- ஏ.ஜே.எம்.நிழாம்
தான் விரும்பாத பிரதமரையோ அமைச்சர்களையோ மாற்றும் அதிகாரம் முன்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருந்தபோதும் 19 ஆம் ஷரத்துக்குப்பின் அது முடியாது. பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல், அதன் ஆயுட்காலம் ஒருவருடம் பூர்த்தியான பின் கலைத்தல் ஆகிய அதிகாரங்களும் முன்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருந்தபோதும் 19 ஆம் ஷரத்துக்குப்பின் அவையும் முடியாது. இவை மட்டுமல்ல 19 ஆம் ஷரத்துக்குப்பின் பிரதமரை நியமிக்கும் அதிகாரமோ அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரமோ நிறைவேற்று ஜனாதிபதிக்கு இல்லை.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறும் கட்சித்தலைவரே பிரதமராகித் தனது அமைச்சரவையைத் தெரிவு செய்து கொள்வார். அந்த அமைச்சரவையை மாற்ற முடியாது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அது தோற்கடிக்கப்பட்டாலேயே அதைக் கலைக்கலாம், எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்திலிருந்த பிரதமரையும் அமைச்சரவையையும் நீக்கிப் பெரும்பான்மையற்ற கட்சியை ஆளும் கட்சியாக்கிப் புதிய பிரதமரையும் புதிய அமைச்சரவையையும் நியமித்திருக்கிறார். பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததோடு கலைத்தும் விட்டிருந்தார்.
ஆக, இவரது இச்செயற்பாடுகள் 19 ஆம் ஷரத்துக்கு மாற்றமானவையாகும். முடியுமானால் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என மஹிந்த தரப்பினர் சவால் விட்டார்கள். ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்ததை சட்டமா அதிபர் ஆதரித்தும் 19 ஆம் ஷரத்துப்படி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதுபோல் பெரும்பான்மையுள்ள தலைவரே பிரதமராகி அமைச்சரவையைத் தெரிவு செய்வார் எனவும் அதை மாற்றமுடியாது நம்பிக்கையில்லாப் பிரேணையில் தோற்றாலேயே கலைக்கலாம் எனவும் ஜனாதிபதி தனக்கு விருப்பமானவரை பிரதமராக்கவோ, அமைச்சர்களாகவோ நியமித்துக்கொள்ள முடியாது எனவும் 19 ஆம் ஷரத்துப்படி பொருட்கோடல் செய்தாக வேண்டும். யாப்பில் நிறைவேற்று அதிகாரம், சட்ட நிர்ணயம், நீதிக்கட்டமைப்பு என மூன்று பிரிவுகள் உள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 19 ஆம் ஷரத்து மூலம் பாராளுமன்றத்தோடு அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டதற்குமாக அதன் சுயாதீனத்தை தனது எல்லைக்கும் அப்பாற் சென்று அழித்திருக்கிறார். இந்நிலையில் நீதிக்கட்டமைப்பைத் தவிர பாராளுமன்றத்துக்கு நாதியில்லை.மஹிந்த வழியில் மைத்திரியும் நீதியைக்காவு கொண்டால் அதோ கதிதான்.
ஜனாதிபதி நாட்டின் தலைவராக மட்டுமே இருக்கவேண்டும். ஆட்சியின் தலைவராகப் பிரதமர் இருக்கவேண்டும். நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திடம் ஒப்படைப்பதன் மூலம் முப்படைகளின் பரிபாலனமும் பாராளுமன்றத்திடமே அமையவேண்டும். தனிப்பட்ட ஒருவரை நாட்டின் தலைவராகவும் ஆக்கி, ஆட்சித் தலைவராகவும் ஆக்கி, முப்படைத் தலைவராகவும் ஆக்கினால் எப்படியிருக்கும் இம்மூன்றும் மன்னராட்சியின் மொத்த அம்சமாகும். அரசியல் அறிவிலும் நடத்தைகளிலும் மிகவும் பின்தங்கிய நாடுகளுக்கு இவை ஒரு போதும் எடுபடாது. அரசியல் அறிவும் ஒழுக்க மேம்பாடுமுள்ள சில நாடுகளில் மன்னராட்சி இருக்கவே செய்கிறது. எனினும் பாராளுமன்றத்துக்கும் நீதிக்கட்டமைப்புக்கும் சுயாதீனம் வழங்கப்பட்டிருக்கிறது. மன்னருள்ள நாடுகளே அப்படியிருக்கையில் நாம்தான் சாதாரண ஒருவரை மன்னருக்குரிய குணாதிசய மன்னராக்கிக் கொண்டு தடுமாறுகிறோம். மன்னராகவே பிறந்தவர்போல் எம்மை ஆதிக்கம் செய்யும் நிலையை ஏற்படுத்தி விட்டிருக்கிறோம். இலங்கை ஜனநாயக சம தர்மக் குடியரசு அல்லவா?ஆக யாப்புக்கும் கட்டுப்படுத்த முடியாத தனி மனித நிறைவேற்று அதிகாரமே முன்னைய ஜனாதிபதிகளுக்கு இருந்தன. அதைக் கட்டுப்படுத்தவே 2015 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் ரணில் 19ஆம் ஷரத்தைப் பெரும்பான்மை பலத்தோடு இருபெரும் கட்சிகள் மூலம் ஏகப் பெரும்பான்மையோடு நிறைவேற்றியிருந்தார். இதன் மூலம் பாராளுமன்றத்தோடு தனிமனித நிறைவேற்று அதிகாரம் பகிரப்பட்டிருப்பதால் முன்னைய ஜனாதிபதிகளைப்போல் யாப்பை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் செயற்பட முடியாது.
19ஆம் ஷரத்து என்றால் என்ன? எனக்கே சரிவரத் தெரியாது என ஒருமுறை இவர் கூறியிருந்தார். அப்படியானால் இவர் தெரியாமலா அதை ஆதரித்திருந்தார். சென்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் ரணில் ஒரு முறை மாமா( ஜே.ஆர்)போட்ட முடிச்சை என்னால் அவிழ்க்க முடியும் எனக் கூறியிருந்தார். பாராளுமன்றத்துக்கும் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பகிரும் 19 ஆம் ஷரத்தால் அந்த முடிச்சு அவிழ்த்தல்? ஜனாதிபதி மைத்திரிக்கே 19ஆம் ஷரத்து பற்றி தெரியாதிருந்ததா?
ஆக அவர் ஜனாதிபதித் தேர்தலில் முழுமையாக அதிகாரத்துக்காகவே போட்டியிட்டிருக்கிறார். அவரை ரணில் பாராளுமன்றத்துக்குக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதியாகவே போட்டியிட வைத்திருக்கிறார் என்கிறது. அப்படியானால் இவ்விருவரும் எதற்காக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனி மனித நிறைவேற்று அதிகாரத்தைப் பாராளுமன்றத்துக்குப் பாரப்படுத்த மக்களாணை பெற்றார்கள். மைத்திரிபால சிறிசேன இன்னுமே மஹிந்த ராஜபக் ஷவின் மனப்போக்கிலேயே இருக்கிறார். 19ஆம் ஷரத்து என்ன என இவரே வினவியதன் மூலம் அது பற்றி இவர் அறியவில்லை எனலாம் அல்லது இவருக்கு அது அறிவிக்கப்படவில்லை எனலாம். அதை இயற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.ஜயம்பதி விக்ரமரத்ன அதுபற்றி இவருக்குத் தெளிவாகக் கூறவில்லையா?
18ஆம் ஷரத்து தற்போது அமுலில் இல்லை என நாம் நினைத்திருக்கையிலேயே மஹிந்தவுடன் மைத்திரி சேர்ந்தபின் பொலிஸ் அதிகாரம் மைத்திரியின் கைகளுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பாராளுமன்றத்தை ஜனாதிபதி தன்னிச்சைப்படி கலைத்தது செல்லாது என அண்மையில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியதால் அடுத்த கட்டமாக அதற்கும் ஆப்புவிழலாம். சுயாதீனத் தேர்தலிலேயே நாம் போட்டியிடுவோம் எனத் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறதே என்ன காரணம்? தேர்தல் அதிகாரத்தையும் மைத்திரி கையேற்கலாம் என நினைப்பதனாலேயாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் அடிக்கடி அரச ஊழியர்களை எச்சரிக்கிறார்கள் அந்த அதிகாரமும் ஜனாதிபதியிடம் வரலாம் எனும் நினைப்பிலேயாகும். ஆக, மைத்திரி மஹிந்தவுடன் இணைந்ததானது 19 ஆம் ஷரத்தை அழித்து 18 ஆம் ஷரத்தை உயிர்ப்பிக்கும் செயற்பாடாகவே அமையலாம். 19ஆம் ஷரத்தில் நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்தோடு பகிரப்பட்டுள்ளது எனக் காணப்படுகின்ற போதும் 18 ஆம் ஷரத்தின் வடிவில் நிறைவேற்று ஜனாதிபதியை வலுப்படுத்தி பிரதமர் பதவியை விட்டும் ரணிலையும் நீக்கி சபாநாயகரையும் முடக்கி ரணிலின் பாராளுமன்றப் பெரும்பான்மையையும் நிராகரிக்கிறார்கள்.
மஹிந்தவை தோற்கடித்து மைத்திரி மூலமே ரணில் நம்மை முடக்கினார். அதே மைத்திரி மூலம் நாம் ரணிலை முடக்கவேண்டும். எனும் எண்ணமும் நமது எம்பிக்களையும் சேர்த்துக்கொண்டே மைத்திரிக்கும் தெரியாமல் ரணில் 19ஆம் ஷரத்தை இயற்றிப் பாராளுமன்றக் கட்டுக்குள் அவரையும் வைத்தார். இதனால் நமது கட்சி மைத்திரி அணி, மஹிந்த அணி எனப் பிளவுண்டது. மஹிந்தவின் எதிர்கால அரசியல் கேள்விக்குறியானது. பாராளுமன்றத்துக்கே நிறைவேற்று அதிகாரம் எனக்கூறிக் கொண்டிருந்த ரணில் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது. ரணிலை நேரடியாக எதிர்த்துக் கொண்டு அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததால் தோல்வியுற்றதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இன்னொரு அணி ரணில் எதிர்ப்பாளர்களாகப் பிரிந்தமை மஹிந்த பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆரம்பித்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட வைத்து ரணிலை தோற்கடித்ததோடு மைத்திரியை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியமை அடுத்த வருட பாராளுமன்றத் தேர்தலிலும் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடத் தயாராகுகையில் மட்டுமன்றி, அடுத்த வருட மாகாண சபைத் தேர்தலிலும் கூட மூன்றாகப் பிளவுபட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியால் ரணில் அமோக வெற்றி பெறும் நிலை உருவாகியமை, இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை முற்றிலும் அழித்தவர் எனும் பழிபாவம் தனது தலையில் விழுந்து வரலாறு நெடுக வாசிக்கப்படலாம் என மைத்திரி அஞ்சியிருக்கலாம். அத்தோடு ரணிலுக்கு இவர் சார்பானவர் என்பதற்காகவே இவரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் வெறுக்கிறார்கள் என்பதும் இவருக்குத் தெரிந்துவிட்டது. ஐக்கிய தேசியக்கட்சியைச் சார்ந்தவனல்ல எனத் தன்னைக்காட்டிக் கொள்வதற்காகவே ரணில் மீதும் அக்கட்சியின் மீதும் எதிர்ப்பு மனநிலையைக் கொண்டிருந்தார். ஊழல் விடயங்களில் மஹிந்தவுக்கு விடுபாட்டு உரிமையையும் ரணில் விடயத்தில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டையும் இவர் விதிக்க அதுவே காரணமாகும். மஹிந்த தரப்புக்கு விசாரணைகளிலிருந்து காப்பீடும் வழங்கினார். இல்லாவிட்டால் ரணில் தரப்பின் கை ஓங்கும் எனும் மனநிலையே இதற்குக் காரணமாக இருக்கலாம். மஹிந்த எனும் பழம்பெரும் ஆருயிர் நண்பனான தலைவனோடு அவசரப்பட்டு சிந்திக்காமல் கோபமுற்று தானும் சம்பந்தப்பட்ட இறுதிப்போரில் இவர் மட்டும் குற்றவாளியாக்கப்பட்டிருக்கையில் மைத்திரி என்ன செய்தார்? தேர்தலில் எதிர்த்தரப்பினரால் வேட்பாளராகித் தோற்கடித்தார்.
எனினும், மஹிந்த நிலைகுலையவில்லை. தான் தோற்றது முதல் இற்றை வரை மைத்திரி– ரணில் இணைந்த கலப்பு அரசை கிரமமாகத் தொலைத்து எடுத்துக் கொண்டே வந்தார். தான் சிறுபான்மைகளால் வென்றவன் எனப்பெரும்பான்மையினர் கணிப்பிட்டதையும் முறியடிக்க மைத்திரி முனையவில்லை. இயற்கையாகவே அவரோடு சிறுபான்மைகளின் நெருக்கம் மிகவும் குறைவாகவே இருந்தது, ரணில் மூலம் அதை ஈட்டிக்கொள்ளவும் அவர் முயற்சிக்கவில்லை. யுத்த வெற்றியாளர் மஹிந்தவே எனப் பெரும்பான்மைச்சமூகம் கருதியதாலும் இவர் தனிமைப்பட்டார்.
சர்வதேச போர்க்குற்றச்சாட்டில் அகப்பட்ட மஹிந்தவைத் தோற்கடித்த மைத்திரி உள்நாட்டு எதிர்தரப்போடு இணைந்தமையை அவர்களால் சீரணித்துக்கொள்ள முடியவில்லை.
சர்வதேச போர்க்குற்றத்தை மறுப்பது நாட்டுக்கு ஆபத்து என்றாலும் கூட சிங்களவர் மத்தியில் பாரிய இமேஜை வளர்த்துக் கொள்வதற்காக மஹிந்த அதை மறுத்தார். மைத்திரி போர்க்குற்றத்தை ஏற்றுக்கொண்டு பொறுப்புக் கூறலையும் ஒப்புக்கொண்டு இணை அனுசரணையையும் பெற்றுக்கொண்டு 30/1 ஆம் 30/4 ஆம் நிபந்தனைகளுக்கும் உட்பட்டதால் மேற்படி நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் குற்றவிலக்கு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
இதன் மூலம் நிபந்தனைகள் மைத்திரியால் நிறைவேற்றப்பட்டாலேயே குற்றவிலக்கு கிடைக்கும் என்பது ஊர்ஜிதமாகிறது. அதற்கு இருமுறை தவணைகளும் வழங்கப்பட்டிருந்தன. உள்நாட்டு சூழல்களைக் கூறிக் கட்டம் கட்டமாகவே நிறைவேற்ற முடியும். இன்றேல் எதிர்விளைவுகள் ஏற்பட்டுவிடும். காரணம் இது நெடுங்காலப் பிரச்சினை என்றெல்லாம் மைத்திரி சாக்குபோக்கு கூறியவாறே 3 ½ ஆண்டுகளை கழித்தார். எனினும் அதற்கென உள்நாட்டில் நிகழ்ந்த செயற்பாடுகளில் அசமந்தமே காணப்பட்டன. இதனால் மஹிந்தவை மீறி எதையும் செயற்படுத்த முடியாது எனும் நிலைப்பாட்டுக்கு மைத்திரி வந்திருக்கலாம். ரணில் ஐ.நாவுக்கு சார்பாக நின்றால் சிங்கள மக்களுக்குதான் துரோகம் செய்து விட்டதாகப் பழிவிழும். எனவேதான் சாட்சியாளனிடம் அவர் சரணடையாமல் சண்டைக்காரனின் காலில் விழுந்து விட்டார் இருந்த இடத்துக்கே போய்விட்டார்.
18ஆம் ஷரத்தை மஹிந்த இயற்றுகையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 17 எம்.பிக்களை உள்வாங்கியே சாதித்தார். அப்போதும் அமைச்சுக்களும் வரப்பிரசாதங்களும் வழங்கப்பட்டன. அந்த வகையிலேயே இம்முறையும் முயன்றிருக்கிறார்கள். இதுவரை அந்த நடைமுறைக்கு எதிரான சட்டம் இயற்றப்படவேயில்லை. இது தனி மனிதனின் சுயாதீன உரிமை என அர்த்தப்படுத்துகிறார்கள். இதன் மூலம் சுயவிருப்பை மட்டும் பார்க்கிறார்களே தவிர, வாக்களித்தோரின் விருப்பை நிராகரித்து விடுகிறார்கள்.
இது கட்சியையும் கொள்கையையும் ஏலம் விடும் செய்கையாகும். யார் அதிகம் தருகிறார்களோ அவரது கொள்கையே எனதும் கொள்கை. எவரது கட்சியில் அமைச்சு உத்தரவாதமோ அதுவே எனதும் கட்சி, எனும் நடைமுறையே காணப்படுகிறது. நிரம்பிய குளத்தில் கொக்குகள் அதிகம். வற்றிய குளத்தில் கொக்குகள் தட்டுப்பாடு. எவர் எங்கு பாய்ந்தாலும் வசதி வாய்ப்பும் அமைச்சுப் பதவியும் அவரிடம் இருக்குமாயின் குறைவின்றி கூட்டம் நிரம்பி வழியும். வென்றவர் பக்கம் சேர்ந்து தோற்றவர் மீது வசைபாடுவார்கள்.
இத்தகைய அரசியல் சித்து விளையாட்டுக்கள் 1978ஆம் ஆண்டின் திறந்த பொருளாதாரத்தின் பின்பே வியாபித்தன. இது நிலையான அரச கட்டமைப்பிற்கு ஆபத்தானது. எனவே கட்சி மாறும் நிலை 19ஆம் ஷரத்தின் மூலம் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். இரு கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்க தடுமாறும் நிலை இதனாலேயே ஏற்பட்டிருக்கிறது.
தற்போது 19ஆம் ஷரத்திற்கு முரணாக நான் நினைத்தவரே பிரதமர் எனவும் நான் நினைத்ததே அமைச்சரவை எனவும் நியமித்திருக்கிறார். ரணிலுக்காக அவரது அமைச்சரவையையும் மாற்றியிருக்கிறார். இதன் மூலம் 19ஆம் ஷரத்து மூலம் பகிரப்பட்ட பாராளுமன்றத்தின் சுயாதீனத்தையும் கையேற்றிருக்கிறார்.
இவரது கூற்றுப்படி ரணிலைத் தவிர்த்து விட்டு கருஜயசூரியவோ, சஜித் பிரமதாசவோ பிரதமராவதற்கு இணங்கியிருப்பார்களாயின் அமைச்சரவையில் அதிக மாற்றம் நிகழ்ந்திருக்காது. கருஜயசூரியவும், சஜித் பிரேமதாசவும் விரும்பாததால்தான் இவர் மஹிந்தவை பிரதமராக்கி அமைச்சரவையை அவர் விருப்புக்கு விட்டாராம்.
ஐக்கிய தேசியக் கட்சியில் பலர் இருக்க மைத்திரிபால சிறிசேன ஏன் கருவையும் சஜித் பிரேமதாசவையும் அழைக்க வேண்டும். மேற்படி இருவரும் அடுத்த நிலை தலைவர்கள் என்பதாலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கலாம். ரணிலோடு சேர்ந்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்தியதுபோல் மஹிந்தவுடன் சேர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தும் செயலா? மஹிந்தவும் இதை நன்றாக சிந்தித்துப் பார்த்திருக்கலாம். காரணம் மைத்திரிக்கு ஐக்கிய தேசியக் கட்சியோடு அல்ல ரணில் மீது மட்டுமே தனிப்பட்ட பகை எனும் கருத்தே இதில் தொனிக்கிறது. அதுமட்டுமல்ல, தனிப்பட்ட விருப்பை முன்வைத்து இவர் பதவி மாற்றம் செய்தவரென்பதால் தன்னோடு இவருக்கு கோபம் ஏற்படுமாயின் ஜி.எல்.பீரிஸையோ, தினேஷ் குணவர்தனவையோ இவர் அழைத்துப் பேசலாம் அல்லவா? இவரால் மஹிந்த சூடு கண்ட பூனை. எனவே எப்போதும் விழிப்புடனேயே இருப்பார். அதனால் தான் மைத்திரியால் பிரதமரான மஹிந்த ராஜபக் ஷ இப்போது பொது ஜன ஐக்கிய முன்னணியில் தலைவராக ஆகிக்கொண்டார். ஆக ஜனாதிபதியாவதற்கு மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கீழிறக்கினார். அதுபோல் ஜனாதிபதி பதவியை இழந்ததற்காகவே மஹிந்த ராஜபக் ஷ பொதுஜன ஐக்கிய முன்னணி மூலம் அண்மையில் நிகழ்ந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை படுதோல்வியுறச் செய்திருந்தார்.
இனி அக்கட்சி மீண்டெழ வேண்டுமாயின் ரணிலோடும் மஹிந்தவோடும் சமராட வேண்டும். அந்த அளவுக்கு மைத்திரிபால சிறிசேன அக்கட்சியை கொண்டு வந்துவிட்டு விட்டார். அரசியலில் அனுபவம் பெற்ற சந்திரிகா பண்டாரநாயக்கா வழிகாட்டலை இவர் பேணியிருந்தால் அந்தக் கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
தற்போது அக்கட்சியை மீளுருவாக்கம் செய்ய சந்திரிகா பண்டாரநாயக்க முனைப்புக்காட்டுவதாக தெரிகிறது. அக்கட்சியின் ஸ்தாபக தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் குடும்பத்தேர்தல் தொகுதியான அத்தனகல்லையில் நிகழ்ந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் கூட இம்முறை மஹிந்தவின் கட்சியே வென்றிருந்தது. இதனால் இப்போது சந்திரிகாவும் குழம்பிப்போயிருக்கிறார்.
-Vidivelli