குறுகிய கால நோக்கங்களை முன் வைத்து எடுக்கும் முடிவுகளால் அழிவுகளே அதிகம் : முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கர்
குறுகிய கால நோக்கங்களை முன் வைத்து எடுக்கும் முடிவுகள் காரணமாக அழிவுகளே அதிகம் என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கர் தெரிவித்தார்.
கண்டி மல்வத்தை விகாரையில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அளுத்கம கந்தே விகாராதிபதி கொங்காவிட்ட விமலசார தேரர் பிரதான சங்கநாயக்கர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டு அது தொடார்பான நியமனக்கடிதம் வழங்கும் வைபவம் கண்டி மல்வத்து விகாரையில் இடம்பெற்றது. களுத்துறை மற்றும் பெந்தோட்டைப் பிரதேசங்களுக்கான பிரதான சங்கநாயக்கராக மேற்படி தேரர் நியமிக்கப்பட்டார். அதில் கலந்துகொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் மேலும் தெரிவித்ததாவது,
பாதையில் செல்லும் பிரதானியைக் கண்டதும் உடனே தலையிலுள்ள துண்டை கழற்றி அவர் காலில் விழுந்து நமஸ்காரம் பெற்றுக் கொள்ளும் யுகம் தற்போது மாறிவிட்டது. இது அடிமைத்துவ மனோ பாவம் குறைந்து, ஜனநாயகம் மலர்ந்துள்ள காலமாகும். அந்த அடிப்படையில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஐ.தே.க. ஈடுபடும். நீண்டகாலம் ஜ.தே.க. ஜனநாயக மரபுகளைப் பின்பற்றி வந்துள்ளது. ஜக்கிய தேசியக் கட்சியானது ஜனநாயகம், பொது உடைமை வாதம், தேசிய ஒற்றுமை என்ப வற்றின் அடிப்படையில் இயங்கும் ஒரு கட்சியாகும்.
சகல விடயங்களுக்கும் ஜனநாயக ரீதியில் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் இக்காலக்கட்டத்தில் நாடு புதுயுகம் நோக்கிச் செல்கிறது. ஏனைய கட்சிகளை விட ஐ.தே.க.வில் ஜனநாயம் அதிகளவில் காணப்படுகிறது. தனி நபர் தனிக் குழு என்பதை விட எமக்குத் தேவை முழு சமூகத்துக்குமான பரந்துபட்ட விடயங்களாகும். அதுவே எமக்கு முக்கியமாகும்.
கட்சிக்குள் உருவாகும் தலைமைத்துவப் பிரச்சினைகளை கட்சியே தீர்த்துக்கொள்ளும் அதேநேரம் யாரும் பரசூட் மூலம் குதித்து அதனைக் கைப்பற்ற முடியாது. பெரும்பாலான மக்களும் கட்சியின் பெரும்பாலான அங்கத்தவர்களும் தெளிவான ஜனநாயகப் பண்புகளுடன் உள்ளனர்.
நாட்டைத் துண்டாடும் ஒரு முறைக்குப் பதிலாக நாட்டை வளப்படுத்தும் ஒரு முறை அடுத்த பொதுத் தேர்தலில உருவாக்கப்படும்.
கட்சியின் பிரதான அபேட்சகராக வருபவருக்கு ஒரு சில முடிவுகளை எடுக்கும் தன்மை இருக்க வேண்டும். ஒருவர் பிரதான வேட்பாளராக இருக்க அவரை கட்டுப் படுத்தும் ரிமோட் கொண்ட்ரோலை வேறு ஒருவர் வைத்திருப்பாராயின் கட்சியின் பயணம் வெற்றி அளிக்காது. கட்சியின் தலைவராக உள்ளவர் ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி இருக்க வேண்டும். அவர் எங்கோ இருந்துகொண்டு கண்ணுக்குப் புலப்படாத ஒரு கட்டுப் பாட்டாளராக இருக்க முடியாது.
இனரீதியான கட்சிகள் அன்றி தேசிய ரீதியிலான கட்சிகளே எமது நாட்டுக்குத் தேவையானதாகும். ஆனால் தேசிய கட்சி என்று சொல்லும் சில கட்சிகள் இனரீதியான சிந்தனைகளையே வளர்க்கின்றனர். அவ்வாறு இன ரீதியான சிந்தனைகளை தோற்றுவித்த கட்சிகள் குறுகிய காலத்தில் வெற்றிகளை அடைந்தாலும் தேசிய ரீதியில் அவர்கள் நாட்டுக்கு அழிவுகளையே விட்டுச் சென்றுள்ளனர். அபிவிருத்தியை அவர்களால் அடைய முடியாது. 1956 ஆம் ஆண்டு 24 மணி நேரத்தில் சிங்களம் தேசிய மொழி என்ற கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதே அரசியல் வாதிகளின் பிள்ளைகளால் பிற்பட்ட காலத்தில் சிங்களமும் தமிழும் தேசிய மொழிகள் என்ற இரு மொழிக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. குறுகிய கால நோக்கங்களை முன் வைத்து எடுக்கும் முடிவுகள் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தது மட்டுமல்லாது பலகோடி சொத்துக்களையும் இழக்க வேண்டி வந்தது. இது பற்றி சிந்தித்தே காலம் கழிந்ததே ஒழிய நாட்டை முன்னேற்ற நேரம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். -Vidivelli
- ஜே.எம்.ஹாபிஸ்