நாட்டின் எதிர்காலத்திற்கான இலக்கை எய்துவதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்போம் : அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஜனாதிபதிக்கு கடிதம்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஆற்றிய உரைக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
எமது நாட்டின் அனைத்து மக்களுக்கும் இன, மத வேறுபாடின்றி ஜனநாயக உரிமைகள் வழங்கப்படும் என்ற உங்களது உரை வரலாற்று புகழ்மிக்கதாகும். நாங்கள் ஜம்இய்யத்துல் உலமா உங்கள் உரைக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கிறோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஜனாதிபதி கோத்தாபய ராஜக் ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி மற்றும் அதன் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தொலைநோக்கு ஆற்றல் மிக்க உங்களை எங்களது தலைவராகப்பெற்றமை குறித்து பெருமைப்படுகிறோம். நீங்கள் எமது தாய்நாட்டின் அனைத்து மக்களினது ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தியுள்ளீர்கள். இலங்கையர்கள் அவர்கள் எந்த மதம், இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் தங்களது விரும்பிய மதத்தை அனுஷ்டிப்பதற்கு சுதந்திரம் இருப்பதாக உங்கள் உரையில் தெரிவித்திருக்கிறீர்கள்.
உரிமை இருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். நாங்கள் முஸ்லிம் சமூகம். இந்நாட்டில் 1000 வருடங்களுக்கும் மேலாக சமாதானத்துடனும் ஒருமைப்பாட்டுடனும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் வாழ்ந்து வருகிறோம்.
நீங்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் எதிர்காலம் குறித்து நீங்கள் கொண்டுள்ள தொலைநோக்கினை எய்துவற்கு நாங்கள் எங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். இலங்கை மக்கள் அனைவரதும் சுதந்திரத்துக்கு நீங்கள் உத்தரவாதமளிப்பீர்கள் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு.
முஸ்லிம்கள் எப்போதும் உங்களுக்கும் உங்கள் சேவைகளுக்கும் இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் ஒத்துழைப்பும் நல்குவார்கள்.
தாய்நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் சேவை செய்வதற்காக உங்களது நலத்துக்கும் நீடிய ஆளுக்கும் வாழ்த்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli
- ஏ. ஆர்.ஏ. பரீல்