கல்வித் துறையிலும் ஊடகத் துறையிலும் உச்சம் தொட்டவர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி

நினைவேந்தல் நிகழ்வில் பி .எச். அப்துல் ஹமீட்

0 779

உங்கள் அனை­வ­ருக்கும் சாந்­தியும் சமா­தா­னமும் உண்­டா­வ­தாக! வணக்கம்!
இந்த நிகழ்வு இரு பெரும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த அரங்கில் கூடி­யி­ருப்­போரின் முகங்­களைப் பார்க்கும் பொழுது இங்கு வந்­தி­ருப்­ப­வர்­களுள் ஒரு­சிலர் அச்சு ஊட­க­வி­ய­லா­ள­ரான எப்.எம். பைரூ­ஸுக்­காக வந்­த­வர்­களும் இருக்­கின்­றனர். ஆனாலும், அதே அள­வி­லானோர் எனது அன்புத் தம்பி மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரியை மதித்துப் போற்றும் இந்த விழா­வுக்­காக வந்­துள்­ள­வர்­க­ளா­கவே எனக்குத் தெரி­கின்­றது.

ஆனா­லும்­கூட, அவர்கள் ஏ.ஆர்.எம். ஜிப்­ரியை ஓர் ஒலி­ப­ரப்­பா­ள­ராக, ஓர் அறி­விப்­பா­ள­ராக இனங்­கண்டு, அவர் மீது அபி­மானம் கொண்டு இங்கு வந்­தி­ருப்­ப­தா­கவே எனக்குப் படு­கின்­றது. ஆனால் ஒரு கல்வித் தந்­தை­யாக அவர் ஆற்­றிய அருந்­தொண்­டினால் பய­ன­டைந்­த­வர்கள் இந்­நி­கழ்­வுக்கு அதி­க­மாக வர­வில்லை என்­பது எனக்கு ஏமாற்­றத்தை அளிக்­கின்­றது. அவர் நடாத்­திய மாண­வர்­க­ளுக்­கான பயிற்சிப் பாச­றைகள் ஆயிரம் ஆயிரம். அவ­ரது வழி­ந­டத்­தலில் ஆசி­ரியர் பயிற்­சி­களில் கலந்­து­கொண்ட ஆசி­ரி­யர்­களும் இன்னும் பல்­லா­யிரம். ஆனாலும் அவர்­களுள் அதி­க­மா­ன­வரை இந்த அரங்­கிலே காண முடி­ய­வில்லை. ஒலி­ப­ரப்­புத்­து­றையின் வீச்சு அதிகம் என்­பதால் அதன் ஊடாக அவர் மீது அபி­மானம் கொண்­ட­வர்­கள்தான் அதி­க­மாக இங்கு வந்­தி­ருக்­கின்­றனர்.
கல்வித் துறை­யிலும் ஊடகத் துறை­யிலும் உச்சம் தொட்­டவர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி. முஸ்லிம் மீடியா போரம் இந்த நினை­வேந்­தலை ஏற்­பாடு செய்யக் கட­மைப்­பட்­டுள்­ளது. காரணம், அந்த அமைப்பின் உப தலை­வ­ராக, பொரு­ளா­ள­ராக, ஆலோ­ச­க­ராக பெரும் தொண்­டாற்­றி­யவர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி. அவரைப் பற்றி என்­னு­டைய நினை­வு­களை மீட்டிப் பார்க்­கிறேன்.

முதன்­மு­றை­யாக ஏ.ஆர்.எம். ஜிப்­ரியை நான் சந்­தித்­தது இற்­றைக்கு 43 ஆண்­டு­க­ளுக்கு முன்பு. அவர் கல்­முனை உவெஸ்லி கல்­லூ­ரியில் பயின்று உயர் கல்­விக்­காக கல்­முனை ஸாஹிறாக் கல்­லூ­ரி­யிலே இணைந்த காலத்தில் அங்கு அவ­ரு­டைய தலை­மைத்­து­வத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட ஒரு விழா­வுக்கு என்னை பிர­தம அதி­தி­யாக அழைத்­தி­ருந்தார். அந்த வேளையில் சட்டக் கல்­லூரி மாண­வ­ராக இருந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் ஒரு சிறப்பு அதி­தி­யாக வந்து கலந்­து­கொண்டார். அப்­போ­துதான் கேள்­விப்­பட்டேன் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி உவெஸ்லி கல்­லூ­ரியில் பயி­லும்­போதும், கல்­முனை ஸாஹிறாக் கல்­லூ­ரியில் பயி­லும்­போதும், எப்­போ­துமே முதல் மாணவர் என்ற நிலையைத் தக்­க­வைத்துக் கொள்­பவர் என்று. அதன்பின் அவர் குண்­ட­சாலை விவ­சாயக் கல்­லூ­ரியில் டிப்­ளோமா பட்டம் பெற்று, கல்­வித்­து­றையில் கல்­வி­மாணி, கல்வி முது­மாணி, விசேட கல்­வித்­து­றையில் டிப்­ளோமா என்று தன்­னு­டைய கல்வித் தகை­மை­களை வளர்த்­துக்­கொண்டே வந்­தவர்.

பின்­னாளில் அவர் கொழும்­பிலே விவே­கா­னந்­தா­மேட்டில் இருக்கும் இரா­ஜேஸ்­வரி கல்­வி­ய­கத்தில் ஆசி­ரி­ய­ராகப் பணி­பு­ரிந்­தமை பல­ருக்குத் தெரி­யாது. அதன் பிறகு ஒரு விஞ்­ஞான ஆசி­ரி­ய­ராக, உப அதி­ப­ராக, பிரதி அதி­ப­ராக, அதி­ப­ராக என்­றெல்லாம் கல்­வித்­து­றையில் உச்­சங்­களைத் தொட்­டவர். அவ­ரு­டைய வாழ்க்­கையின் இலட்­சியம் எது­வாக இருந்­தது என்று அவ­ருடன் நான் கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன். பல சந்­தர்ப்­பங்­களில் நாம் மனம்­விட்டுப் பேசுவோம். தான் ஒரு மேடைப் பேச்­சா­ள­ராக வர­வேண்டும் என்­ப­துதான் அவ­ரு­டைய முதல் இலட்­சி­ய­மாக இருந்­தது. அந்த இலட்­சி­யத்­துக்கு அவ­ருக்குத் தூண்­டு­கோ­லாக இருந்­தவர் வேறு யாரு­மல்லர், எங்கள் ஒலி­ப­ரப்புத் துறைக்­கான முன்னாள் பிரதி அமைச்­ச­ரான அப்துல் மஜீட்தான். தேர்தல் காலங்­களில் அவர் ஆற்­றிய உரை­களைக் கேட்டு அதனால் ஈர்க்­கப்­பட்டு தானும் ஒரு மேடைப் பேச்­சா­ள­னாக வர­வேண்­டு­மென அவர் விரும்­பினார். கல்­வித்­து­றை­யிலே அவர் அடைய விரும்­பிய இலக்கு ஓர் ஆசி­ரி­ய­ராக வேண்டும் – அதுவும், விஞ்­ஞான ஆசி­ரி­ய­ராக வேண்டும் என்று. எல்­லோ­ருக்­குமே வாழ்க்­கையில் ஒரு ‘ரோல் மொடல்’ என்று சொல்­வார்­களே… அது­போல, உள்­ளு­ணர்­விலே அந்த உந்­து­சக்­தியை உரு­வாக்க யாரோ ஒருவர் கார­ண­மாக இருப்பார். ஜிப்­ரியைப் பொறுத்­த­மட்டில், அவ­ருக்கு இர­சா­ய­ன­வியல் கற்­றுக்­கொ­டுத்த ஆசி­ரியர் மனோ­க­ரன்தான் முன்­னு­தா­ர­ண­மாக இருந்தார். ஆசி­ரியர் மனோ­கரன் பாடம் நடாத்­திய விதம், அவ­ரு­டைய குரல் வளம், அவ­ரு­டைய நன்­ன­டத்­தைகள் என அத்­த­னை­யையும் ஒரு முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்டு அவ­ரைப்போல் வர­வேண்டும் என்று விரும்­பினார். ஆனால் பாருங்கள்… அவ­ருக்கு வழி­காட்­டிய, அவ­ருக்கு முன்­னு­தா­ர­ண­மாக இருந்த அந்த ஆசி­ரியர் இன்னும் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்றார். ஆனால் அவரை முந்­திக்­கொண்டு ஏ.ஆர்.எம். ஜிப்ரி விடை­பெற்­று­விட்டார்.

ஒலி­ப­ரப்புத் துறையில் எனக்கு சுமார் 20 ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரே அவர் இணைந்­து­கொண்டார். வயதால் என்­னை­விட பத்­தாண்­டுகள் இளை­யவர். நான் அடிக்­கடி பல மேடை­க­ளிலும் ஒரு விட­யத்தை சொல்வேன். அதா­வது, ஒவ்­வொரு தலை­மு­றையும் சாதிப்­ப­தை­விட அடுத்­து­வரும் தலை­முறை இன்­னு­மின்னும் அதி­க­மாகச் சாதிக்கும் என்­பது காலத்தின் நியதி. உதா­ர­ண­மாக ஓர் அஞ்சல் ஓட்டப் பந்­த­ய­மென வைத்­துக்­கொண்டால், அதிலே முதல் தலை­முறை 500 கிலோ­மீற்றர் ஓடி­யி­ருந்தால், அடுத்­து­வரும் தலை­முறை ஆயிரம் கிலோ­மீற்றர் ஓடும் ஆற்றல் கொண்­டி­ருக்கும். அதற்கு அடுத்த தலை­முறை 2000 கிலோ­மீற்றர் ஓடக்­கூ­டிய ஆற்­றலைப் பெற்­றி­ருக்கும். இது நான் கண்­கூ­டாகக் கண்ட ஒன்று. ஆனாலும், ஒவ்­வொரு தலை­மு­றையும் எங்­கி­ருந்து ஆரம்­பிக்கும்? ஆயிரம் கிலோ­மீற்றர் ஓடக்­கூ­டிய ஆற்­றலைப் பெற்­றி­ருந்­தாலும், அவர்கள் முத­லா­வது கிலோ­மீற்­றரில் இருந்து ஆரம்­பிக்­க­மாட்­டார்கள். 501ஆவது கிலோ­மீற்­றரில் இருந்­துதான் அவர்­க­ளு­டைய பயணம், அந்த ஓட்டம் ஆரம்­பிக்கும். அப்­ப­டி­யென்றால், மூத்த தலை­முறை விட்­டுச்­சென்ற இடத்­தி­லி­ருந்­துதான் அடுத்த தலை­முறை தன்­னு­டைய பய­ணத்தைத் தொடரும். ஆனால், அடுத்­து­வரும் தலை­மு­றைகள் எல்லாம் அவற்றை உணர்ந்­த­தில்லை. ஆனால், அதனை உணர்ந்த, ஒரு நல்ல மனி­தர்தான் ஏ.ஆர்.எம். ஜிப்ரி. தன்­னை­விட மூத்­த­வர்­களை மதித்துப் போற்றி, ஆனால் அதே­வே­ளையில் அவர்­களை அப்­ப­டியே பின்­பற்­றாமல் தனக்­கெனத் தனி­வழி வகுத்துத் தன்னை வளர்த்­துக்­கொண்டு முன்­னே­றி­யதால் மிகக் குறு­கிய காலத்­தி­லேயே அவரால் சாதிக்க முடிந்­தது.

மேடைப் பேச்­சா­ள­ராக வர­வேண்டும் என விரும்பி, மேடை அறி­விப்­பா­ள­ராக மாறி­யி­ருந்த ஏ.ஆர்.எம். ஜிப்ரி, 1986ஆம் ஆண்டு ஒக்­டோபர் 15ஆம் திகதி ஒரு பகு­தி­நேர அறி­விப்­பா­ள­ராகத் தெரி­வானார். குரல் தேர்­விலே அவரைத் தெரி­வு­செய்த மூவர் அடங்­கிய நடுவர் குழுவில் நானும் ஒரு­வ­னாக இருக்கும் பாக்­கியம் பெற்றேன். அவரைத் தெரி­வு­செய்து, பின்­னாட்­களில் அறி­விப்புத் துறையில் அவ­ருக்கு வழி­காட்­டவும், ஆலோ­ச­னைகள் கூறவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்­தது. அப்­போ­தெல்லாம் அவ­ரிடம், “ஜிப்ரி, உங்­க­ளுக்குக் கல்­வித்­து­றையில் சிக­ரங்­களைத் தொடக்­கூ­டிய வாய்ப்­புக்கள் இருக்­கின்­றன. எக்­கா­லத்­திலும் இங்கு நிரந்­தர அறி­விப்­பாளர் பணிக்கு வரா­தீர்கள்” என்று அவ­ரிடம் சொல்வேன். வேறு யாரேனும் இப்­ப­டி­யான ஓர் அறி­வு­ரையைக் கேட்டால் என்ன நினைப்­பார்கள்? தனக்குப் போட்­டி­யாக இவன் வரக்­கூ­டாது என்ற சுய­ந­லத்­தோ­டுதான் இந்த அறி­வு­ரையைச் சொல்­கின்றார் என்று. ஆனால் ஜிப்ரி அப்­ப­டி­யன்றி எனது ஆலோ­ச­னையை ஏற்­றுக்­கொண்டார்.

வானொ­லியில் பணி­யாற்­றிக்­கொண்டே வெளியில் பல துறை­களில் வெற்­றி­க­ர­மான உச்­சங்­களைத் தொட்­ட­வர்கள் இருக்­கின்­றனர். உதா­ர­ணத்­துக்கு என்­னு­டைய பள்ளித் தோழ­ரான போல் அண்­டனி. அவர் கல்­வித்­து­றை­யிலே மிகப் பெரிய பத­வி­களைப் பெற்றார். ஆனால், வானொ­லி­யிலும் அவர் ஒரு பகு­தி­நேர அறி­விப்­பா­ள­ராகத் தனது பணியை ஆற்­றினார். இவ்­வாறு ஜிப்ரி வானொலிக் கலை­ஞ­ரா­கவும் வானொலி அறி­விப்­பா­ள­ரா­கவும் தெரி­வாகிப் பணி­யாற்றிக் கொண்­டி­ருக்கும் காலத்­திலே அவ­ருக்கு ஒரு சோத­னை­யான காலம் வந்­தது.
பிர­தமர் பிரே­ம­தாஸ அவர்­க­ளு­டைய காலத்­திலே இலங்கை வானொ­லி­யிலே “மக்கள் குரல்” என்ற ஒரு நிகழ்ச்சி இடம்­பெற்­றது. அது அன்புச் சகோ­தரர் டக்ளஸ் தேவா­னந்தாவுடைய நிகழ்ச்சி. இந்த “மக்கள் குரல்” என்ற நிகழ்ச்சி விடு­தலைப் புலி­களை விமர்­சிக்­கின்ற ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்­சியைக் கேட்­ட­வர்கள் யாரும் இங்கு இருக்­கலாம். அந்த நிகழ்ச்சி இலங்கை வானொ­லி­யிலே ஒலிப்­ப­திவு செய்­யப்­படும். அந்த நிகழ்ச்­சிக்குக் குரல் கொடுக்க எங்­களைப் போன்ற நிரந்­தர அறி­விப்­பா­ளர்கள் பணிக்­கப்­பட்ட போது, அவர்­களுள் முதன் முத­லாக நான் எங்கள் பணிப்­பாளர் நாய­கத்­திடம் சென்று, “நான் இப்­போதே பத­வியை விட்டு விலகிப் போகின்றேன்” என்று பய­மு­றுத்­தினேன். அந்த செய்தி பிரே­ம­தாஸவிடம் தெரி­விக்­கப்­பட்ட போது, ஹமீட் போன்­ற­வர்­களை இதற்கு நிர்ப்­பந்­திக்க வேண்டாம் என்று அவரே பணிப்­புரை விடுத்­ததால், பகு­தி­நேர அறி­விப்­பா­ளர்­களைக் கொண்டு இந்த நிகழ்ச்­சியை நடாத்த வேண்டும் என்று திட்­ட­மி­டப்­பட்­டது. அதற்கு முத­லா­வ­தாகப் பலி­யாக்­கப்­பட்­ட­வர்தான் ஏ.ஆர்.எம். ஜிப்ரி.

விடு­தலைப் புலி­களை விமர்­சிக்கும் நிகழ்ச்­சியில் ஏ.ஆர்.எம். ஜிப்ரி குரல் கொடுத்தால் அவ­ருக்கு என்ன நடக்கும்? ஆனால் ஏ.ஆர்.எம். ஜிப்ரி மிகவும் சம­யோ­சி­த­மாக ஓர் உத்­தியைக் கையாண்டார். அந்த நிகழ்ச்­சியில் ஏ.ஆர்.எம். ஜிப்­ரியின் குரலைக் கேட்க முடி­யாது. முழுக்க முழுக்க, அச்­சொட்­டாக கே.எஸ். ராஜாவின் குரல் ஒலித்­தது. கே.எஸ்.ராஜா அக்காலப்பகுதியில் இந்தியாவில் வாழ்ந்து வந்தார். அவ்­வ­ளவு அற்­பு­த­மாக… இந்த மிமிக்ரி கலையில் வல்­லவர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி. இது பல­ருக்கும் தெரி­யாது.

நீண்ட காலம் கே.எஸ். ராஜாவின் குரலில் அவர் அந்த நிகழ்ச்­சியை நடாத்திச் சென்றார். அப்­போது அவ­ரு­டைய இந்த உத்தி என்­ன­வென்று புரி­யாமல் நான் அவரை அழைத்துக் கண்­டித்தேன். உங்­க­ளுக்கு இருக்கும் வள­மான குரலில்…. அவ்­வ­ளவு அழ­கான குரலில்… ஏன் இன்­னொ­ரு­வரைப் பிர­தி­யெ­டுத்துப் பேசு­கின்­றீர்கள் என்று கேட்­ட­போது, அவர் சொன்னார், “நான் வார இறு­தியில் ஊருக்குப் போக வேண்­டு­மல்­லவா? பொலன்­ன­றுவை தாண்டி கல்­முனை வரை போக வேண்டும் என்றால், இது­வொன்­றுதான் எனக்­குள்ள ஒரே வழி.” என்றார். இந்த விடயம் வெளியே யாருக்­குமே தெரி­யாது. இது ஜிப்­ரியின் வாழ்க்­கையில் அவர் கடந்த ஒரு சோத­னை­யான கால­கட்டம்.

அதன் பிறகு அவர் இந்த ஒலி­ப­ரப்­புத்­து­றை­யிலே எங்­க­ளையும் கடந்து உச்­சத்தைத் தொட்டார். அவ­ரு­டைய அணு­கு­முறை எப்­படி இருந்­தது என்றால், ஓட்­டப்­போட்டி ஒன்றில் பத்துப் பேர் ஓடு­கின்­றார்கள்… யாரா­வது ஒருவர் மற்ற ஒன்­பது பேர்­க­ளையும் தாண்டி முன்னால் வர வேண்டும் என்றால், முன்னால் ஓடிக்­கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்குப் பின்னால் ஓடிக்­கொண்டே இருந்தால் சரி வராது. அவ­ரவர் ஓடு­பாதை சற்றுத் தள்ளி இருந்­தாலும், அந்தப் பாதையின் ஊடாகச் சென்று அவரைத் தாண்ட வேண்டும் என்று ஜிப்ரி நினைத்தார். கல்வித் துறையில் அவர் கைக்­கொண்ட உத்தி அது­வா­கவும் இருக்­கலாம். காரணம், விவ­சா­யத்­து­றையில் பயின்­றவர் ஒரு விஞ்­ஞான ஆசி­ரி­ய­ராக வந்­தி­ருந்தார். ஒலி­ப­ரப்புத் துறையில் கே.எஸ். ராஜா, அப்துல் ஹமீட் போன்றோர் தொடாத அம்சம் எது­வென்று அவர் யோசித்­த­தாக அவரே என்­னிடம் சொல்­லி­யுள்ளார். அதா­வது வானொலி என்­பது கல்வி, தகவல் மற்றும் பொழு­து­போக்கு ஆகிய மூன்று அம்­சங்­க­ளுமே என எங்­க­ளுக்கு ஆரம்ப காலங்­களில் சொல்லித் தரப்­பட்­டது. முதலில் கல்வி, அடுத்து தகவல், அடுத்து பொழு­து­போக்கு. கொஞ்ச காலம் சென்ற பிறகு கல்வி காணாமல் போய்­விட்­டது. பெரும்­பா­லான ஊட­கங்­களில் இப்­போது தக­வலும் காணாமல் போய்­விட்­டது. (நான் எல்லா ஊட­கங்­க­ளையும் சொல்­ல­வில்லை) இன்று திரைப்­படப் பாடல்கள் இல்லை என்றால் வானொலி நிலை­யங்­களை எல்லாம் இழுத்து மூட வேண்­டிய நிலைதான் பெரும்­பா­லான வானொலி நிலை­யங்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது.
ஆனால் கல்விச் சேவை என்ற ஒன்று தனி­யாக இருந்­தா­லும்­கூட, தேசிய சேவை மற்றும் வர்த்­தக சேவை ஆகிய இரண்­டிலும் இந்தக் கல்­விக்கு முன்­னு­ரிமை கொடுத்த நிகழ்ச்­சிகள் என்று கணக்­கிட்டால் இரண்டு நிகழ்ச்­சி­களைக் குறிப்­பி­டலாம். வர்த்­தக ஒலி­ப­ரப்பில் முதன் முத­லாக நட்­சத்­திர அறிவுக் களஞ்­சியம் என்ற ஒரு நிகழ்ச்சி ஒலி­ப­ரப்­பா­னது. உங்­க­ளுக்கும் நினை­வி­ருக்­கலாம். இந்த நிகழ்ச்­சியைத் தயா­ரித்­தவர் காலஞ்­சென்ற எனது அருமைச் சகோ­தரர் எஸ். ராமதாஸ். கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரம் மற்றும் உயர் தரம் ஆகிய இரண்­டுக்­கு­மான பாடத்­திட்­டங்­களை அடிப்­ப­டை­யாக வைத்­துத்தான் இந்த நிகழ்ச்­சியில் கேள்­விகள் கேட்­கப்­பட்­டன. இந்த நிகழ்ச்சி நடை­பெற்ற கால­கட்­டத்­திலே இதனை நடத்­தும்­படி எனது அன்புச் சகோ­தரர் ராமதாஸ் வேண்­டிக்­கொண்ட போது நான் சொன்னேன், இதற்­காக நான் மீண்டும் படிக்க வேண்டும்… கல்வி கற்க வேண்டும் என்று. ஏனென்றால் ஒரு கேள்­வியை நான் கேட்டு, அதற்கு பதில் சொல்­பவர் எதிர்க் கேள்­வியை எம்­மிடம் கேட்டால் அதற்­கான விளக்­கத்தைக் கொடுக்க வேண்­டிய ஆற்றல், அறிவு எனக்கு இருக்க வேண்டும். ஆகவே, இந்த நிகழ்ச்­சியை நான் செய்­ய­மாட்டேன். கே.எஸ். ராஜா ஏற்­க­னவே ஒரு விஞ்­ஞான ஆசி­ரி­ய­ராக கொழும்பு தெமட்­ட­கொட தேவ­பாலா கல்­லூ­ரியில் பணி செய்­தவர். எனவே அவ­ரைக்­கொண்டு இந்த நிகழ்ச்­சியைச் செய்­யலாம் என்றேன். அந்த நிகழ்ச்சி ஓராண்டு தொடர்ந்­தது. அந்த நிகழ்ச்­சியின் இறு­தியில் வெற்­றி­பெற்ற பாட­சா­லைக்கு ஒரு விஞ்­ஞான ஆய்­வு­கூ­டத்­தையே கட்­டிக்­கொ­டுத்­தார்கள் அந்த நிகழ்ச்­சியின் விளம்­பர அனு­ச­ர­ணை­யா­ளர்கள். அந்த நிகழ்ச்­சிக்குப் பிறகு வர்த்­தக ஒலி­ப­ரப்­பிலே கல்­வியை முன்­னி­லைப்­ப­டுத்தி நிகழ்ச்­சியை நடத்­தி­யவர் வேறு யாரு­மல்லர். அது எனது அன்புத் தம்பி மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்­ரிதான்.

அடுத்து, “அல்­லியின் ஹலோ உங்கள் விருப்பம்” என்­றொரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்­சியில் வெறு­மனே திரைப்­படப் பாடல்­களை ஒலி­ப­ரப்பி, தொலை­பேசி வழி­யாக உரை­யாடி, நேரத்தைக் கடத்தி, அவர்கள் விரும்­பிய பாட­லொன்றை ஒலி­ப­ரப்­பி­விட்டுப் போயி­ருக்­கலாம். ஆனால் அவ­ரு­டைய இலக்கு முழுக்க முழுக்க மாணவப் பரம்­ப­ரையை நோக்­கி­ய­தா­கவே இருந்­தது. வெறும் ஜன­ரஞ்­ச­க­மாக நடாத்­தப்­பட வேண்­டிய இந்த நிகழ்ச்சி, மாண­வர்கள் விரும்பிக் கேட்கும் நிகழ்ச்­சி­யாக, பெற்­றோர்கள் தங்­க­ளது பிள்­ளை­களைத் தூண்டிக் கேட்­க­வைக்கும் நிகழ்ச்­சி­யாக அமைந்­தது. அதனைத் தொடர்ந்து “அறிவுச் சுரங்கம்”, “எங்கள் பாட­சாலை” போன்ற நிகழ்ச்­சி­களை எல்லாம் ஜிப்ரி நடத்­தினார்.

நான் ஏற்­க­னவே சொன்­னேனே… மூத்­தோரை மதிக்கும் பண்பு என்­பதைக் காத்த அடுத்த தலை­மு­றை­யாக என் கண்­ணுக்குத் தெரிந்­த­வருள் முதன்­மை­யா­னவர் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி என்று. அவர் உண்­மை­யாக எந்­த­ள­வுக்கு என்னை நேசித்தார் என்றால், இங்கே அவ­ரு­டைய வாரி­சுகள் மின்ஹாஜ் மற்றும் மின்ஹாம் ஆகிய இரு­வரும் வந்­தி­ருக்­கின்­றார்கள். அவ­ரு­டைய மூத்த வாரிசு மின்ஹாஜ் பிறந்­த­போது அவ­ரு­டைய இல்லம் சென்று, அவ­ருக்குப் பெயர் சூட்டும் நிகழ்­விலே அவரை என் கரங்­களில் ஏந்தி தாலாட்டி இருந்தேன். ஜிப்­ரியை நான் முதன்­மு­த­லாகக் கல்­முனை ஸாஹி­றா­விலே பார்த்­த­போது அவர் எந்த அளவில்… எந்த வயதில் இருந்­தாரோ… அதே­போன்­றுதான் இங்கே அவரின் வாரி­சு­களும் இருக்­கின்­றனர். அந்த இரு­வ­ருமே தமது தந்­தையைப் போல் கல்­வித்­து­றையில் தங்­களை வளர்த்­துக்­கொண்­டுள்­ளனர்.

கடை­சி­யாக ஜிப்­ரியை நான் வைத்­தி­ய­சா­லையில் சந்­தித்த போதும், தனது உடல் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த அந்தத் தரு­ணத்­தி­லும்­கூட தனது வாரி­சு­களின் கல்­விசார் அடை­வு­களைப் பற்றி என்­னுடன் பேசி­யி­ருந்தார்.

ஆரம்ப காலத்தில் ஒலி­ப­ரப்புத் துறையில் எத்­த­னையோ ஆலோ­ச­னை­களை அவர் என்­னிடம் கேட்பார். அடிக்­கடி என்­னுடன் உரை­யா­டுவார். அவர் பணி­பு­ரிந்த கல்­லூ­ரிகள் அனைத்­தி­லுமே விழாக்­க­ளுக்கு என்னை ஒரு பிர­தம அதி­தி­யாக, சிறப்பு அதி­தி­யாக அழைத்து கௌர­வப்­ப­டுத்தி இருக்­கின்றார். அவ்­வப்­போது நாம் இந்த ஒலி­ப­ரப்புத் துறை சம்­பந்­த­மாக தொலை­பேசி ஊடா­க­வேனும் அள­வ­ளா­வுவோம். கொஞ்ச காலத்­துக்குப் பிறகு நீரி­ழிவு நோய்தான் எங்­க­ளு­டைய பேசு­பொ­ரு­ளாக இருந்­தது. என்­னு­டைய அனு­ப­வங்­களை அவ­ரிடம் சொல்வேன். அவ­ரு­டைய அனு­ப­வங்­களை என்­னிடம் சொல்வார். யார் யாரோ சொன்­ன­வற்றை எல்லாம் கேட்டு நீரி­ழிவு நோய்க்குத் தீர்­வு­காணப் போய் தன்­னு­டைய உடல் நலத்­துக்கு மிகப் பெரிய பாதிப்பைத் தான் ஏற்­ப­டுத்திக் கொண்­ட­தாக அவரே என்­னிடம் சொன்னார். தான் முயன்ற வைத்­திய முறை­கள்தான் தனது உட­லுக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­ய­தாகச் சொன்னார்.
அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார் என்­பதை அன்புச் சகோ­தரர் அமீன் ஊடாகக் கேட்­ட­றிந்து மறுநாள் அவரை வைத்­தி­ய­சாலை சென்று பார்த்தேன். அவ­ரு­டைய மகன் அருகில் நின்­றி­ருக்க, அவர் என்­னுடன் ஓர் அரை மணி நேரம் உரை­யா­டினார். அப்­போது நான் அவ­ருக்­காகப் பிரார்த்­தனை செய்­வ­தா­கவும், இறைவன் கைவி­ட­மாட்டான் என்றும் ஆறுதல் வார்த்­தைகள் கூறினேன். நம்­பிக்­கையே நமது உயிர்­நாடி என்று விஞ்­ஞான ஆசி­ரி­ய­ரான அவ­ருக்கே நான் விஞ்­ஞான ரீதி­யி­லான தகவல் ஒன்­றுடன் ஆறுதல் கூறினேன். எல்­லோ­ரு­டைய நடு மூளை­யிலும் அரிசி மணி அள­வி­லான ஒரு விடயம் இருக்­கின்­றது. அது அற்­பு­த­மான வித்­தைகள் எல்லாம் செய்ய வல்­லது. நாம் எதனைத் திட­மாக நம்­பு­கின்­றோமோ அதற்­கேற்ப இர­சா­யன மாற்­றத்தை நமது உடலில் அது ஏற்­ப­டுத்தும். ஆகவே நீங்கள் நம்­புங்கள் உங்­களால் மீண்­டு­வர முடியும் என்று. இதெல்லாம் சர்வ சாதா­ரணம் என்று அவ­ருக்குக் கூறினேன். இவ்வாறெல்லாம் நான் ஆறுதல் வார்த்தைகள் கூறி, நான் மறுநாளும் உங்களைப் பார்க்க வருவேன் என்று உறுதியளித்து, தலை குனிந்து அவருடைய நெற்றியில் முத்தமிட்டேன். அப்போது அவருடைய கண்களில் நீர் துளிர்த்தது. அந்தக் கண்ணீரின் அர்த்தம் என்னவென்று மறுநாள் இரவுதான் எனக்குப் புரிந்தது.

கல்முனையில் இருந்து அன்புத் தம்பி அப்துல் கையூம் நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு தொலைபேசியில் அழைத்து ஜிப்ரியின் மரணச் செய்தியைச் சொன்னார். இந்த மண்ணில் பிறப்பவர்கள் எல்லோரும் இறந்துதான் ஆக வேண்டும் என்ற யதார்த்தம் எமக்குத் தெரிந்தாலும்கூட, நாம் நேசித்த, நம்மை நேசித்த எவரேனும் ஒருவர் பிரியும் போது வரும் துயரைத் தாங்க முடியாது. (அரங்கிலுள்ள பலரினதும் கண்களில் நீர் ததும்புகின்றது).

நான் அதிகமாகப் பாடல்களுடன் சங்கமித்தவன் என்ற அடிப்படையில் இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு “இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான்….” என்ற ஒரு பழைய பாடல்தான் நினைவுக்கு வருகின்றது. இங்கே இருப்பவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு கட்டத்தில் இறந்தவர்களைச் சுமந்திருப்பீர்கள். நாமும் இருக்கப் போவதில்லை. நிச்சயம் நாமும் அந்த மறுமை உலகில் அன்புச் சகோதரர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியைச் சந்திப்போம்.

ஆனால் அதற்கிடையில் மண்ணறையில் சில வேதனைகள் நம்மை எதிர்நோக்கக் காத்திருக்கின்றன என்று சொல்வார்களே. அப்படியான வேதனைகளில் இருந்து அன்புச் சகோதரர் ஜிப்ரியை இறைவன் காக்க வேண்டும். மறுமை உலகிலே… அந்த நியாயத் தீர்ப்பு நாளிலே… அவருக்கு சுவனத்தின் வாசல்களைத் திறந்துவிடுமாறு இருகரமேந்தி துஆச் செய்து விடைபெறுகின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும்.-Vidivelli

  • இர்ஹாம் சேகுதாவூத்

Leave A Reply

Your email address will not be published.