ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பொதுக்கூட்டணி அன்னம் சின்னத்தில் போட்டியிடுவற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றது. பங்காளி கட்சிகள் அனைத்தையும் இணைத்துக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான பலமான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்போம் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,
இன்று கூடவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தவிர்க்க முடியாத காரணிகளினால் நாளை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மிகுதியாகவுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் நாளை சுமுகமான தீர்வு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பொதுக்கூட்டணி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றன. கூட்டணியின் தலைமைத்துவம் மற்றும் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு செயற்குழுவின் ஊடாக தீர்வு எடுக்க முடிந்திருந்தன. இருப்பினும் கூட்டணியின் சின்னம் மாத்திரமே தொடர்ந்து இழுபறி நிலையில் காணப்பட்டது.
சின்னம் குறித்து இரு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் தனிப்பட்ட யோசனைகள் குறித்து பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயகத்திற்கும். தனிப்பட்டவர்களின் கருத்திற்கும் முன்னுரிமை வழங்கும் என்பதால் கட்சியின் தலைவர் முன்னாள். பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து தரப்பினரது கோரிக்கைகளும் பரிசீலனை செய்யற்பட வேண்டும். என்று குறிப்பிட்டிருந்தார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் பலமான கூட்டணி தோற்றம் பெறும். அனைத்து பங்காளி கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பலமான அரசாங்கத்தை எம்மால் ஸ்தாபிக்க முடியும். போலியான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பயனற்றது என்ற உண்மை மூன்று மாத நிர்வாகத்தில் வெளிப்பட்டு விட்டது.
இன்று கூடவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை கூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்டணியை தொடர்புபடுத்தி கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுப்பாடுகள், முரண்பாடுகள் ஆகியவற்றிற்கு நாளை நிரந்தர தீர்வு எட்டப்படும் என்றார்.-Vidivelli