புத்தளத்தில் மு.கா. – அ.இ.ம.கா. இணைந்தே பயணிக்க வேண்டும்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆபிதீன் எஹியா
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தே பயணிக்க வேண்டுமென முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தொடர்ந்தும் இழந்து வந்ததன் விளைவாக பலதரப்பட்ட சவால்களையும், இழப்புகளையும், துரோகங்களையும் மட்டுமே எதிர்கொண்டு விரக்தியின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருந்த புத்தளம் மாவட்ட மக்களின் பிரார்த்தனைகள் எல்லாமே எப்படியாவது தமக்கான ஒரு எம்.பியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகவே உள்ளன. இந்த அடிமைத்தளை வாழ்விலிருந்து நாம் விடுபட வேண்டும். அதற்காகவே கடந்த ஒன்றரை வருட காலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் போராளிகளும், உயர்பீட உறுப்பினர்களும் புத்தளத்திலே பாராளுமன்ற பிரதிநிதித்துவமொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் தனித்தே போட்டியிட வேண்டுமென்று அயராது உழைத்து வருகிறார்கள்.
இதற்காக வேண்டி எந்த விட்டுக்கொடுப்புகளையும் செய்தும் பயணிக்கத் தயார் என்பதனையும் பெருமனதோடு கட்சியின் தேசியத் தலைமையும் உறுதியாக முடிவுக்கு வந்தது. இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான முடிவுகளை எடுக்கும் என்றிருந்த நிலையில் இன்று காலம் கனிந்து வந்திருக்கின்றது. கடந்த வாரம் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் புத்தளம் மாவட்ட போராளிகளின், உயர்பீட உறுப்பினர்களின் வேண்டுகோளையேற்று கட்சியின் தலைவர் இதற்கான சமிக்ஞையை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்த கட்டமாக இரண்டு தலைமைகளும் ஒன்றிணைந்து புத்தளம் மாவட்ட மக்களின் மனோ நிலையையும் போராளிகளின் மனோ நிலைகளையும் புரிந்து நியாயமாகவும் நேர்மையாகவும் இரு தலைமைகளுமே முடிவுக்கு வரவேண்டும். சலசலப்பில்லாத சுமுகமான ஒற்றுமையோடு பயணிக்கக்கூடிய ஆற்றல்களை இறைவன் வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். -Vidivelli
- முஹம்மது சனூன்