உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த புதிய அரசின் விசாரணைகளில் நம்பிக்கையில்லை
பொறுப்புக் கூறவேண்டிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை கூட்டணியின் தவிசாளராக நியமித்தமை தவறு என்கிறார் பாலித்த ரங்கே பண்டார
நாட்டுமக்கள் அனைவருமே உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்த்திருந்தனர். இதன் காரணமாகவே ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் கோத்தாபயவை வெற்றியடையச் செய்திருந்தனர்.
தாம் ஆட்சிக்கு வந்த உடனே தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழுவொன்றை அவர் நியமித்திருந்தாலும், அந்தக் குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் மக்கள் தற்போது நம்பிக்கையிழந்துள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அத்துடன் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய பிரதான நபரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணி தவிசாளராக நியமித்துள்ளமையானது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை சிதைத்துள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டிய பிரதான நபரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியின் தவிசாளராக நியமித்துள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ ஆணைக்குழுவொன்றை நியமித்த போது நான் அதற்கு நன்றி தெரிவித்திருந்தேன். ஆனால் அதனை தற்போது மீளப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
இவர்களது கூட்டணியின் தவிசாளராக மைத்திரியை அறிவித்ததை அடுத்து இந்த விவகாரம் தொடர்பில் இருந்த குறைந்தபட்ச நம்பிக்கையும் இல்லாமல் போயுள்ளது. பொதுவாகவே ஏதாவது ஒரு விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்கள் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதற்கு சாட்சிகள் இல்லை. அதேபோல் தான் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதால் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவும், முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமா என்பது தொடர்பில் உறுதியில்லை.
இதேவேளை, மிக் 27 போர் விமானங்கள் நான்கை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமானங்கள் நான்கை மீளத் திருத்தும் போதும் இடம்பெற்ற பணமோசடிகள் குறித்த விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை அரசாங்கம் பிணையில் விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தோன்றுகின்றது.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்சிஸையும் , அவரது குழுவினரையும் விசாரணை பொறுப்புகளிலிருந்து மாற்றியுள்ளதுடன், இந்த வழக்கு விசாரணை தொடர்பில் மன்றில் முன்னிலையாகி வந்த அரச சட்டத்தரணியையும் மாற்றியுள்ளனர். குற்றவாளியை காப்பாற்றுவதற்கான அவசியம் பொலிஸாருக்கு இல்லை. அப்படியென்றால் அரசாங்கமே அவரை காப்பாற்ற முயற்சிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.-Vidivelli