கெப்பிடல் சிட்டி எனும் நிறுவனத்துக்கு மன்னார் பகுதியில் 78 ஏக்கர் காணியை போலிக் காணி உறுதிகளூடாக 492 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாக சி.ஐ.டிக்கு கிடைத்திருந்த முறைப்பாட்டுக்கமைவாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான அவரை 25,000 ரூபா ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல, கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இவ்வாறு அனுமதியளித்தார்.
பிணையாளர் ஒருவர் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டுமென உத்தரவிட்ட பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன, சந்தேகநபருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்தார். வாராந்தம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் எனவும் சந்தேகநபருக்கு நீதவான் மேலதிக பிணை நிபந்தனை விதித்ததுடன், பிணையில் விடுதலையானதும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
கடந்த 2015 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி 78 ஏக்கர் காணியை போலிக் காணி உறுதிகளூடாக 492 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாக சி.ஐ.டிக்கு கிடைத்திருந்த முறைப்பாட்டுக்கமைவாக, கடந்த 2016 ஆம் ஆண்டு சி.ஐ.டி. கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில், மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபா பெறுமதியான 40 ஏக்கர் காணியை போலிக் காணி உறுதிகளை தயார் செய்து கையகப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில், வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கமைய ரிப்கான் பதியுதீனை சி.ஐ.டி. சந்தேக நபராக கடந்த 2019இல் நீதிமன்று பெயரிட்ட நிலையில் அவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அவரைத் தேடிவருவதாக சி.ஐ.டியினர் மன்றில் தெரிவித்திருந்தனர். அதன்படி அவரது வீட்டுக்கு சென்று அவர் தொடர்பில் விசாரித்ததாகவும் அவர் வர்த்தக நடவடிக்கைக்காக கொழும்புக்கு வந்துள்ளதாக அவரது தயார் கூறியபோதும், ரிப்கானின் தொலைபேசியும் செயலிழந்துள்ளதாக சி.ஐ.டியினர் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இவ்வாறான பின்னணியில் கடந்த ஜனவரி 22 ஆம் திகதி மாலை சி.ஐ.டிக்கு சென்று சரணடைந்துள்ள ரிப்கான் பதியுதீனை சி.ஐ.டியினர் கைது செய்து ஜனவரி 23 மன்றில் ஆஜர் செய்தனர். அது முதல் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக கடந்த 2015 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி, அப்துல் காசிம் மொஹம்மட் சலாஹி என்பவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிக விசாரணைப் பிரிவில் விஷேட முறைப்பாடொன்றை செய்திருந்தார். அந்த முறைப்பாட்டுக்கமையவே சி.ஐ.டி. இந்த நில மோசடி விவகாரத்தில் விசாரணைகளை ஆரம்பித்தது. குறித்த முறைப்பாட்டில், தாம் 40 ஏக்கர் கொண்ட காணித் துண்டுகள் இரண்டை 240 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்ததாகவும், அந்தக் காணியை எல்லையிட்டு வேறு வேறாகப் பிரித்ததாகவும் முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு காணியை கொள்வனவு செய்து சில மாதங்களில் ரிப்கான் பதியுதீன் என்பவர், தான் கொள்வனவு செய்த காணிகளுக்கு உரிமை கோரிக்கொண்டு , தனக்கு தனது காணிக்குள் உள்நுழையத் தடையேற்படுத்தியதாகவும், தனது சொத்துக்கு போலி உறுதிகளை தயாரித்து அவற்றை கையகப்படுத்தி சொத்து மற்றும் பண இழப்பை ஏற்படுத்தியதாகவும் முறைப்பாட்டாளரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரித்து வரும் சி.ஐ.டி., தண்டனை சட்டக் கோவையின் 400,403,454, 457, 459, 102, 113(அ) பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமொன்று இடம்பெற்றுள்ளதாகக் கருதியே மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்