வில்பத்து தேசியவன பாதுகாப்பு பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பகுதியை துப்புரவு செய்து மீள்குடியேற்றம் மற்றும் சட்டவிரோத நிர்மாணங்களை முன்னெடுத்ததாக குற்றம் சுமத்தி முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் உட்பட நபர்களுக்கெதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்தது.
குறிப்பிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சூழல் நீதிக்கான மையம் இந்த வழக்கினைத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனக் டி சில்வா, நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையை முடிவுக்குக்கொண்டு வந்த நீதிபதிகள் குழாம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நிர்ணயித்தது.
இந்த ரிட் மனுவில் பிரதிவாதிகளாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மன்னார் மாவட்ட செயலாளர், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் (முன்னாள்) ரிஷாத் பதியுதீன், சட்ட மா அதிபர் உட்பட 9 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட மனு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்குவதற்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் 2019 ஆகஸ்ட் மாதம் தீர்ப்பினை அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிபதி மஹிந்த சமயவர்தன விருப்பம் தெரிவிக்காமையினால் இவ்வழக்கினை ஆரம்பத்திலிருந்தே வேறு நீதிபதிகள் குழாம் மூலம் விசாரணை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் தீர்மானித்தார். அதன் அடிப்படையிலே புதிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுற்றாடல் சட்டம் மற்றும் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு, சட்டவிரோத நிர்மாணங்கள் மேற்கொண்ட நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- ஏ. ஆர்.ஏ. பரீல்