பிரதமர் நியமனம், பாராளுமன்றம் கலைப்பு ஜனாதிபதி செய்த தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவிப்பு
- ஏ.ஆர்.ஏ. பரீல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி தான்செய்த தவறை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்திக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி தனது தவறினைத் திருத்திக்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்காவிட்டால் நாடு பாரிய அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் வினவியபோதே அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“ஜனாதிபதியின் அரசியலமைப்புக்கு முரணான பிரதமர் நியமனம், பாராளுமன்றம் கலைப்பு என்பவற்றினால் இன்று ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு பலவந்தமான அரசாங்கமே பதவியில் இருக்கிறது. ஜனநாயகத்துக்கும் மக்கள் ஆணைக்கும் விரோதமான அரசாங்கத்தினால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளன. மக்களின் சகவாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, தான் விரும்பும் ஒருவரை பிரதமராக நியமிக்க முடியாது. பாராளுமன்றில் பெரும்பான்மை உள்ள தரப்பில் இருந்து ஒருவரையே பிரதமராக நியமிக்க முடியும் பெரும்பான்மை இல்லாத ஒருவரை பிரதமராக நியமித்துள்ளதனாலேயே இன்று அரசியல் ஸ்திரமற்ற நிலைமைக்கு மாறியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன, சந்திரிகா பண்டாரநாயக்க, ஆர். பிரேமதாஸ ஆகியோர் அரசியலமைப்பை மீறாமலேயே தமது பதவியினை முன்னெடுத்தார்கள். ஆனால் 62 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக நியமனம் பெற்ற மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டார்.
அகில இலங்கை காங்கிரஸ் ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்களுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தனது நிலைப்பாட்டினைத் தெரிவிக்கும். ஜனநாயகத்தின் வெற்றிக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உரத்துக்குரல் கொடுக்கும்.
ஜனாதிபதியின் தீர்மானங்கள், செயற்பாடுகள் அரசியலமைப்புக்கு விரோதமானது என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தனது தீர்மானத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு ஜனநாயகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
-Vidivelli