இலங்கையில் தினமும் 64 புதிய புற்று நோயாளர்கள் கண்டறியப்படுகின்ற அதேவேளை தினமும் 38 பேர் புற்று நோயினால் மரணிப்பதாகவும் தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபத்திரண தெரிவித்துள்ளார்.இலங்கையில் அதிக மரணங்கள் சம்பவிப்பதற்கான இரண்டாவது காரணியாக புற்று நோய் விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்சமயம் இலங்கையில் மொத்தமாக 56054 புற்று நோயாளர்கள் உள்ளனர். 2018 இல் மொத்தமாக 23530 புற்று நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன் இவர்களில் 14013 பேர் உயிரிழந்துள்ளனர் என தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்விபரங்கள் வெளியிடப்பட்டன.
புற்று நோய்களில் மூன்றில் ஒன்றை முற்றாக குணப்படுத்த முடியும். ஏனைய புற்று நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் குணப்படுத்த முடியும். நாடளாவிய ரீதியில் 24 அரசாங்க புற்று நோய் சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இலங்கையில் மார்பு, வாய், நுரையீரல், தைரோயிட், வயிறு, உணவுக்குழாய், கர்ப்பப்பை வாய், கருப்பைகள், கல்லீரல் மற்றும் லியூகேமியா ஆகிய புற்று நோய்களே முதல் 10 இடங்களில் உள்ளதாக குறிப்பிட்ட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா, ஆண்களில் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களே பொதுவாக தாக்குவதாகவும் பெண்களுக்கு மார்பு மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோய்களே பொதுவனது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். அதிலும் பெண் புற்றுநோயாளர்களில் நால்வரில் ஒருவர் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.-Vidivelli