முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வரையறை செய்கின்ற வசதிகளை யாத்திரிகர்களுக்கு வழங்க முன்வரும் ஹஜ் முகவர் நிலையங்களுக்கு மாத்திரமே இம்முறை அனுமதிப்பத்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான உடன்படிக்கைகள் எதுவும் இதுவரை முகவர் நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்படாததால், அதுவரை முற்பணம் செலுத்துவதிலிருந்தும் அறவிடுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறு யாத்திரிகர்களையும் முகவர் நிலையங்களையும் திணைக்களம் கோரியுள்ளது இதுதொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரதமர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், ஹஜ் குழுவின் தலைவர் மற்றும் ஹஜ் முகவர்களின் சங்கங்களுக்கிடையே கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
பிரதமருடனான உடன்பாட்டின்படி குறிப்பிட்ட மூன்று விலை மட்டங்களின் அடிப்படையில் திணைக்களம் வரையறை செய்கின்ற வசதிகளை ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழங்க முன்வருகின்ற முகவர்களுக்கு மாத்திரமே ஹஜ் முகவர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
அதனடிப்படையில் குறிப்பிட்ட முகவர்களுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கையின் பிரகாரம் ஹஜ் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இவ்விரு முக்கிய நிபந்தனைகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால் அனைத்து ஹஜ் முகவர்களையும் விளம்பரங்கள் செய்வதிலிருந்தும் பணம் சேர்ப்பதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.
அத்துடன் ஹஜ் யாத்திரிகர்கள் எந்தவொரு இடைத்தரகர்களையும் அணுக வேண்டாம். இதுவரை ஏதேனும் முகவருக்கு முற்பணங்கள் செலுத்தியிருப்பின் ஆதாரத்துடன் திணைக்களத்திற்கு அறியத்தருமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli