இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தனது இறுதித் தீர்மானத்தை இன்றைய தினம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை வழமைபோன்று முகவர்களிடம் ஒப்படைக்காது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள ஹஜ் குழுவே முன்னெடுக்கவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இது பற்றி இறுதித் தீர்மானம் இன்றைய தினம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்த போதிலும் இது நடைமுறைச்சாத்தியமற்ற விடயம் என்றும் முகவர்களின் ஒத்துழைப்பின்றி ஹஜ் குழுவினால் இதனைத் தனித்து முன்னெடுக்க முடியாது என்றும் முகவர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆகக் குறைந்த தொகையான 5 இலட்சம் ரூபா எனும் ஹஜ் கட்டணமும் சாத்தியமற்றது என முகவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் தமது ஆலோசனைகள் அடங்கிய ஆவணத்தை இரு பிரதான முகவர் சங்கங்கள் இணைந்து திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ வெற்றிபெற்றதன் பின்பு அமையப் பெற்ற அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரேனும் அமைச்சராக நியமிக்கப்படவில்லை. இதனால் கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் பொறுப்பில் இருந்த முஸ்லிம் சமய விவகார அமைச்சு கை நழுவிப்போனது. முஸ்லிம் விவகாரங்களுக்கென தனியான அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.
முஸ்லிம் சமய விவகாரமும் கலாசார அமைச்சுக்குப் பொறுப்பான பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் விடயதானங்களுக்குள் உட்பட்டது. முஸ்லிம் விவகாரங்களை பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ பொறுப்பேற்றுக் கொண்டதும் மர்ஜான் பளீலின் தலைமையில் ஐவர் கொண்ட ஹஜ் குழுவொன்றினை நியமித்தார். ஹஜ் உடன்படிக்கையில் இலங்கையின் சார்பில் கைச்சாத்திடுவதற்கு அக்குழுவையே அனுப்பி வைத்தார்.
2020 ஆம் ஆண்டுக்கு சவூதி ஹஜ் அமைச்சு இலங்கைக்கு 3500 கோட்டா வழங்கியுள்ளது. இந்நிலையில் தான் இலங்கையின் ஹஜ் ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை ஹஜ் குழு உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமெனவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஹஜ் முகவர்களில் பலர் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதையும் ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து கூடுதலான பணத்தை அறவிடுவதையும் கருத்திற் கொண்டு ஹஜ் யாத்திரிகர்களின் நலன்கருதி இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஹஜ் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும் எல்லா முகவர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவர்களல்லர் ; ஒரு சில முகவர்களின் தவறுகளுக்காக எல்லா முகவர் அமைப்புகளையும் ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல என முகவர்கள் தமது ஆட்சேபனையை முன்வைத்துள்ளனர். அத்துடன் அரசாங்கத்தினால் முதல் தடவையிலேயே 3500 யாத்திரிகர்ளையும் அழைத்துச் சென்று நிர்வகிப்பது சாத்தியமற்றது என்றும் பலர் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
இந் நிலையில் இவ்விவகாரத்தில் அரசியல் மற்றும் முகவர்களின் நலன்களுக்கப்பால் யாத்திரிகர்களின் நலன்களை முன்னிறுத்தியே தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும். பிரதமர் இறுதித் தீர்மானம் எடுக்கின்ற போதிலும் ஹஜ் யாத்திரை குறித்தோ, யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் குறித்தோ அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான் இவ்வருட ஹஜ் யாத்திரையை வெற்றிகரமாக முன்னெடுப்பதாயின் அதற்காக கைக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதன்போதே சிறந்ததொரு தீர்மானத்தை அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.-Vidivelli