முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் உள்ளிட்ட மேலும் இருவரை மீண்டும் ஐ.தே.க.வின் செயற்குழுவில் இணைத்துக்கொள்வதில் ஆட்சேபனை இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், களுத்துறைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேராவை மீண்டும் செயற்குழுவில் இணைக்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க, முன்னாள் அமைச்சர்களான பீல் ட்மாஷல் சரத்பொன்சேகா மற்றும் அஜித் பீ. பெரேரா ஆகியோர் நீக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஐ.தே.க.வின் செயற்குழு கூட்டத்தின் போது, நீக்கப்பட்டோரை மீண்டும் செயற்குழுவில் இணைத்துக்கொள்ளுமாறு கட்சித் தலைவர் ரணிலிடம் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த ரணில், “இம்தியாஸை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வதில் ஆட்சேபனை இல்லை. அதுபோல, ரோஸி சேனாநாயக்கவையும் பீல் ட்மார்சல் சரத்பொன்சேகாவையும் மீள செயற்குழுவில் இணைத்துக்கொள்ள முடியும். எனினும், கட்சியின் தலைமைத்துவத்திற்கு அச்சுறுத்தல்விடுக்கும் வகையில் செயற்பட்ட அஜித் பீ. பெரேராவை மீள செயற்குழுவில் இணைத்துக்கொள்ள முடியாது” என்றார்.-Vidivelli