சாய்ந்தமருது பிரதேசத்திற்கு நகரசபை உருவாக்கப்பட்டிருக்கும் விடயத்தை தனி இராச்சியமாக்கும் முயற்சி என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கூறியிருக்கும் கருத்தை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இதுகுறித்து மன்றத்தின் பொதுச் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
“பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்திருக்கும் கருத்தானது சாய்ந்தமருது மக்களின் மூன்று தசாப்தகால அபிலாஷையையும் சாத்வீகப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியின் ஆத்ம சாந்திக்காகவே தீவிரவாதியின் பிரதேசமான சாய்ந்தமருத்துக்கு நகரசபை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இனவாத நச்சுக்கருத்தை வெளியிட்டிருக்கும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கூறியிருக்கும் கருத்து எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்று அமைந்திருக்கிறது.
உண்மையில் இனவாதிகளினால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற இவ்வாறான நச்சுக்கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் மீதான தப்பபிப்ராயத்தை இன்னும் அதிகரிக்க வாய்ப்பேற்படுத்தும் என்பதனால் எஸ்.எம்.மரிக்கார் போன்றோர் சிங்கள மக்களுக்குத் தெளிவை ஏற்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பை சுமந்திருக்கின்றனர்.
ஆனால் இதனை முற்றாக மறந்து, சமூக சிந்தனை என்பது கிஞ்சித்தும் இல்லாத ஒருவராக எஸ்.எம்.மரிக்கார், சிங்கள பேரின சக்திகளுக்கு தீனி போடும் வகையில் கருத்துரைத்திருப்பது மிகவும் கவலைக்கும் கண்டனத்திற்குமுரிய விடயமாகும். தனது சுயநல, கட்சி அரசியலுக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மரிக்கார் போன்றோர் உணர முன்வர வேண்டும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.-Vidivelli
- சாய்ந்தமருது நிருபர்