ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா செல்ல பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கருத்திற் கொண்டே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராணுவ தளபதியும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க பயணத்தடை விதித்திருந்தது. இந்த நிலையிலேயே இலங்கை அரசாங்கம் நேற்று மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு அப்போதைய இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமை மிகப் பெரிய காட்டிக் கொடுப்பு என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை படையினர் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் 2015ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவை வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு அப்பாற் சென்று 2011ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே 2015 ஆம் ஆண்டு பிரேரணை தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன உள்ளடங்கிய நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்தவகையில் புதிய அரசாங்கம் ஏலவே எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்குக் கட்டுப்படாத போக்கை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் முதல் கட்டமே பிரதமரின் இந்த அறிவிப்பாகும். இதன் மூலம் பொறுப்புக் கூறலிலிருந்து விலகுவதற்கான சமிக்ஞையை அரசாகம் வெளிப்படுத்தியுள்ளது. இது எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் மீதான சர்வதேச நெருக்குதல்களை அதிகரிக்கவே வழிவகுக்கும்.
கடந்த அரசாங்கம் ஐ.நா. தீர்மானங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும் நடைமுறையில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை. எனினும் மைத்திரி – ரணில் அரசாங்கம் சர்வதேசத்திடம் நாட்டை அடகு வைத்துவிட்டதாகப் பிரசாரம் செய்தே இவ்வரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந் நிலையிலேயே தற்போது சர்வதேசத்துடன் முரண்படுகின்ற போக்கை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் கடந்த கால போர்க்குற்றங்கள் குறித்தோ அல்லது மனித உரிமை மீறல்கள் குறித்தோ எந்தவித வெளிப்படைத்தன்மையையும் பேணுவதற்கு தாம் தயாரில்லை என்பதை புதிய அரசாங்கம் மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்திலும் தனது அக்கறையற்ற போக்கை இவ்வரசாங்கம் தொடர்ச்சியாக வெ ளிப்படுத்தியே வந்துள்ளது.
ஆக, புதிய ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் கடைப்பிடித்த அதே இறுக்கமான சர்வதேச கொள்கைகளிலேயே தொடர்ந்தும் பயணிக்கப் போகிறார்கள் என்பது தெளிவாகியுள்ளது. இது உள்நாட்டில் இவ்வரசாங்கத்திற்கு நற்பெயரைக் கொடுப்பினும் சர்வதேச நாடுகள் மத்தியில் அதிருப்தியையே கொண்டு வரும். இந்த சவால்களை அரசாங்கம் எப்படிச் சமாளித்து முன்னேறப்போகிறது என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும்.-Vidivelli