பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்பட வுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதியும் பிரதமரும் கையொப்பமிடுவது மாத்திரமே எஞ்சியுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க பொதுத்தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்பு மனுக்கள் மார்ச் மாதம் 11 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படமுடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்தலின் பின்பு புதிய பாராளுமன்ற அமர்வு மே மாதம் 12 ஆம் திகதி இடம்பெறமுடியும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் 1 நள்ளிரவு கலைக்கப்பட்டால் பொதுத் தேர்தலை நடத்தக்கூடிய திகதி மற்றும் வேட்புமனு தாக்கல் செய்யும் காலஎல்லை என்னும் விபரங்களைக் கோரி ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதி குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு பாராளுமன்றத்தைக் கலைத்தால் வேட்புமனு கோரும் காலஎல்லை, தேர்தல் நடாத்தும் திகதி புதிய பாராளுமன்றம் ஆரம்பிக்கும் திகதி எனும் விபரங்கள் பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட வேண்டியுள்ளதாலே ஜனாதிபதியின் செயலாளர் அந்த விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தற்போது நாட்டுக்கு வெளியில் இருப்பதால் அவர் நாடு திரும்பியதும் ஜனாதிபதியின் செயலாளரது கடிதத்துக்கு பதில் அனுப்புவார் என தேர்தல் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான சட்டநிலைமை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரினால் சட்டமா அதிபரிடம் அண்மையில் ஆலோசனை கோரப்பட்டது. இதற்கு சட்டமா அதிபர் பதில் வழங்கியுள்ளார். 19 ஆவது அரசியலமைப்பின் திருத்தத்திற்கு அமைய எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதிக்குப் பிறகு ஜனாதிபதியினால் எந்தச் சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என அவர் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.-Vidivelli
- ஏ. ஆர்.ஏ. பரீல்