் கூறு­கின்­றனர். இவ்­வ­மை­தி­யின்மை நிலை மோடிக்கு மிகப்­பெ­ரிய சவாலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன், அது வேறு பிர­தான பிரச்­சி­னை­க­ளையும் உள்­ள­டக்கும் வகையில் வளர்ச்­சி­ய­டைந்து வரு­கின்­றது. அதி­க­மான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள், இந்­தி­யாவின் மதச்­சார்­பின்மை அத்­தி­வா­ரத்தை தகர்த்து அந்­நாட்டை இந்­துத்­து­வத்தை மைய­மாகக் கொண்ட நாடாக மாற்­று­வ­தற்கு மோடியின் கட்சி நீண்­ட­காலத் திட்­டத்தைக் கொண்­டுள்­ள­தாக கரு­து­கின்­றனர்.

மோடியின் கட்­சியின் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்கள் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் முழு மூச்­சுடன் ஈடு­பட்­டி­ருந்­தனர். அவர்கள் பிர­சா­ரத்­தின்­போது பிரி­வி­னை­வாத மொழி­ந­டை­யையே பயன்­ப­டுத்­தினர். அவர்­களின் பிர­சாரத் தொனி எதி­ர­ணிக்கு ஆத­ரவு வழங்­கு­வது, இஸ்­லா­மியப் பயங்­க­ர­வா­தத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வது போன்­றது மற்றும் அது தேசத்­து­ரோகம் என்­ப­தா­கவே அமைந்­தி­ருந்­தது. ஒரு பிரதி அமைச்சர், “துரோ­கி­களை சுட்டுக் கொல்­லுங்கள்” என மக்­களைத் தூண்­டிய இரண்டு வாரங்­க­ளுக்குள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக துப்­பாக்கி வேட்­டுகள் தீர்க்­கப்­பட்­டன.

தேர்­தலில் வெற்­றி­பெற்­றுள்ள ஆம் ஆத்மி கட்சி இந்­தி­யாவின் மத மற்றும் வகுப்பு பிரி­வுகள் இடையே பரந்த ஆத­ரவைக் கொண்­ட­தாகக் காணப்­ப­டு­கின்­றது. கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மோடியின் கட்­சிக்கு வாக்­க­ளித்த பலரும் இம்­முறை ஆம் ஆத்மி கட்­சிக்கு வாக்­க­ளித்­துள்­ளனர்.

ஆம் ஆத்மி கட்சி தனது பிர­சா­ரத்­தின்­போது சுகா­தார சேம­நலன் மற்றும் கல்வி போன்ற பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மேம்­பாட்­டையே வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை, வாக்­கா­ளர்கள் கடந்த இரண்டு தடவை ஆட்­சி­க­ளின்­போதும் சிறப்­பாக சேவை­யாற்­றிய கட்­சிக்குத் தமது வாக்­கு­களைப் பரி­ச­ளித்­தி­ருந்­தனர்.

“டெல்லி மக்கள் அர­சியல் மற்றும் அர­சியல் அபி­வி­ருத்தி என்­ப­வற்றின் கருத்­துக்­களை தெளி­வாக வரை­ய­றுத்­துள்­ளனர்” என வெற்­றியைக் கொண்­டாடும் மக்கள் மத்­தியில் ஆம் ஆத்மி கட்­சியின் தலை­வரும் முத­ல­மைச்­ச­ரு­மான அரவிந் கெஜ்­ரிவால் கூறினார். “டெல்லி மக்கள் தமது பாட­சா­லைகள், மருத்­து­வ­ம­னைகள் என்­ப­வற்றை முன்­னேற்றும், அத்­துடன் சிறந்த உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை வழங்­கு­வோ­ருக்கே வாக்­க­ளிப்போம் எனக் கூறி­யுள்­ளனர்” என அவர் மேலும் கூறினார்.

மேலும் கருத்துத் தெரி­வித்த அவர், “இவ்­வெற்­றி­யா­னது இந்­தியத் தாய்­நாட்டின் வெற்­றி­யாகும். இவ்­வெற்­றி­யா­னது பிரி­வினைப் பிரச்­சி­னை­களில் கவனம் செலுத்தும் இந்­திய அர­சியல் பாதையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும்” என்றார்.
பிர­சா­ரத்­தின்­போது மோடியின் கட்­சியின் பிர­தான பிர­சார மூலோ­பாய நிலை­யாக பிரி­வினை அடை­யாளம், குடி­யு­ரிமைச் சட்டம் மற்றும் ஏனைய இந்­துத்­துவ மையப்­ப­டுத்­தப்­பட்ட முன்­னெ­டுப்­பு­களை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவே அமைந்­தி­ருந்­தது. தலை­ந­கரின் தனித்­துவம் மிக்க தேவைகள் பற்றி இப்­பி­ர­சா­ரங்­களில் கவனம் செலுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.

தேர்தல் பிர­சா­ரத்­தின்­போது பார­தீய ஜனதாக் கட்சிப் பிர­மு­கர்கள் தமது எதிர்க்­கட்­சி­யான ஆம் ஆத்மிக் கட்­சிக்கு வாக்­க­ளிப்­பது பாகிஸ்தான் இஸ்­லா­மிய அர­சுக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு ஒப்­பா­னது என்ற பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். கெஜ்­ரிவால், போராட்­டங்­க­ளுக்கு இர­க­சிய ஆத­ரவு வழங்கும் ஒரு பாகிஸ்­தா­னிய முகவர், முஸ்­லிம்­க­ளுக்கு உதவப் பணி­பு­ரி­பவர் மற்றும் இந்து சனத்­தொ­கைளை அடக்­கி­யாள நினைப்­பவர் என்ற பிர­தி­விம்­பத்தை வரைய தேர்தல் பிர­சா­ரங்­க­ளின்­போது பார­தீய ஜனதாக் கட்சி முயன்­றது.

இந்­தி­யாவின் தக­வல்­துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கார் செய்­தி­யாளர் சந்­திப்பு ஒன்றில் கெஜ்­ரி­வாலை ஒரு பயங்­க­ர­வாதி என்று கூட வர்­ணித்­தி­ருந்தார். “நீ ஒரு பயங்­க­ர­வாதி, அதற்கு எம்­மிடம் ஏரா­ள­மான ஆதா­ரங்கள் உள்­ளன” எனக் கூறிய ஜாவேத்கார் எந்த ஒரு ஆதா­ரத்­தையும் வழங்­க­வில்லை.

எனினும், ஆம் ஆத்மிக் கட்­சியின் தலைவர் கெஜ்­ரிவால் பார­தீய ஜனதாக் கட்­சியின் கொள்­கை­க­ளி­லுள்ள இந்துத் தேசி­ய­வா­தத்தின் மென்­மை­யான பகுதி ஒன்­றையும் தனது தேர்தல் பிர­சா­ரங்­களில் பயன்­ப­டுத்­தி­யி­ருந்தார்.
பார­தீய ஜனதாக் கட்சி சிறு­பான்­மை­க­ளுக்கு எதி­ரான இந்துப் பெரும்­பான்மைக் கொள்­கை­களை பிர­சா­ரத்­துக்குப் பயன்­ப­டுத்­திய அதே­வேளை, ஆம் ஆத்மிக் கட்சி தனது சொந்த இந்து அடை­யா­ளத்தை காண்­பித்துக் கொண்டு மத சக­வாழ்வு மற்றும் பல்­வ­கைத்­தன்மை போன்ற கொள்­கை­களைப் பிர­சாரம் செய்­தது. ஆம் ஆத்மிக் கட்­சியின் அர­சி­யல்­வா­திகள் தேர்தல் பிர­சா­ரங்­க­ளின்­போது இந்துக் கோயில்­க­ளுக்கு விஜயம் செய்­த­துடன், ஆன்­மிகப் பாடல்­க­ளையும் பாடினர். அத்­துடன் ஆர்ப்­பாட்­டங்கள் பற்றிப் பேசு­வதைத் தவிர்த்­தி­ருந்­தனர். பார­தீய ஜனதாக் கட்சி, ஆர்ப்­பாட்­டங்­களை முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தின் தோற்­றுவாய் எனப் பிர­சாரம் மேற்­கொண்­டி­ருந்­தது.

ஓர் இந்­து­வான கெஜ்­ரிவால் தனது வெற்­றி­யு­ரையின் பின்னர் நேர­டி­யாக கோயில் ஒன்­றுக்கு சென்று தனது விட­யத்தை தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்தார்.
தேர்தல் பிர­சா­ரத்­தின்­போது கெஜ்­ரிவால், பார­தீய ஜனதாக் கட்சி எந்த ஓர் அடை­வையும் பெற்­றி­ருக்­காத கார­ணத்­தினால் அவர்­க­ளுக்கு தேர்­தலில் வெற்­றி­பெற பிரி­வி­னை­வாதம் மாத்­தி­ரமே உள்­ள­தாகச் சாடி­யி­ருந்தார்.
“இதன் கார­ண­மா­கவே அவர்கள் தமது சொந்த அடை­வு­களை மக்கள் காண்­ப­தி­லி­ருந்து தூரப்­ப­டுத்­தவே இந்து – முஸ்லிம் பிரி­வி­னையைக் கையில் எடுத்­துள்­ளனர்” என இந்­தியன் எக்ஸ்­பிரஸ் செய்­திப்­பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய செவ்­வியில் கெஜ்­ரிவால் கூறி­யி­ருந்தார்.

“தேசப்­பற்று என்றால் என்­ன­வென்று தெரிவு செய்­வ­தற்­கான நேரம் வந்­துள்­ளது. தேசப்­பற்று பற்றி நாம் பிள்­ளை­க­ளுக்கு கற்­பிக்க வேண்­டுமா அல்­லது இந்து – முஸ்லிம் விவா­தத்தை வலி­யு­றுத்­து­வதா? மக்­க­ளுக்கு தாங்­கக்­கூ­டிய செலவில் சுகா­தார சேம­ந­லன்­களை வழங்­கு­வது தேசப்­பற்றா அல்­லது தேசப்­பற்று என்­பது இந்து – முஸ்லிம் பிரச்­சி­னையா?” என அவர் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

கெஜ்­ரிவால் ஆர்ப்­பாட்­டங்கள் பற்றிப் பேசு­வதைத் தவிர்த்­தி­ருந்தார், அதற்குப் பதி­லாக தனது கட்­சியின் அடை­வுகள் மற்றும் ஏனைய பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­கான திட்­டங்கள் பற்­றியே அவ­ரது பிர­சாரம் அமைந்­தி­ருந்­தது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யா­கிய தேர்தல் முடி­வுகள் தொடர்ச்­சி­யான மூன்­றா­வது வெற்­றி­யாக அமைந்­த­தோடு மூன்­றா­வது முறை­யா­கவும் அவர் டெல்­லியின் முத­ல­மைச்­ச­ராகத் தேர்­வா­கி­யுள்ளார்.

தேர்தல் முடி­வுகள் பார­தீய ஜனதாக் கட்­சிக்கு ஏமாற்றம் மிக்­க­தாக அமைந்­தி­ருந்த போதும், அத­னது மூலோ­பாயம் உத­வி­யா­ன­தாக அமைந்­த­தற்­கான சான்­றுகள் காணப்­ப­டு­கின்­றன. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆளும் பார­தீய கட்சி 3 ஆச­னங்­களை வென்­றி­ருந்த போதும் இம்­முறை அவ்­வெண்­ணிக்கை 7 ஆக அதி­க­ரித்­துள்­ளது. 2015 ஆம் ஆண்டு 67 ஆச­னங்­களை வென்­றி­ருந்த ஆம் ஆத்மி கட்­சியின் ஆச­னங்­களின் எண்­ணிக்கை 62 ஆகக் குறை­வ­டைந்­துள்­ளது. மேலும் பார­தீய ஜனதாக் கட்சி இத்­தேர்­தலில் 39 வீத வாக்­கு­களைப் பெற்­றது. அது 2015 ஆம் ஆண்­டைய தேர்­த­லை­விட 7 வீதம் அதி­க­மாகும்.

மோடியின் முன்னாள் ஆத­ர­வா­ள­ரான ரூபா சுப்­ர­மண்யா என்ற பிர­சித்தம் மிக்க பொரு­ளா­தார நிபுணர் பின்­வ­ரு­மாறு கூறு­கின்றார்: “அவர்­களின் பிரி­வினை மற்றும் வன்­முறை மூலோ­பாயம் அவர்­க­ளுக்கே வினை­யாக அமைந்து விட்­டது”. முன்னர் மோடியின் ஆத­ர­வா­ள­ராக விளங்­கிய சுப்­ர­மண்யா மோடியின் பிரி­வினை கார­ண­மாக தனது நிலைப்­பாட்டை மாற்றிக் கொண்­ட­வ­ராவார். “அவர்­களின் மூலோ­பாயம் எதிர்ப்­ப­வர்­க­ளுக்கு சாத­க­மாகக் காணப்­ப­டு­கின்­றது. இந்­நிலை எதிர்­கா­லத்தில் மேலும் வளர்ச்­சி­ய­டையும்” என சுப்­ர­மண்யா மேலும் கூறு­கிறார்.

மோடி வலி­யு­றுத்தும் இந்துத் தேசி­ய­வாதக் கொள்­கைகள் தொடர்ச்­சி­யாக இரண்டு தேர்தல் வெற்­றி­களை அவ­ருக்கு வழங்­கி­யி­ருந்­தன. கடந்த காலங்­களில் தோல்­வி­கண்ட மாநி­லங்­களில் கூட மோடி கடந்த வருடம் வெற்­றி­பெற்­றி­ருந்தார்.

எவ்­வா­றா­யினும் பொரு­ளா­தார ரீதி­யாக இந்­தியா தடு­மா­று­கின்­றது. அந்­நாட்டின் வேலை­யற்றோர் எண்­ணிக்கை கடந்த 45 வரு­டங்­களில் காணப்­பட்ட அள­வு­களில் மிகவும் அதி­க­மா­ன­தாகக் காணப்­ப­டு­கின்­றது. டெல்­லியில் கிடைத்த படு­தோல்வி போன்ற விட­யங்கள் நாட்டில் பிரி­வினை வன்­மு­றை­களைத் தூண்டி முத­லீட்­டா­ளர்கள் முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கு தயங்கும் நிலையை உரு­வாக்­கலாம் என பொரு­ளா­தார வல்­லு­நர்கள் அஞ்­சு­கின்­றனர்.
இந்­தியா மிகவும் எதிர்­பார்ப்­பு­டன் காத்­தி­ருந்த வரவு – செல­வுத்­திட்ட வெளி­யீட்­டுக்கு சில நாட்­க­ளுக்கு முன்னர் இந்­தி­யாவின் பிர­தி­ய­மைச்சர் அனுருக் தாக்கூர், ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை குறிக்கும் வித­மாக “காட்­டிக்­கொ­டுப்­ப­வர்­களை சுட்­டுத்­தள்­ளுங்கள்” என தேர்தல் பிர­சாரப் பேரணி ஒன்றில் கூறி­யி­ருந்தார்.

சிலர் இந்த அறை­கூ­வலை ஏற்­றுக்­கொண்­டனர். கடந்த வாரம் ஜாமிஆ மில்­லியா இஸ்­லா­மிய பல்­க­லைக்­க­ழக ஆர்ப்­பாட்­டத்­தின்­போது மோட்டார் சைக்­கிளில் வந்த இரண்டு நபர்கள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது துப்­பாக்கி வேட்­டுக்­களைத் தீர்த்­தனர். தாக்கூர் சுட்டுக் கொல்­லுங்கள் எனக் கூறிய பின்னர் இடம் பெற்ற இரண்­டா­வது துப்­பாக்­கிச்­சூட்டு சம்­ப­வ­மாக அது அமைந்­தி­ருந்­தது.
எனினும், மோடியின் பிர­சாரம் சில எதிர்க்­கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளி­டமும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யதை அவ­தா­னிக்க முடிந்­தது. தினேஷ் சௌகான் என்ற 27 வயது நிரம்பிய வாடகை வாகனச் சாரதி தக்லாகபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு அருகாமையிலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் காணப்பட்ட நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்துக்கொண்டிருந்தார். “கெஜ்ரிவால் பாடசாலைகள் மற்றும் மின்சாரம் போன்றவற்றை முன்னேற்றுவதில் சிறப்பாகப் பணியாற்றுகின்றார். நான் அவரை விரும்புகிறேன், எனினும் நான் இம்முறை பாரதீய ஜனதாக் கட்சிக்கே வாக்களிக்கவுள்ளேன்” என சௌகான் கூறுகிறார்.

“கெஜ்ரிவால் முஸ்லிம்கள் மற்றும் சாஹீன் பார்க் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றார்” என சௌகான் கூறுகின்றார். டெல்லியில் இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டங்கள் பிரதான சாலைகளை மறித்து மேற்கொள்ளப்படுகின்றன. அவை பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் இலச்சினையாக மாறியுள்ளன. “இதன் காரணமாகவே நான் அவருக்கு எதிராக வாக்களிக்கவுள்ளேன்” சௌகான் கூறுகின்றார்.
எவ்வாறாயினும் 62 வயது நிரம்பிய நசீமா பிரவீனுக்கு அபிவிருத்தியே பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. “வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தி போன்றவற்றை வழங்கும் தலைவர்களே எமக்குத் தேவை. மதங்களின் அடிப்படையில் மக்களை பிரித்து வெறுப்பை வளர்க்கும் தலைவர்கள் எமக்குத் தேவையில்லை” என பிரவீன் கூறுகிறார்.-Vidivelli

  • மூலக் கட்டுரை: மரியா அபிஹபீப் மற்றும் சமீர் யாசிர்
    தமிழ் வடிவம்: அதீக் சம்சுதீன்

Leave A Reply

Your email address will not be published.