“இலங்கையன் என்ற உணர்வுடன் அனைவரும் ஒன்றுபடுவதுதான் உண்மையான சுதந்திரத்தின் அர்த்தமாகும்”
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆற்றிய சிறப்புரை
அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதன் விளைவாகவே பெறுமதியான இந்த சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம். இன்று எமது சுதந்திரத்திற்காகத் தம்மை அர்ப்பணித்து செயற்பட்டவர்களை நன்றியுடனும், விசுவாசத்துடனும் நினைவு கூர்வதற்காகவே இங்கே ஒன்று கூடியுள்ளோம்.
அரசர்களின் ஆட்சியின் கீழிருந்த போதும், அந்நிய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த போதும் நாம் எவ்வாறு இருந்தோம் என்பதை தற்போது எமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்துடன் நாம் ஒப்பிட்டு உணர்ந்துகொள்ள முடியும்.
அரசர்களின் ஆட்சியின்போது பரம்பரை மூலமாக அல்லது ஆயுதங்கள் மூலமாகவோ ஆட்சியைக் கைப்பற்றினர். காலனித்துவ ஆட்சியின்போது 1931 இல் ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது சர்வஜன வாக்கெடுப்பு முறை ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆசியாக் கண்டத்தில் வேறு எந்த நாட்டிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடைமுறைப்படுத்தப்படாத சந்தர்ப்பத்தில் எமது நாட்டில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது பெருமைக்குரிய விடயமாகும். ஆனால், இன்று சுதந்திரமான, சுயாதீனமான, ஜனநாயக ரீதியிலான வாக்குப்பலத்தின் மூலம் நாம் அரசை தேர்ந்தெடுக்கின்றோம்.
1948 இல் சுதந்திரம் பெற்று விடுதலையடைந்த போதும், 1973 மே 22 இல் இலங்கை ஜனநாயக சோஷலிசக குடியரசாக்கப்பட்டதன் பின்னரே நாம் முழுமையான பூரணத்துவமான சுதந்திரத்தைப் பெற்றோம். இதன் காரணமாகவே இந்நாட்டு மக்கள் யாவரும் சமத்துவமாக, சமவுரிமை பெற்றவர்களாக வாழ்ந்து வருகிறோம். இதற்கு உதாரணமாக உங்கள் ஸாஹிராக் கல்லூரியைக் குறிப்பிடலாம். ஒரு முஸ்லிம் பாடசாலையாக இருந்தாலும் சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் கற்பிக்கப்படுவதுடன், முஸ்லிம் மாணவர்களுடன் சொற்பளவு பௌத்த, இந்து, கிறிஸ்துவ மாணவர்களும் கல்வி கற்கின்றனர்.
மேலும், கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளின் போது எமது நாட்டின் வீரர்களுக்கு சகலரும், இன, மத, மொழி வேறுபாடின்றி எமது நாட்டின் கொடிகளை அசைத்து உற்சாகமாக ஆதரவளிப்பதும் எமது தேசிய ஒற்றுமைக்கு சிறந்த சான்றாகும். இத்தகைய சமத்துவம், சமாதானம், ஒற்றுமை போன்ற உயரிய பண்பாடுகளை சுதந்திரத்தின் மூலமே பெற்றுக்கொண்டோம். அவ்வகையில் ஸாஹிரா கல்லூரி மாணவர்களாகிய நீங்களும் ஒன்றுகூடி, தேசிய கீதமிசைத்து, தேசியக் கொடிகளை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் அசைத்துக் கொண்டாடுவது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையாக அனைவரும் கொண்டாடும் ஒரு நிகழ்வு எமது சுதந்திரமாகும். நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில் ஒற்றுமையுடன் இணைந்து செயற்படுவதே சுதந்திரத்தின் வெளிப்பாடாகும். தற்போதைய சூழ்நிலையில் எமது நாட்டிற்கு அவசியமானதும், அவசரமானதும் நமது ஒருமைப்பாடாகும்.
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமிடம், அவரைப்பற்றி வினவப்பட்ட போது, நான் பிறப்பால் இந்தியன், மொழியால் தமிழன், மதத்தால் முஸ்லிம் என்று பதில் கூறினார். நாமும், நான் இலங்கையன் என்று கூறக்கூடியவர்களாக மாறவேண்டுமென உங்களிடம் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன். இலங்கையன் என்ற கொடியின் கீழ் நாம் அனைவரும் ஒன்றுபடுவதுதான் உண்மையான சுதந்திரத்தின் அர்த்தமாகும்.
புனித குர்ஆனில், “ நீங்கள் அனைவரும் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. சிங்கள மொழியில், “ ஒற்றுமையே உயர்வு தரும் என்றும் ஆங்கில மொழியில், “ஒற்றுமையே பலம்” (unity is strength) என்றும், தமிழ் மொழியில்,” அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்றும் முதுமொழிகள் கூறுகின்றன. இவை யாவும் ஒற்றுமையின் அவசியத்தையும் வலிமையையும் வலியுறுத்தும் வாசகங்களாகும்.
இந்நாட்டில் வாழும் மக்களாகிய எம்மிடையே இன, மத, மொழி வேறுபாடுகள் மட்டுமன்றி கலாசாரம், பண்பாடு, சம்பிரதாயம் போன்ற பல வேறுபாடுகளும் காணப்படுகின்றன. ஆயினும், அடுத்தவருடைய உரிமைகளைப் பாதிக்காமல், எமது உரிமைகளுக்கும் பாதிப்பேற்படாமல் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.
சூப் போன்று ஒன்றுக்குள் ஒன்று கரைந்து, கலந்துவிட வேண்டும் என்னும் உதாரணம் தவறானதாகும். நாம் அனைவரும் உணவின் போது பரிமாறப்படும், சலாதுக் கோப்பை (Salad bowl) இல் காணப்படுவது போன்று இணைந்திருக்க வேண்டும். சலாதுக் கோப்பையில் காணப்படும் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறான குணம், மணம், சுவை இருந்தாலும் அவற்றின் தனித்தன்மை பாதிக்கப்படாது சுவைக்கின்றோம். இவ்வாறே எமக்கிடையேயும் இன, மத, கலாசார, பண்பாடு எனப் பல வேறுபாடுகள் இருப்பினும் ஒவ்வொருவரும் தமது கலாசாரம், பண்பாட்டைப் பின்பற்றுவதுடன் மற்றவர்களின் கலாசாரம், பண்பாட்டை கண்ணியப்படுத்தி ஒற்றுமையுடனும் மற்றவர்களின் உரிமைகளையும் மதித்து செயற்பட வேண்டும்.
இத்தகைய சமாதானத்தையும், சமத்துவத்தையும் ஏனையவர்களின் உரிமைகளை மதித்து நடக்கும் உயரிய பண்பாட்டையும் எமக்கு வழங்குவது நாம் பெற்றுக்கொண்ட பெறுமதியான சுதந்திரமாகும்.-Vidivelli
- தொகுப்பு: யாழ் அஸீம்