ஹஜ் முகவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு ஹஜ் முகவர் சங்கங்களும் ஒன்றிணைந்து இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளுக்கான செயற்திட்டம் ஒன்றினைத் தயாரித்து நேற்று முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளன.
தங்களது செயற்திட்டத்திற்கு அமைவாக குறிப்பிட்டுள்ள கட்டணத்தில் ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பிரதமர் இணங்கினால் தொடர்ந்தும் சேவையில் ஈடுபட முடியும் என ஹஜ்முகவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்று முன்தினம் மாலை கொழும்பு மகளிர் கல்வி மையத்தில் நடைபெற்ற ஹஜ் முகவர்களின் கூட்டத்திலே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஹஜ் முகவர் சங்கங்களின் தீர்மானம் தொடர்பில் இலங்கை ஹஜ் முகவர்கள் சங்கத்தின் (Haj Tour Operators Association of Sri Lanka) தலைவர் எச்.எம்.அம்ஜதீன் கருத்து தெரிவிக்கையில், ‘இவ்வருட ஹஜ் கட்டணத்தை 5 இலட்சம் ரூபாவாக நிர்ணயித்து ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுக்கும்படி ஹஜ் குழு தெரிவித்துள்ளது. இல்லையேல் ஹஜ் ஏற்பாடுகளை அரசே மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளது. ஹஜ் குழு குறிப்பிட்டுள்ள ஹோட்டல் வசதிகள் மற்றும் சேவைகளை 5 இலட்சம் ரூபாவுக்குள் வழங்குவது சிரமமாகும்.
எனவே, ஹஜ் முகவர்கள் அரசின் சிபாரிசுக்கு மூன்று ஹஜ் பொதிகளை (Package) வடிவமைத்துள்ளோம். 6 ½ இலட்ச ரூபா பெக்கேஜ், 7 ½ இலட்சம் ரூபா பெக்கேஜ் மற்றும் 8 ½ இலட்சம் ரூபா வி.ஐ.பி பெக்கேஜ் என்பனவே அவை. இந்த பெக்கேஜ்களில் ஹஜ்குழு குறிப்பிட்டுள்ள சேவைகள் வழங்கப்படும். மக்காவிலும் மதீனாவிலும் யாத்திரிகர்கள் 4,5, நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள்.
அத்தோடு அஸீஸியாவில் தங்க வைக்கப்படாது குதைய்யில் தங்க வைக்கப்படுவார்கள். 8 ½ இலட்சம் ரூபா பெக்கேஜில் அழைத்துச் செல்லப்படுபவர்களுக்கு மேலதிக வசதிகள் வழங்கப்படும். பிரதமர், ஹஜ் முகவர்களின் இந்த திட்டத்திற்கு இணங்குவார் என்ற நம்பிக்கையுண்டு. 5 இலட்சம் ரூபாவில் ஹஜ் ஏற்பாடுகளை நிறைவு செய்வதென்பது இயலாத காரியமாகும்’ என்றார்.
ஹஜ் முகவர்களின் செயற்திட்டம் தொடர்பில் ஹஜ் ஏற்பாடுகளில் 41 வருடங்கள் அனுபவம் வாய்ந்த ஹஜ் முகவர் ஏ.எல்.எம்.கலீல் மெளலவியைத் தொடர்பு கொண்டு வினவியபோது, ‘அரசாங்கம் பல தசாப்தங்களாக ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுத்து வரும் முகவர்களைப் புறந்தள்ளிவிட்டு அவர்களை ஆலோசிக்காமல் தீர்மானம் எடுத்துள்ளமை கவலையளிக்கிறது. ஒரு சில ஹஜ் முகவர்களின் ஊழல்களுக்கு ஒட்டுமொத்த முகவர்களும் பொறுப்பானவர்களல்ல.
இதுவரை காலம் ஹஜ் ஏற்பாடுகள் முஸ்லிம் சமய விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர்கள் அல்லது செயலாளர்கள், பணிப்பாளர்கள் ஆகியோரால் முகவர்களுடன் கலந்துரையாடப்பட்டே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
ஹஜ் முகவர்கள் காரியாலயங்களை நடத்திச் செல்வதற்கும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும், வரிகள் செலுத்துவதற்கும் பெருமளவு நிதியினைச் செலவிடுகின்றனர். இது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
ஹஜ் யாத்திரிகர்களின் நலன்கள் சவூதியில் முகவர்கள் மூலமே பேணப்படுகின்றன. அவர்களது தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.
எனவே, ஹஜ் யாத்திரிகர்கள் சிறந்த சேவை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் முகவர் நிலையங்களினூடாகவே பயணிக்க வேண்டும். அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதுபற்றி சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்’ என்றார்.
அரச ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீலைத் தொடர்புகொண்டு வினவியபோது, ஹஜ் முகவர்களின் திட்டம் இன்று பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்படும். பிரதமர் தீர்மானமே இறுதி முடிவாகும். ஹஜ் ஏற்பாடுகளை அரசே கையாள வேண்டும் என்றால் ஹஜ் குழு உடனடியாக மேலதிக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும். இது தொடர்பில் சவூதி ஹஜ் அமைச்சு மற்றும் முஅல்லிம்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றார். இலங்கை ஹஜ் முகவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.எம்.அஹமட் நிஜார் கருத்து தெரிவிக்கையில் ஹஜ் முகவர்கள் முன்வைத்துள்ள திட்டத்தை பிரதமர் அங்கீகரிப்பார் என்ற நம்பிக்கையுண்டு. அரசு ஒரு சில முகவர்களின் ஊழல்களை அடிப்படையாகக் கொண்டு அனைத்து முகவர்களையும் புறந்தள்ளி விடக்கூடாது என்றார்.-Vidivelli
- ஏ. ஆர்.ஏ. பரீல்