‘வழி சொல், வழி விடு’ எனும் கருபொருள் தாங்கி அக்குறணை அபாபீல் இளைஞர்களால் நடாத்தப்பட்ட கலை விழாவில் அஷ்ஷெய்க் ரிஷாட் நஜிமுதீன் ஆற்றிய உரையின் தொகுப்பு:
முதியவர்கள், இளைஞர்கள் இருசாராரும் சமூக சீர்திருத்த வேலைத்திட்டத்தில் முக்கியமானவர்கள் என்ற கருத்து ஏற்கனவே இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. எனது உரை அவ்விரு சாராரும் சமூக சீர்திருத்தப் பணியில் ஈடுபடும் போது, அக்குறணை போன்றதொரு சமூக ஒழுங்கில், முன்னுரிமைப்படுத்த வேண்டிய இரு விடயங்களை சுட்டிக் காட்டுவதாகவே உள்ளது.
01. கலை, இலக்கியம், பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளை இஸ்லாம் கூறிய பண்பாட்டு வரையறைகளுக்குள்ளால் நின்று வளர்த்தெடுத்தல்.
‘நல்ல மனித ஆளுமை’ உருவாக்கம் உடல், அறிவு, ஆன்மா ஆகிய மூன்றினூடாகவுமே சாத்தியப்படுகிறது என எமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். அம்மூன்றுடன் சேர்த்து இன்னொன்றையும் இணைக்க வேண்டும் எனலாம். மனித உணர்வுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட வேண்டும். அல்குர்ஆன் மனித உணர்வுடன் பேச முனைகிறது. இயற்கை காட்சிகளை மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ழுஹா நேரத்தின் மீது அல்குர்ஆன் சத்தியம் செய்கிறது. பனித்துளிகள் இலைகளின் ஓரங்களிலிருந்து வடிந்துகொண்டிருக்கும் நேரம். சிட்டுக் குருவிகள் அன்றைய நாளை எதிர்பார்ப்புடனும் மகிழ்வுடனும் இரை தேடிச் செல்லும் நேரம். அது அமைதியின் நேரம். மகிழ்வின் நேரம். புத்துணர்ச்சியின் நேரம். களைப்பில்லாத நேரம். டென்ஷன் இல்லாத நேரம். மனித உணர்வுடன் இறுகிய தொடர்புகொண்டிருக்கும் ழுஹா நேரத்தில் சத்தியம் செய்வதில் அறிவுடையோருக்கு படிப்பினை உண்டு. கால்நடைகளை காலையில் மேய்ச்சல் நிலம் நோக்கி ஓட்டிச் செல்வதிலும் மாலையில் திரும்ப ஓட்டி வருவதிலும் அழகு இருக்கிறதென அல்குர்ஆன் கூறுகிறது. எமக்குப் புலப்படும் வானம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது எனவும், வானத்தில் நட்சத்திரக் கூட்டங்கள் ஆக்கப்பட்டிருப்பதாகவும் அவை பார்ப்பவர்களுக்கு அழகானதாக்கப்பட்டுள்ளதாகவும் அல்குர்ஆன் வர்ணிக்கிறது.
இறைதூதரது வாழ்வில் மனித உணர்வு சார்ந்த உரையாடல்கள் எண்ணிலடங்காதவை. இங்கு சில உதாரணங்களை மாத்திரம் தருகிறோம். நபியவர்கள் வீட்டில் தனது மனைவிமாருடன் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை ஸஹீஹுல் புஹாரியில் வரும் பின்வரும் அறிவிப்பு விளக்குகிறது: ‘நபியவர்கள் தனது வீட்டில் தன் மனைவிமாருடன் நகைச்சுவையாகக் கதைத்துக் கொண்டிருப்பதையும், அவர்களுடன் செல்லமாக இருப்பதையும், அவர்கள் கூறும் கதைகளுக்கு செவிதாழ்த்திக் கேட்டுக் கொண்டிருப்பதையும் நாம் கண்டிருக்கிறோம்’. நபியவர்கள் ஆயிஷா நாயகியுடன் ஓட்டப்போட்டியில் ஈடுபட்டதை நாம் அறிகிறோம். ஒரு கிழவி நபியவர்களிடம் வந்து தான் சுவர்க்கம் நுழைய துஆ செய்யும்படி வேண்டுகிறார். அதற்கு நபியவர்கள் முதியவர்கள் சுவர்க்கம் புகமுடியாது எனக்கூற அவர் அழுதுவிட்டார். உடனே நபியவர்கள் யாரும் முதுமை நிலையில் சுவர்க்கம் நுழைய முடியாது. இளமை நிலைக்கு மாற்றப்பட்டதன் பின்னே நுழைவர் எனக் கூறினார். ஹபஷிகளுடைய விளையாட்டுப் போட்டியை கண்டுகளிக்க ஆயிஷா நாயகியை அழைத்துச் சென்றமை, அவர் சலிப்படையும் வரை நபியவர்கள் தொடர்ந்தும் அங்கிருந்தமை, நிகழ்வை சரியாகக் கண்டுமகிழ நபியவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களுக்கு உதவியமை என்பதெல்லாம் மனித உணர்வுக்கு நபியவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதையே காட்டுகிறது. அன்சாரிகளது விருந்தொன்றில் கலந்துகொள்ளச் சென்ற நபியவர்கள், அங்கு அமைதி நிலவியதை அவதானித்தார். அங்கிருந்தவர்களிடம் பொழுதுபோக்கு நிகழ்வுகள் ஏதுமில்லையா? அன்சாரிகள் பொழுதுபோக்கை விரும்பக்கூடியவர்களல்லவா! எனக் கேட்டார்.
இவை இஸ்லாம் மனித உணர்வுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதற்கான சில உதாரணங்கள் மாத்திரமே. இம்மனித உணர்வை ஆரோக்கியமாக வைத்திருக்கவே கலை, இலக்கியங்கள் முனைகின்றன. நாடகம், இசை, ஓவியம், நாவல், சிறுகதை, குறுந்திரைப்படம், வீதி நாடகம், திரைப்படம், பாட்டு, வில்லுப்பாட்டு, சுவர் ஓவியம், போட்டோகிராபி, கொமடி, ஸ்டேண்ட் அப் கொமெடி, கார்ட்டூன் என கலை, இலக்கிய வடிவங்கள் வியாபித்துச் செல்கின்றன. நாளுக்கு நாள் வளர்ச்சியடைகின்றன. புதிய புதிய போக்குகள், புத்தாக்கங்கள் உருவாகின்றன. சமூகப் பிரச்சினைகளை அவை பேசுகின்றன. சமூகம் எதிர்நோக்கும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் மனித உணர்வுகளுடன் அவை பிணைத்து விடுகின்றன.
கலை, இலக்கிய ஆர்வலர்களும் ஆளுமைகளும் எம்மத்தியிலும் உள்ளனர். ஆதில் மவ்ஜூத், யாசிர் ஸுபைர் போன்றவர்கள் வளர்ந்துவரும் இளைஞர்கள். சிங்கள சகோதரரான அவந்த ஆட்டிகலயுடைய கார்ட்டூன்களை பாருங்கள். கருத்தாழமிக்கவை அவை. அரசியல் கருத்துக்களை தனது கார்ட்டூன்களினூடாக மக்கள் மனதில் பதியவைத்து விடுகிறார். நாம் கலை, இலக்கிய விடயங்களில் இன்னும் ஆழமாக வேரூன்ற வேண்டியுள்ளது. இறுகிய சமூகக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் நாம் கட்டாயமாக மேற்கூறிய கலை, இலக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்துவதுடன் அவற்றைக் கவனமாக வளர்த்தெடுக்க வேண்டியும் உள்ளது. அதன் கருத்து மேற்கத்தைய கலை, இலக்கியங்களை அவ்வாறே விழுங்கிவிட வேண்டும் என்பதல்ல. விமர்சன ரீதியானதொரு பார்வை அவசியப்படுகிறது. இஸ்லாம் முன்வைத்த பண்பாட்டு வரையறைக்குள்ளால் நின்று விமர்சன நோக்கொன்றை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. பிரதியீடுகள் நோக்கியும் நகர வேண்டும். ஹராம் பத்வா மாத்திரம் போதுமானதாக இல்லை என்பதே எமது அவதானம்.
02. கல்வி சார் சமூகம் எனும் நிலை நோக்கி நகர்தல்
அக்குறணை சமூகம் ஓர் வியாபார சமூகம் என்றுதான் கூறுவார்கள். அவ்வாறு கூறுவதில் நியாயமும் இருக்கிறது என்பதை சில இளைஞர்களுடன் உரையாடிப் பார்க்கின்றபோது புரிந்துகொள்ள முடிந்தது. 10ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனிடம் எதிர்கால படிப்பு பற்றி உரையாடினால், அவன் ஜப்பான் பற்றி எனக்குப் பாடம் எடுக்கிறான். எமது ஊரில் ஒரு தரமான வாசிகசாலை இன்னும் இல்லை. ஆனால் உணவகங்கள் ஒவ்வொரு நாளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரூபா கொடுத்து இறைச்சி வாங்கும் நாம் மாதத்துக்கொருமுறை முன்னூறு ரூபா கொடுத்து புத்தகம் வாங்கத் தயங்குகிறோம். இதுதான் எமது நிலை. ஆசிரியர் தொழிலுக்கு இங்கிருக்கும் அந்தஸ்தும் போட்டியும் கவலைக்கிடமானது.
இஸ்லாம் வலியுறுத்திய கல்வி, அறிவை விட்டும் நாம் எந்தளவு தூரமாகியிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது. கல்விசார் சமூகம் எனும் நிலை நோக்கிய நகர்வில் இரு எட்டுக்களும் அவசியமாகின்றன. ஒன்று கல்வியின் முக்கியத்துவத்தை உணர்தல். இன்றைய உலகு சிந்தனையை மையமாக வைத்து இயங்குகிறது என்பதற்கு அப்பால் இஸ்லாம் அதனை முக்கியமானதொரு வணக்கமாகக்கூட ஆக்கியிருக்கிறது. முதல் வஹி அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளும்படியோ, ஸுஜூத் செய்யும்படியோ ஏவவில்லை. மாற்றமாக ‘வாசிப்பீராக’ என்ற ஏவலே முஸ்லிம் சமூகத்துக்கான முதல் ஏவல். தொடர்ந்து வரும் வசனத்தில் இறைவனின் மிகப்பெரிய கொடை அவன் எழுதுகோல் கொண்டு கற்பித்தது என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. ஸூரா ரஹ்மானின் ஆரம்பம் அவன் மிகப்பெரும் கருணையாளன் எனக் கூறிவிட்டு, தொடர்ந்து வரும் வசனம் அவனது மிகப்பெரும் கருணை அல்குர்ஆனை கற்பித்ததென அல்லாஹ் குறிப்பிடுகிறான். கற்பித்தலும் கற்றலும் மிகப்பெரும் வணக்கங்கள். ஆசிரியம் மிகப் பெரும் பாக்கியம். தலைமுறை உருவாக்கும் மிகப்பெரியதொரு வேலைத் திட்டம். இதனை உணர்ந்து கொள்ளல் மிக அவசியமானது.
கல்வியின் இலக்கு மீளொழுங்கு செய்யப்பட வேண்டும் என்பதும் எமது அவதானமாகும். ஏன் கற்கிறேன்? ஏன் மேற்படிப்பு படிக்கிறேன்? ஏன் இத்துறையை தெரிவுசெய்கிறேன்? போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு மிகத் தெளிவான விடை இருக்க வேண்டும். அவ்விடையை அடைந்துகொள்ள மூத்தவர்கள் உதவ வேண்டும். சில இளைஞர்களிடம் மேற்கூறிய வினாக்களை தொடுத்திருக்கிறேன். பெரும்பாலானவர்களது விடை திருப்திகரமானதாக இல்லை. தனிப்பட்ட பொருளாதார மேம்பாட்டை மாத்திரம் இலக்காகக் கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்களது பதில்கள் மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. பொருளாதார அடைவை இலக்காகக் கொள்வதில் பிரச்சினையில்லை. ஆனால் அதனை மட்டும் இலக்காகக் கொள்வதுதான் சிக்கலானது. இறைதூதரது மிகப் பெரும் சுன்னா எதுவெனக் கேட்டால் அவரது தனிப்பட்ட வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொண்டதோடு அவரது மிக முக்கிய கரிசனையாக சமூக மேம்பாடு, சமூக சீர்திருத்தம், சமூகநலன் போன்றனவும் முக்கிய இடம் வகித்தன எனக் கூறுவேன். கல்வி இவ்விரு நோக்கங்களையும் அடையும் பயணத்தில் இருக்க வேண்டும். சமூகநலன் பற்றிய மனோநிலையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவது பாரிய முயற்சியை வேண்டி நிற்கிறது.
துறைசார்ந்த மாணவர்களை உருவாக்குவதும் அவசியமானது. அனைவரும் டொக்டராக வேண்டும் எனும் மனோநிலை மாற வேண்டும். மாணவரது ஆர்வத்துக்கும் ஆசைக்கும் இடம் வழங்க வேன்டும். சமூகம் அனைத்து துறைகளையும் மதிக்க வேண்டும். நாம் ஏற்கனவே பட்டியலிட்ட கலை, இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் அத்துறைகளில் வழிகாட்டப்பட வேண்டும். அரசியல், பொருளாதாரம், கட்டடக் கலை, புவியியல், மருத்துவம், உளவியல் போன்ற துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் அத்துறைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். இதுவே பங்களிப்பு செய்யும் சமூகமொன்றை உருவாக்க வழிவகுக்கும். இல்லாவிட்டால் தொடர்ந்தும் உரிமைகளை பேசும் சமூகமாகவே இருக்கப் போகிறோம். கடமைகளை சரிவர செய்யும் சமூகமாக மாறுவதும் அதனூடாக பங்களிப்பு செய்யும் சமூகமாக பரிணாம வளர்ச்சியடைவதும்தான் இலங்கை முஸ்லிம் சமூகம் மீதுள்ள பாரிய பொறுப்பு எனலாம்.-Vidivelli