பாராளுமன்றமும் நிறைவேற்று அதிகாரத்திற்குப் பொறுப்பானவரும் உரிய முறையில் செயற்படாதிருப்பினும் அத்துடன், அதிகளவிலான ஊழலில் ஈடுபட்டவர்களாக இருந்த போதிலும்கூட இலங்கையின் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சமூகப் பொறுப்புகளில் முறையான அக்கறையுடன் உயரிய இலக்கு நோக்கி செயற்படுகின்ற அடிப்படையில் இருக்குமேயானால் இலங்கையானது தற்போதைய மோசமான நிலைக்குத் தள்ளப்படாமலிருந்திருக்கலாம். எனினும், துரதிஷ்டவசமாக இலங்கை அவ்வாறானதொரு நீதிமன்றத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. பாராளுமன்றத்தினதும் ஆட்சிபீடத்தினதும் முன்னேற்றமற்ற நிலைக்கு ஏற்றவகையிலான பின்தங்கியதொரு நீதிமன்றமாகவே அது காணப்படுகின்றது.
இலங்கையானது சுதந்திரத்தைப் போராடிப் பெற்றுக்கொண்ட ஒரு நாடல்ல. அன்பளிப்பொன்றை வழங்குவது போன்ற அடிப்படையிலேயே இலங்கைக்கான சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது என்பதனை யாரும் மறந்துவிட முடியாது. முறையான ஜனநாயக ஆட்சி குறித்த தெளிவான அறிவு பொதுமக்களிடம் காணப்படவில்லை என்பது போன்றே நாட்டின் தேசியத் தலைவர்களிடம் அது காணப்படவில்லை.
சுதந்திரத்திற்கான போராட்டங்கள் நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியில் இந்தியா கல்வியறிவில் இலங்கையை விடப் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டது. எனினும், இலங்கையின் தலைவர்களின் அறிவு மட்டத்திலும் பார்க்க உயர்ந்த அளவிலான அறிவுடைய தேசியத் தலைவர்களை இந்தியா பெற்றிருந்தது.
எமது நாட்டுத் தலைவர்கள் போலன்றி இந்திய நாட்டின் தலைவர்கள் தமது நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காக இந்திய சமூகத்தினரை நேரடியாகப் பங்களிக்கச் செய்தனர். சுதந்திரத்திற்கான போராட்டத்தின்போது சுயமாக சிந்தித்து செயலாற்றும் ஒரு சமூகமாக இந்தியர்களை மாற்றியமைத்தனர். அதற்கு மேலதிகமாக இனம், மதம், சாதி போன்ற வேறுபாடுகளுக்கு இருக்கின்ற அங்கீகாரத்தைக் குறைத்து நவீன சமூகமொன்றை உருவாக்குவதற்கான அடித்தளமொன்றையும் உருவாக்கினர். மதச்சார்பாளராகக் கருதப்பட்ட காந்தி முதற்கொண்டு அத்தனை தலைவர்களும் அரசியல் நடவடிக்கைகளின் போது மதம் சாராதவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.
இலங்கையின் இயலாமை
சுதந்திரத்திற்காக முன்னின்ற இலங் கைத் தலைவர்களிடம் தாம் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற பேராசை இருந்து வந்ததே தவிர, நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்ல வேண்டுமென்ற உயரிய நோக்கு அவர்களிடம் காணப்படவில்லை. சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்களை ஈடுபடுத்துவதில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியது மாத்திரமன்றி, சர்வசன வாக்கெடுப்பு நடாத்துவது குறித்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இந்தியாவைக் கைவிடுவது என்ற பிரித்தானியாவின் தீர்மானத்தின் விளைவாக பாரிய முயற்சிகளின்றியே சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையால் முடியுமாக அமைந்தது.
இந்தியா சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கை போன்று பிரித்தானியாவின் நிர்வாக முறைகளை அந்த அமைப்பிலேயே பாதுகாத்து அதனை அப்படியே நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை. அவர்கள் இலங்கைக்கு மாற்றமாக அவர்களுக்கேற்ற அடிப்படையில் நிர்வாக முறைகளை மாற்றியமைத்துக்கொண்டனர்.
1922 ஆம் ஆண்டில் தமது நாட்டின் ஆட்சி எந்தவகையில் அமைய வேண்டும் என்பது குறித்து காந்தி குறிப்பிடுகையில், இந்தியாவின் ஆட்சி முறையானது பிரித்தானிய பாராளுமன்றத்தின் ஊடாக பெற்றுத்தருகின்ற ஒன்றாக அல்லாமல் இந்திய மக்களால் சுதந்திரமாகத் தெரிவுசெய்கின்ற மக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று ஒன்றாக இணைந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்படவேண்டும் என்பதாகக் குறிப்பிட்டார்.
1933 ஆம் ஆண்டில் பிரித்தானியா இந்தியாவுக்காக ஓர் அரசியல் யாப்பை வடிவமைத்து வழங்குவதற்காக முன்வந்தபோது, வெளிநாடுகளின் ஆதிக்கங்களற்ற அமைப்பில் இந்திய மக்கள் பிரதிநிதிகள் ஊடாக உருவாக்கப்படுகின்ற யாப்பொன்று மாத்திரமே இந்தியா வேண்டி நிற்கின்றது என்பதாக இந்தியாவின் காங்கிரஸ் மிக ஆணித்தனமாகக் குறிப்பிட்டிருந்தது.
இந்தியாவின் வெற்றி
இந்தியாவின் யாப்பு உருவாக்கத்திற்காக மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்து கொள்வதற்கென தேர்தல் ஒன்று நடாத்தப்பட்டு அதனூடாகத் தெரிவு செய்யப்படுகின்ற அங்கத்தவர்கள் மூலமாக யாப்பு உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் குறித்து கலாநிதி கிரேன்வில் ஒஸ்டின் ”The Indian Constitution’ எனும் பெயரில் நூல் ஒன்றை எழுதியிருந்தார். இலங்கையில் இதுவரை காலமும் அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட விதம் குறித்து தெளிவான விளக்கத்துடன் இந்தப் புத்தகத்தை வாசிக்க முடியுமாயின் யாப்பு உருவாக்கம் என்ற விடயத்தில் இலங்கை எந்தளவில் பின்தங்கியிருக்கின்றது என்பதை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
இந்திய நீதிமன்ற முறை கட்டமைக்கப்பட்ட விதம் மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கருத்துப்பரிமாற்றம் குறித்தும் அந்தப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. சமூகப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களினூடாக வென்றெடுத்துக் கொண்ட சுதந்திரத்தின் பின்னர் குறித்த சமூகப் பங்களிப்பையும் போராட்டங்களையும் இன்னும் முன்னோக்கி நகர்த்திச் செல்தற்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் பொறுப்பாளராகவும், பாதுகாப்பாளராகவும் இங்கு நீதிமன்றம் கருதப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இந்தியாவின் அரசியல் யாப்பை அமைத்து அதனை சட்டமாக்குவதற்காக மூன்று வருடங்கள் என்ற அளவில் காலமெடுத்தது. யாப்பு அமைப்பதற்காக எடுத்துக்கொண்ட காலப்பகுதியின் அதிகமான காலப்பகுதி நீதித்துறையை கட்டமைப்பதற்கான கலந்துரையாடல்களுக்காகவே செலவாகியிருந்தது.
குறித்த விடயத்தை ஆரம்பிக்கும்போது அதிகாரத்திலிருக்கும் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு அவர்களின் அபிலாசைகளுக்கமைய யாப்பை அமைத்துவிடாது சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட சமூக செயற்பாட்டாளர்களிடத்தில் நீதியானதும் நியாயமானதுமான முறையில் செயற்படக்கூடிய நீதித்துறையொன்றை உருவாக்குவதற்கான நடைமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான நடவடிக்கைகளை யாப்பு உருவாக்கத்திற்கான செயற்குழுவின் தலைவராக செயற்பட்ட நேரு முன்னெடுத்தார். அதன் அடிப்படையில் இந்திய தலைவர்கள் பிரித்தானியா, அமெரிக்கா, அயர்லாந்து போன்ற நாடுகளின் நீதித்துறை குறித்து வெவ்வேறாக ஆராய்ந்து இந்தியாவுக்குப் பொருத்தமான அடிப்படையிலான நீதித்துறையொன்றை உருவாக்கிக் கொண்டனர்.
இந்திய நீதிமன்றத்தின் செயற்பாடு
இந்தியாவின் உயர் நீதிமன்றம் என்பது சுமார் 7 வருடங்களாக பரீட்சித்துப்பார்க்கப்பட்ட ஒரு நீதித்துறை நிறுவனமாகக் குறிப்பிடப்படுகின்றது. அதனை உருவாக்கியவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இந்திய சமூகப் போராட்டங்கள் தொடர்பான எதிர்கால நலன்கள் மற்றும் மக்களின் உரிமைகளையும் அரசியல் யாப்பினையும் பாதுகாக்கின்ற அடிப்படையில் இந்திய நீதிமன்றம் செயற்படுகின்றது என்பதாகக் குறிப்பிடமுடியும். இன்று உலகிலிருக்கின்ற சிறந்த உயர்நீதிமன்றங்களில் இந்திய நீதிமன்றமும் ஒன்றாக காணப்படுகின்றது.
பெரும்பான்மை பலத்தையும் பாரியளவிலான அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டிருந்த இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் நீதிமன்றத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக அவரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் தனது சுயாதீன தன்மையினைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பாரிய முயற்சியொன்றை மேற்கொண்டிருந்தது. குறித்த போராட்டத்தில் இந்திரா காந்தி தற்காலிக வெற்றியைப் பெற்றுக்கொண்ட போதிலும் தமது சுயாதீனத் தன்மையையும் மதிப்பையும் பாதுகாத்துக்கொள்வதற்கான போராட்டத்தை நீதித்துறை கைவிடவில்லை. 1977 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆட்சி தோல்வியடைந்ததன் பின்னர் அவரால் ஏற்படுத்தப்பட்ட அனைத்துவிதமான விகாரங்களும் சரிசெய்யப்பட்டதுடன் இனிமேல் ஆட்சிக்கு வருகின்ற கட்சிகள் தங்களது சுயநலத்தின் பேரில் யாப்பில் மாற்றம் ஏற்படுத்த முடியாதளவுக்கு சட்டம் அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் பொது நலன்களுக்காகவன்றி சயநல நோக்குடன் யாருக்கும் யாப்பில் மாற்றங்கள் ஏற்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்தியாவானது இலங்கையை விடவும் மதசார்பாக இருந்தபோதிலும் மதங்கள் நீதிமன்றங்களுடன் கலந்துவிடுவதற்கு உயர்நீதிமன்றம் இடமளிக்கவில்லை. அதனூடாக மதச்சார்பின்மை என்பது நீதிமன்றத்தின் பண்பொன்றாக உறுதி செய்துகொண்டனர். சில வருடங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிற்காக இந்துமத வழிபாடொன்றை உள்ளடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பில் யாரோ ஒருவர் மூலமாக உயர் நீதிமன்றத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் குறித்த நிகழ்விற்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியது மாத்திரமன்றி நீதிமன்றதினுள் மத அடையாளங்கள் பயன்படுத்தப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் நடைபெறுகின்ற தவறுகள் குறித்து விமர்சிக்கின்ற உரிமை பொதுமக்களுக்கு இருப்பதாக அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பொன்றின் ஊடாக குறிப்பிடப்பட்டது.
வறியவர், இயலாதவர், அங்கவீனர் என்ற அடிப்படையானவர்களில் ஒருவரோ அல்லது அவ்வாறானவர்களின் குழு ஒன்றிற்கோ தங்களுக்கு ஏற்பட்ட அசாதாரணம் தொடர்பில் நேரடியாக உயர் நீதிமன்றத்திடம் முறைப்பாடுகளை மேற்கொள்ளும் முறையொன்று பகவதி எனும் சட்டமா அதிபர் மூலமாக அவரது பதவிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. அவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பொறும் போதும் எந்தவிதமான கட்டணமுமின்றி விசாரணை மேற்கொண்டு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் முறையொன்றும் நடைமுறையில் இருந்துவருகின்றது.
தான்தோன்றித்தனமான செயற்பாடு
இலங்கையின் நீதிமன்றத்திற்கு சிறந்ததொரு நோக்கு காணப்படவில்லை. சட்டம் குறித்த பரந்த அறிவு இருந்த போதிலும் நீதிமன்றத்திடம் இருக்க வேண்டிய சமூகப் பொறுப்புக்கள் குறித்து போதிய அறிவிருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவின் உயர் நீதிமன்றமானது தனது நாட்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றுக்கொண்டிருப்பதுடன் சர்வதேச ரீதியிலும் நன்மதிப்பினைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கையின் உயர் நீதிமன்றமானது இந்த விடயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இந்தியாவின் உயர் நீதிமன்றமானது மக்களைப் பயமுறுத்துவதன் ஊடாக இந்த அபிமானத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக, மக்களின் அபிமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் நிறுவனத்தை நடாத்திச் செல்லல் ஊடாக அல்லது அரசியல் யாப்பினையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் செயற்பாடுகள் ஊடாகவே அதனை அடைந்துகொண்டிருக்கின்றது.
மக்களின் உரிமைகளையும் அரசியல் யாப்பையும் பாதுகாக்கின்ற கடமையை இலங்கையின் உயர்நீதிமன்றம் சரியாக மேற்கொள்ளவில்லை. ஆட்சியாளர்களுக்கு யாப்பினை மீறுவதற்காக இடமளித்திருப்பதுடன், சிலபோது அவர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்ட நிலையில் உயர்நீதிமன்றம் கூட அரசியல் யாப்பை மீறியிருக்கின்றது. பாராளுமன்ற உறிப்பினர் என்ற பதவி இழந்துவிடாத அடிப்படையில் கட்சி மாறலாம் என்ற தீர்ப்பை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இது இலங்கையின் அரசியல் யாப்பை முற்றாகவே விகாரமாக்குவதற்கு காரணமாக அமைந்திருக்கின்ற ஒரு தீர்ப்பாகக் குறிப்பிட வேண்டும். இது உயர் நீதிமன்றத்தினால் எந்த நேரத்திலும் சரிசெய்துவிட முடியுமான ஒன்றாக இருக்கின்ற போதிலும், குறித்த தவறானது இன்றுவரையில் சரிசெய்யப்படவில்லை என்பதனால் அது எதிர்காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைவதற்கான வாய்ப்பு இல்லாமலில்லை.
இலங்கையில் மதம் சாராத அமைப்பிலான நீதிமன்றம் இருப்பதாகத் தெரியவில்லை. சில நீதிபதிகள் தத்தமது மதசார்பினை வெளிக்காட்டுவதற்காக பின்வாங்குவதுமில்லை. இது நீதிபதிகளுக்கு இருக்கக்கூடாத பண்பு என்பதாக அவர்கள் அறிவதில்லை.
1999 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் முன்னாள் நீதியரசர் கலந்துகொண்ட இந்நிகழ்வின்போது நீதிபதிகளிடம் காணப்படவேண்டிய பண்புகள் குறித்து எச்.எல். த சில்வா, “சுயாதீனத் தன்மை இல்லாமலாதல், நேர்மையற்றுப்போதல் போன்ற காரணங்களினால் முழு நீதிமன்றக் கட்டமைப்பும் வில்லனின் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நகைச்சுவை நடிகர் ஒருவரின் நிலைக்கு உள்ளாகிவருகின்றது” என்பதாகக் குறிப்பிட்டார். அவர் இவ்வாறு குறிப்பிட்டு 4 வருடங்களாகும்போது தியவன்னாவ ஆற்றின் அருகில் வாகனம் ஒன்றினுள் நீதியரசர் பெண் சட்டத்தரணி ஒருவருடன் அரை நிர்வாணமாக இருந்த நிலையில் பொலிசாரால் பிடிபட்டார்.
அடிப்படை உரிமை தொடர்பான வழக்குகள் மூன்று மாத காலங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பதாக அரசியல் யாப்பு குறிப்பிடுகின்றது. எனினும், இரண்டு மூன்று வருடங்கள் கடந்த பின்னரும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத அடிப்படை உரிமை வழக்குகளும் காணப்படுகின்றன என்பதே இன்றைய உண்மையான நிலையாகும். சமுர்த்தி அதிகாரிகளின் சங்கத்தின் வழக்கொன்று 5 வருடங்களாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்படாமல் குறித்த வழக்கு செல்லுபடியற்றதாக ஆக்கப்பட்டதாக அண்மையில் அவர்களிடமிருந்து அறியக்கிடைத்தது. இந்த வழக்கிற்காக சட்டத்தரணிகளுக்கான கொடுப்பனவுகளுக்கு மாத்திரம் அவர்களால் செலவிட்ட தொகை ரூபா 56 இலட்சம் என்பதாகக் குறிப்பிடப்பட்டது.
தமது சேவை பெறுநர்களை அழுத்தங்களுக்கு உட்படுத்தி அவர்களிடமிருந்து பணம் ஈட்டிக்கொள்கின்ற அமைப்பிலேயே தற்போதைய சட்டத்துறை சார்ந்த தொழிலாளர்கள் இருக்கின்றனர். பாரதூரமான குற்றச் செயல்களைப் புரிந்தவர்கள் விடயங்களில்கூட அந்தக் குற்றச் செயல் குறித்து ஆராய்ந்து தகுந்த தண்டனை வழங்குகின்ற முறையொன்று நடைமுறையில் காணப்படுவதில்லை. சட்டத்துறை சார்ந்தவர்களிலும் நீதிமன்றத் துறைசார்ந்தவர்களிலும் மதிப்புக்குரியவர்கள் இருந்த போதிலும் பொதுவாக ஒழுக்கமற்ற நிலையே காணக்கூடியதாக இருக்கின்றது. நீதிமன்றத் துறையில் இருப்பவர்கள் ஒழுங்கான முறையில் செயற்படும் அடிப்படையில் கண்காணிப்பது சட்டத்துறை சார்ந்த துறையினரின் பொறுப்பாகும். சட்டத்துறையினர் முறையாக செயற்படுவதைக் கண்காணிப்பது நீதித்துறையின் பெறுப்பாகும். குறித்த இரண்டு பிரிவினரிடமும் இந்த நடைமுறைகள் காணக்கிடைக்கவில்லை.
ஒழுக்கமும் கட்டுப்பாடும்
நீதிமன்ற சேவைக்காக நீதிபதிகளை சேவையில் இணைத்துக்கொள்ளும்போது அவர்களுக்கு வழங்கப்படுகின்ற பயிற்சிகளும் ஒழுக்கம் சார்ந்த கட்டுப்பாடுகளும் சிறந்த அடிப்படையில் இருப்பதாகத் தெரியவில்லை.
லெனின் ரத்னாயக்க மற்றும் உபாலி அபேரத்ன ஆகிய நீதிபதிகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். காப்புறுதி நிறுவனமொன்றில் பணியாற்றி பண மோசடி காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை மறைத்து லெனின் ரத்னாயக்க நியமனம் பெற்றுக்கொள்கின்றார். அவரை இந்தப் பதவிக்காக இரண்டு வழக்கறிஞர்கள் பரிந்துரை செய்திருக்கின்றனர். சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முறையான நடைமுறைகள் இல்லாமையை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. அவர் குறித்து குறிப்பிடுவதற்கு நிறைய விடயங்கள் இருந்த போதிலும் சேவையிலிருந்து ஓய்வுபெற்று அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராய்வதற்கான விசேடமாக அமைக்கப்பட்ட மூன்றுபேர் கொண்ட குழுவின் தலைவர் குறித்து சில விடயங்கள் கூறவேண்டிய தேவையிருப்பதால் அந்த விடயத்திற்கு வருகின்றேன்.
இரசாயனப் பொறியியலாளரான ஜயசேகர தனது மனைவிக்கு எதிராகப் பதிவுசெய்த விவாகரத்து வழக்கொன்று தொடர்பில் சரத் சில்வாவை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு பதிவுசெய்த வழக்கின் நீதிபதியாக செயலாற்றியவரே உபாலி அபேரத்ன என்பவராவார். குறித்த வழக்கு தொடர்பாக குறித்த நீதிபதிக்கு எதிராக ஜயசேகரவினால் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் ஆணைக்குழு விசாரணையை மேற்கொண்டது. குறித்த விசாரணை உயர் நீதிமன்றத்தின் திஸ்ஸ பண்டார மற்றும் மார்க் பெர்னாந்து ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட நீதிபதி உபாலி அபேரத்னவை விசாரித்து வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர். குறித்த பரிசோதனை அறிக்கையை வாசித்ததன் பின்னர் குறித்த நீதிபதி தொடர்பில் எனக்குள் ஒரு வகையான வெறுப்பு ஏற்பட்டது என்பதைக் குறிப்பிடவேண்டும். அவர் சரத் சில்வாவைப் பாதுகாப்பதற்காக சட்டத்துக்கு முரணாக செயற்பட்டிருந்தார். முறைப்பாட்டாளரை சங்கடத்துக்குள்ளாக்க உச்ச அளவில் முயற்சித்திருக்கின்றார். அவர் நீதிபதியாகக் கடமையாற்ற எந்தவகையிலுமே பொருத்தமற்றவராவார்.
உபாலி அபேரத்ன நீதிபதி இந்த வழக்கு விசாரணையில் மேற்கொண்ட சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளைக் காரணம் காட்டி அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தயாரித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்தனர். சரத் சில்வா சட்டமா அதிபராக நியமனம் பெற்றதும் குறித்த விவாகரத்து வழக்கில் தமது ஆலோசனையின் பிரகாரம் செயற்பட்ட நீதிபதியை பாதுகாப்பதற்காக குறித்த அறிக்கையை மறைத்துவிட்டார்.
சட்டமா அதிபரின் செயற்பாடு குறித்து குரல் எழுப்ப வேண்டிய தேவை எனக்கேற்பட்டது. அவ்வாறு குரல் எழுப்பியதன் விளைவாகவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களின் ஒன்றியத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையின் பேரிலும் உபாலி அபேரத்ண தொடர்பாக என்னால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய குழு ஒன்றை நியமிக்க வேண்டிய நிலை நீதியரசருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கும் ஏற்பட்டது.
குறித்த மூவர் கொண்ட குழுவில் அமீர் இசதீன், ஹெக்டர் யாபா, பீ. எதிஸ்சூரிய ஆகிய நீதிபதிகள் அங்கம் வகித்தனர். குறித்த விசாரணையின்போது நீதிபதி குறித்த குற்றச்சாட்டு நிரூபணமானதால் பதவியிலிருந்து கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய வேண்டும் என்பதாக பரிந்துரைக்கபட்டு அதன் அடிப்படையில் 1990.07.31 ஆம் திகதி முதல் நீதிமன்ற சேவைக்குழுவினால் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது.
எனினும் குறித்த தீர்மானத்தை நீதிமன்ற சேவை ஆணைக்குழு அவசரமாகவே மாற்றியமைக்கவும் செய்தது. கட்டாய ஓய்வு வழங்குவதற்குப் பதிலாக குறித்த நீதிபதியின் பதவி உயர்வுகளை இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைத்து 2001.01.01 ஆம் திகதி முதல் மொனராகல மாவட்ட நீதிமன்றத்திற்கு தண்டனை இடமாற்றமொன்றை வழங்கியது.
சரத் சில்வா நீதியரசராக நியமிக்கப் பட்டதன் பின்னரான காலப்பகுதியில் குறித்த நீதிபதியின் தண்டனைக் காலம் நிறைவடையும் முன்பாகவே அவருக்கு மேல் நீதிமன்றத்திற்கு பதவி உயர்வொன்று வழங்கப்பட்டதுடன், நீதியரசர் ஓய்வுபெற முன்னர் மேன் முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனமும் வழங்கப்பட்டது என்பது இங்கு குறிப் பிடப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும். சரத் சில்வா தனக்கு உதவியவர்களுக்குத் தாராளமாகப் பிரதியுபகாரம் செய்திருக்கின்றார். இது நல்ல பண்பாக நோக்க வேண்டிய ஒன்று என்ற போதிலும் அந்த செயற்பாடு நீதித்துறைக்குப் பாரிய பாதகங்களை உண்டுபண்ணியிருக்கின்றது.
இந்தக் கதை இத்துடன் நிறைவடைய வில்லை. சில காலங்களின் பின்னர் குறித்த நீதிபதி ஜனாதிபதியினால் உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படுகின்றார். இது அன்றைய நீதியரசரின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே இடம்பெற்றது. மாவட்ட நீதிமன்றத்தில்கூட கடமையாற்றப் பொருத்தமற்றவர் என்பதாக மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவொன்றால் தீர்மானிக்கப்பட்ட ஒருவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வுபெற்ற இந்நபர் நல்லாட்சி அரசாங்கத்தின் தவறுகளை ஆராய்கின்ற ஆணைக்குழுவின் தலை வராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தற்போதைய அரசாங்கத்தினால் பழிவாங்கல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட குழுவின் தலைவராக செயற்படுகின்றார்.
குறித்த ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் இயங்குகின்ற ஆணைக் குழு, வழக்கொன்று தொடர்பாக சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்ட உத்தரவொன்று சட்டமா அதிபர் மூலமாக நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் புதிய விதத்தில் பிரச்சினை ஒன்று தோன்றியிருக்கின்றது. இந்த சம்பவங்கள் சாதாரண முறைகளில் நடைபெறுகின்றவைகள் அல்ல என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.-Vidivelli
- விக்டர் ஐவன்
தமிழில் : ராஃபி ஷரிப்தீன்