ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் எயார்வேய்ஸ் ( ETIHAD AIRWAYS) இலங்கைக்கான விமான சேவையைத் தொடங்கி 10 ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகிறது.
எதிஹாட் எயார்வேய்ஸ் முதன்முதலில் 2004 ஆம் ஆண்டில் கொழும்புக்கான விமான சேவையைத் தொடங்கியது. அதன்பிறகு ஒரு குறுகிய இடைநிறுத்தத்தை தொடர்ந்து ஜனவரி 1, 2010 அன்று மீண்டும் சேவையைத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை இலங்கை பயணிகளை எதிஹாடின் உலகளாவிய வலைப்பின்னலுடன் இணைக்கின்றது.
இந்த விமானம் 2010 முதல் இவ்விரண்டு நகரங்களுக்கும் அதற்கு அப்பாலும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை அழைத்துச் சென்றுள்ளது. பயணிகள் அபுதாபி மற்றும் கொழும்பு இடையே சேவைகளைப் பயன்படுத்துவதுடன் இச்சேவையானது மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் வட அமெரிக்கா முழுவதுமுள்ள நகரங்களையும் இணைக்கின்றது. இவற்றில் ஆம்ஸ்டர்டாம், கெய்ரோ, பிராங்பேர்ட், லண்டன், மான்செஸ்டர், நியூயோர்க், பாரிஸ், ரோம், டொரன்டோ மற்றும் வாஷிங்டன் ஆகியவையும் அடங்கும்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உடனான எதிஹாட் பங்காண்மை மூலம், பயணிகளை கொழும்பு வழியாக மாலைதீவு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள இடங்களுக்கு மாற்றமுடியும்.
எதிஹாட் எயார்வேய்ஸின் இந்தியத் துணைக் கண்டம் மற்றும் இலங்கைக்கான துணைத் தலைவர் நீர்ஜா பாட்டியா கூறும்போது, “வெறும் 10 ஆண்டுகளில் எதிஹாட்டின் சாதனைகள் மற்றும் இலங்கைக்கு அளித்த பங்களிப்பு குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தக் குறுகிய காலத்தில், நாங்கள் மிகவும் மதிப்பிற்குரிய விமான வர்த்தக நாமமாக உருவெடுத்துள்ளோம். எமது சேவை அரேபிய உபசரிப்புகளாலான புத்தாக்கங்களின் மூலம் வழிநடத்தப்படுகிறது” என்றார்.
10 வருட பூர்த்தியின் ஒரு பகுதியாக, கடந்த 10 ஆண்டுகளில் எதிஹாடுடன் இணைந்து செயற்பட்ட உயர்மட்ட பங்காளிகளான பயண முகவர்கள், அரச நிறுவனங்கள், அடிக்கடி பயணிக்கும் பயணிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் மற்றும் இலங்கை மக்கள் உட்பட அனைவரையும் எதிஹாட் நன்றியுடன் நினைவு கூருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.-Vidivelli