கஷோக்ஜியின் கொலையுடன் தொடர்புபட்டவர்களை நாடுகடத்துமாறு சவூதியிடம் துருக்கி வேண்டுகோள்
விசாரணைக்கு சவூதி ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் குற்றச்சாட்டு
விசாரணைக்கு சவூதி ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனத் தெரிவித்துள்ள துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தைய்யிப் அர்துகான், இஸ்தான்பூலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பத்தி எழுத்தாளரான கஷோக்ஜியின் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை சவூதி அரேபியா நாடுகடத்த வேண்டுமென கடந்த சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த நவம்பர் 30 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 1 ஆம் திகதி வரை ஆஜென்ரீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் நடைபெற்ற ஜீ 20 உச்சி மாநாட்டின்போது சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானிடம் துருக்கிய ஜனா திபதி ரிசெப் தைய்யிப் அர்துகான் இதனை உறுதிபடத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் கமால் கஷோக்ஜி தனது விவாகரத்து தொடர்பான ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இஸ்தான்பூலிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தினுள் கடந்த ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி நுழைந்ததன் பின்னர் காணாமல் போயிருந்தார்.
இரண்டு வாரங்களுக்கும் அதிகமாக மறுதலித்துக் கருத்துத் தெரிவித்து வந்த சவூதி அரேபியா, துருக்கியின் இஸ்தான்பூலிலுள்ள தனது நாட்டுத் துணைத் தூதரகத்தினுள் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை ஏற்றுக்கொண்டது.
கஷோக்ஜியை கொலைசெய்து அவரது உடலுறுப்புக்களை வேறாக்கியதாகக் கூறப்படும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 18 சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கொலை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் அந் நாடு அறிவித்துள்ளது.
சர்வதேச சமூகத்தின் முன்னாலுள்ள கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டுமானால் இவ்வாறான சந்தேக நபர்கள் துருக்கியிலேயே விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டுமென அர்துகான் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்
இந்தப் படுபாதக செயலுக்கு உத்தரவிட்டவர்களும் நடைமுறைப்படுத்தியவர்களும் யாராக இருந்தாலும் அவர்கள் உடனடியாகக் கண்டறியப்படவேண்டும். அவ்வாறான சூத்திரதாரிகள் கண்டறியப்படாவிட்டால், ஒட்டுமொத்த உலகத்தையும்; இஸ்லாமிய சமூகத்தையும் திருப்தியடையச் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
கஷோக்ஜியின் உடல் எங்கிருக்கிறது, கஷோக்ஜியைக் கொலை செய்ய வருகைதந்த குழுவினருக்கு உதவியவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் துருக்கிய விசாரணையாளர்களுக்கு சவூதி அரேபியா உதவி வழங்க மறுத்து வருகின்றது எனவும் அர்துகான் குற்றம்சாட்டினார்.
பிராந்தியத்தில் சவூதி அரேபியாவுடன் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள விரும்பும் துருக்கிய ஜனாதிபதி அர்துகான் அரச குடும்பத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதை தான் விரும்பவில்லை எனத் தெரிவித்தார்
-Vidivelli