இந்த வருடம் இலங்கை ஹஜ் பயணிகளை மக்காவுக்கு அழைத்துச் செல்வது யார்?

0 676

இது­கா­ல­வரை இலங்கை ஹஜ் பய­ணிகள் தமது ஹஜ் பய­ணங்­களை முகவர் நிலை­யங்­க­ளூ­டா­கவே மேற்­கொண்டு வந்­தனர். தற்­போ­தைய புதிய அர­சாங்­கத்தின் ஹஜ் கமிட்டி ஹஜ் பய­ணிகள் முகவர் நிலை­யங்கள் ஊடா­க­வன்றி பய­ணிகள் அனை­வ­ரையும் ஹஜ் கமிட்­டியே அழைத்துச் செல்­ல­வி­ருப்­ப­தாக பத்­தி­ரிகை மூலம் அறி­யக்­கி­டைத்­தது. எனவே, முஸ்லிம் சமய பண்­பாட்­டலுவல்கள் திணைக்­க­ளத்தில் பல தசாப்­தங்­க­ளாக ஹஜ் விட­யங்­க­ளுக்குப் பொறுப்­பாக இருந்­தவர் என்ற வகை­யிலும் ஹஜ் குழுக்­களை திணைக்­களம் மூலமும் பிரத்­தி­யே­க­மா­கவும் அழைத்­துச்­சென்ற அனு­ப­வங்­களை வைத்து இது சம்­பந்­த­மான சாதக பாத­கங்­களை இக்­கட்­டுரை மூல­மாக தெளி­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன்.

ஹஜ் பயணம் என்­பது அதி­க­மா­னோ­ருக்கு வாழ்­நாளில் ஒரு முறையே கிடைக்­கின்­றது. அத்­துடன் அக்­க­ட­மையை அதிக பணம் செலவு செய்தே நிறை­வேற்ற வேண்­டி­யி­ருக்­கின்­றது. அத்­துடன் ஹஜ் கிரி­கையை பொது­வாக எமது வாழ்வில் செய்து பழக்­கப்­ப­டாத ஒரு கிரி­கை­யாக இருப்­ப­தி­னாலும் மேலும் ஒரு குறிப்­பிட்ட இடத்தில் வைத்தே நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டி இருப்­ப­தி­னாலும் இவ்­வி­ட­யத்தில் அர­சாங்­கங்­களும் ஹஜ் பய­ணி­களும் அதிக கவனம் செலுத்­து­கின்­றன. ஹஜ் கிரி­கை­களை மக்­க­ளுக்கு அவர்கள் பயணம் மேற்­கொள்ள முன்பு எவ்­வ­ள­வுதான் தெளி­வு­ப­டுத்­தி­னாலும் அக்­கி­ரி­கை­களை அவர்­களை செய்­விக்க வேண்­டிய நிலையே இருந்து வரு­கின்­றது. இத­னா­லேயே சவூதி அர­சாங்கம் அங்கு முதவ்விப், முஅல்லிம் போன்ற அமைப்­புக்­களை ஏற்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கின்­றன. முதவ்விப் என்றால் தவாப் செய்ய வைப்­பவர். முஅல்லிம் என்றால் ஹஜ் செய்யக் கற்றுக் கொடுப்­பவர் என்­பது பொரு­ளாகும். உலக நாடு­களில் இருந்­து­வரும் அனைத்து ஹஜ் பய­ணி­களும் மேற்­கூ­றப்­பட்ட முதவ்­விப்­களை அல்­லது முஅல்­லிம்­களை தொடர்­பு­கொண்டே ஹஜ் கிரி­கை­களை நிறை­வேற்ற வேண்­டி­யுள்­ளது. எனவே, ஹஜ் கிரி­கை­களை நிறை­வேற்ற வரு­ப­வர்­க­ளுக்கு அக்­கி­ரி­கை­களை செய்­விக்க வேண்டும் என்­பதை சவூதி அரசும் உணர்ந்­துள்­ளது தெளி­வா­கின்­றது. இலங்கை ஹஜ் பய­ணி­க­ளுக்கு எப்­பொ­ழுதும் வழி­காட்­டல்கள் மிக அவ­சி­ய­மென்­பது எனது அனு­பவ­ரீ­தி­யான கருத்­தாகும்.

இலங்கை ஹஜ் பய­ணிகள் பய­ணங்­க­ளின்­போது பொது­வாக சொகுசை எதிர்­பார்ப்­ப­வர்கள். தங்­கு­மி­ட­வ­சதி, உணவு வசதி, நீர் வசதி போன்­ற­வற்றை பெரிதும் எதிர்­பார்ப்­ப­வர்கள். இதனை அங்­குள்ள அர­பி­களும் நன்­க­றிந்து வைத்­துள்ளனர்.பொது­வாக, இலங்கை ஹஜ் பய­ணி­களை அர­பிகள் மீன் குஞ்­சுகள் என்று அழைப்பர். இலங்கைப் பய­ணிகள் தண்­ணீரை அதிகம் பாவிப்­ப­தினால் இவ­்வாறு அழைக்­கப்­பட்­டுள்­ளனர் போலும் . மேலும் இலங்கை ஹஜ் பய­ணிகள் ஹரம் ஷரீ­பிற்கு அரு­கா­மையில் கால்­ந­டை­யாகச் செல்லும் தூரத்­தி­லேயே தங்­கு­மி­டங்­களை எதிர்­பார்ப்­ப­வர்கள். வேற்று நாட்டு ஹஜ் பய­ணிகள் வெகு­தூர இடங்­களில் தங்­கி­யி­ருந்து கால்­ந­டை­யா­கவும், வாக­னங்­களை வாட­கைக்கு அமர்த்­தி­யுமே ஹரம் ஷரீ­பிற்கு வருவர். அத்­துடன் அவர்கள் உண­வு­வி­ட­யங்­களை அவ்­வ­ள­வு­தூரம் பொருட்­ப­டுத்­து­வ­து­மில்லை. கடை­களில் உண்­டு­விட்டு ஹஜ் கிரி­கை­களில் கவ­ன­மாக இருப்பர். இலங்கை ஹஜ் பய­ணி­களைப் பொறுத்­த­வ­ரையில் இலங்கை உண­வையே பெரிதும் எதிர்­பார்ப்பர். அந்­நாட்­டி­லுள்ள அதிக வெப்­ப­நி­லையும் சன­நெ­ரி­சலும் இலங்கை ஹஜ் பய­ணி­களின் மனோ­நிலை அங்கு சென்­றபின் பொது­வாக மாற்­ற­ம­டைந்தே காணப்­படும். இலங்கை ஹஜ் பய­ணி­களின் மனோ­நி­லையை நன்கு உணர்ந்­துள்­ள­தா­லேயே ஹஜ் முகவர் நிலை­யங்கள் அவர்­க­ளுக்கு ஏற்­றாற்போல் பத்­தி­ரி­கை­களில் விளம்­ப­ரங்­களைப் பிர­சு­ரிக்­கின்­றனர். அத்­துடன் இலங்கை ஹஜ் பய­ணிகள், உல­மாக்­களின் வழி­காட்­ட­ல­்க­ளையும் உப­தே­சங்­க­ளையும் அடிக்­கடி எதிர்­பார்ப்­ப­வர்கள். எப்­போதும் அவர்­க­ளது குழு­வுடன் உல­மாக்கள் இருப்­பதை விரும்­பு­ப­வர்கள். இலங்கை ஹஜ் பய­ணி­களில் அதி­க­மா­னோரை உல­மாக்­களே திரட்­டு­கின்­றனர் என்­பது முக்­கி­ய­மான விட­ய­மாகும்.

எனவே, மேற்­சொல்­லப்­பட்ட விட­யங்­களை அடிப்­ப­டை­யாக வைத்தே இலங்கை ஹஜ் பய­ணி­களை முகவர் நிலை­யங்கள் மூலம் அழைத்­துச்­செல்­வதா அல்­லது முகவர் நிலை­யங்­களை விடுத்து ஹஜ் கமிட்­டியின் மூலம் அழைத்துச் செல்­வதா என்­பதை தீர்­மா­னிக்க வேண்­டிய நிலையும் இருக்­கின்­றது. ஹஜ் கமிட்­டியின் மூலம் ஹஜ் பய­ணி­களை அழைத்துச் சென்ற வர­லா­றில்லை. மர்ஹூம் எம்.எச் முஹம்மத் அமைச்­ச­ராக இருந்­த­போது பல வரு­டங்கள் ஹஜ் கமி­ட­்டியின் மூலம் சுமார் 150 பேர்­கொண்ட ஹஜ் பய­ணிகள் குறைந்த கட்­ட­ணத்தில் அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ளனர். அதே­போன்று மக்­கா­வி­லுள்ள சிலோன் ஹவுசில் தங்க வைப்­ப­தற்­காக பிற்­கா­லத்தில் சுமார் 50 ஹஜ் பய­ணிகள் குறைந்த கட்­ட­ணத்தில் சில வரு­டங்­கள்­ அ­ழைத்­துச்­செல்­லப்­பட்­டுள்­ளனர். இது­த­விர மற்­றைய அனைத்து வரு­டங்­க­ளிலும் முகவர் நிலை­யங்கள் மூல­மா­கவே இலங்கை ஹஜ் பய­ணிகள் அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ளனர். கோட்­டா­முறை வரு­வ­தற்கு முன்­ப­தாக சில வரு­டங்­களில் 8000 ஹஜ் பய­ணிகள் சென்­றுள்­ளனர். முன்பு செயற்­பட்ட ஹஜ் கமிட்­டிகள் ஹஜ் பய­ணி­களின் தொகை கூடு­த­லாக இருந்­ததின் கார­ண­மா­கவும் இலங்கை ஹஜ் பய­ணி­களைப் பற்றி நன்­க­றிந்து வைத்­தி­ருந்­த­தி­னாலும் ஹஜ் பய­ணி­களை ஹஜ் கமிட்­டியின் மூலம் அழைத்துச் செல்­வது பற்றி யோசிக்­காமல் இருந்­தி­ருக்­கலாம். தற்­போது ஹஜ் பய­ணி­களின் தொகை குறை­வாக இருப்­பதன் கார­ண­மா­கவும் முகவர் நிலை­யங்­களின் முறை­யற்ற செயல்கள் அதி­க­ரித்து விட்­ட­தாலும் இவ்­வி­டயம் பிர­தமர் வரை சென்­றி­ருப்­ப­தி­னாலும் தற்­போ­தைய ஹஜ் கமிட்டி இந்த முடி­விற்கு வந்­தி­ருக்­கலாம் என்று நினைக்­கின்றேன்.

ஹஜ் பய­ணி­களின் நன்­மை­க­ருதி ஒரு நல்ல நோக்­கத்­திற்­காக இம்­மு­டிவு எடுக்­கப்­பட்­டி­ருந்­தாலும் இதனை செயற்­ப­டுத்­து­வதில் பெரும் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­படும் என்­பதே எனது அபிப்­பி­ரா­ய­மாகும். 3500 ஹஜ் பய­ணி­க­ளையும் ஓரிரு கட்­டி­டங்­களில் அமர்த்தி அவர்­களை பரி­பா­லிக்­கும்­போது எவ்­வா­றேனும் உணவு, தண்ணீர், இட­வ­சதி, போக்­கு­வ­ரத்து போன்ற பிரச்­சினைகள் ஏற்­ப­டவே செய்யும். அதன்­போது இப்­பி­ரச்­சி­னை­களை கையாள்­வ­தற்குப் போதி­ய­ளவு உத­வி­யா­ளர்கள் இருக்கப் போவ­தில்லை. அப்­படி இருப்­ப­வர்­களும் ஹஜ் பய­ணி­க­ளுக்கு அறி­மு­க­மில்­லாத ஒரு­வ­ரா­கவே இருப்பார். முகவர் நிலை­யங்கள் மூல­மாக ஐம்­பது அல்­லது நூறு பேர் கொண்ட குழுவே வேறு­வேறு கட்­டி­டங்­களில் தங்­கி­யி­ருப்பர். பிரச்­சி­னைகள் உரு­வா­கும்­போது அங்கு ஒரு­சிறு குழுவே காணப்­படும். அதனால் பிரச்­சி­னை­களை அணு­கு­வது எளி­தாகும். ஆனால், ஹஜ் கமிட்­டி­யின்­மூலம் போகும்­போது சுமார் 1000 பேர் தங்­கக்­கூ­டிய மூன்று அல்­லது நான்கு கட்­டி­டத்­தையே வாட­கைக்கு அமர்த்­துவர். இந்­நே­ரத்தில் ஹஜ் பய­ணிகள் அனை­வரும் ஓர் இடத்தில் ஒன்­று­சே­ரும்­போது அவர்­க­ளது பலம் அதி­க­ரிக்­கவே அங்கு குழப்­ப­நிலை ஏற்­பட வழி­யுள்­ளது. “மஹிந்த ஹஜ்ஜை குழப்­பி­விட்டார்” என ஆர்ப்­பாட்டம் செய்வர். இதற்கு உறு­து­ணை­யாக இம்­முறை ஹஜ் அனு­மதி வழங்­கப்­ப­டாத முகவர் நிலை­யங்கள் செயற்­ப­டும். அத்­துடன் பய­ணி­களில் அதி­க­மானோர் ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளாக இருப்­ப­தினால், சிலர் அர­சியல் நோக்கம் கொண்டும் செயற்­ப­டுவர். இதனை புகைப்­ப­ட­மெ­டுத்து சிலர் தொடர்பு சாத­னங்­களில் பதி­வி­டுவர். துவேஷ கருத்­துக்­களை பரப்­பி­வரும் தொலைக்­காட்சி நிலை­யங்­க­ளுக்கு இது நல்ல தீனி­யாக அமைந்­து­விடும். சிங்­களப் பத்­தி­ரி­கை­களில் கொட்டை எழுத்­துக்­களில் பிர­சு­ரிப்பர். அத்­துடன் ஹஜ்ஜை முடித்­து­விட்டு வந்த சில கோடாரிக் காம்­புகள் பிர­த­ம­ரிடம் சென்று அவர் பற்றி ஹஜ் பய­ணிகள் தெரி­வித்­ததை அள்­ளி­வைப்பர். “ நான் நல்­லது செய்­யப்போய் எனக்கு முஸ்­லிம்­களால் எப்­பொ­ழுதும் பிரச்­சி­னைதான்” என்று அவர் கூறுவார். எனவே, தற்­போது நாட்­டி­லி­ருக்கும் பிரச்­சி­னை­க­ளுடன் நாம் இத­னையும் சேர்த்­துக்­கொள்­ளத்தான் வேண்­டுமா என சிந்­திக்க வேண்டும்.

அதி­க­மான நாடு­களில் ஹஜ் கமி­ட்­டியே அந்த நாடு­களின் ஹஜ் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றன. மலே­சி­யாவில் ‘தபுங் ஹஜ்’ எனும் கமிட்டி பெரிய திட்­டங்­க­ளுடன் செயற்­ப­டு­கின்­றது. இந்­தி­யாவின் ஹஜ் கமிட்­டியும் இவ்­வாறே செயற்­ப­டு­கின்­றது. இலங்­கையின் ஹஜ் விட­யங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­க­ளமே மேற்­கொண்டு வரு­கின்­றது. இலங்­கையில் ஹஜ் கமிட்டி என வக்ப் சட்­டத்­திலோ அல்­லது திணைக்­கள செயற்­பா­டு­க­ளிலோ குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. குறிப்­பிட்ட காலத்தில் பொறுப்­பாக இருக்கும் அமைச்சர் சில காலங்­களில் ஹஜ் கமிட்டி என்ற ஒன்றை அமைப்பார். சில காலங்­களில் அமைக்­கா­மலும் விடுவார். ஹஜ் விட­யங்­களை திணைக்­களம் கவ­னிப்­பதால் ஹஜ் கமிட்டி அவ­சி­யப்­ப­டு­வ­தில்லை. அவ்­வாறு அமைக்­கப்­பட்ட ஹஜ் கமிட்டி அங்­கத்­த­வர்கள் வெறும் ஆலோ­ச­க­ராக இருந்து குறிப்­பிட்ட காலத்தில் ஹஜ்ஜை நிறை­வேற்­றிக்­கொள்வர். ஆனால் ஹஜ் கமிட்டி, ஹஜ் பய­ணி­களை அழைத்­துச்­செல்­வ­தாக இருந்தால் அந்த ஹஜ் கமிட்டி முன்பு போல் செயற்­பட முடி­யாது. ஹஜ் கமிட்டி ஒரு சட்­ட­ரீ­தி­யான அமைப்­பாக உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அதன் பொறுப்­புக்­களும் கட­மை­களும் வரை­ய­றுக்­கப்­பட்டு வருடம் முழு­வதும் தொடர்ச்­சி­யாக செயற்­பட வேண்டும். இதற்­காகத் திணைக்­க­ளத்தில் பிரத்­தி­யேக இடம், அதி­கா­ரிகள் இருத்தல் வேண்டும். திணைக்­களப் பணிப்­பாளர் இக்­க­மிட்­டியின் அங்­கத்­த­வ­ராக இருப்பார் அவரே பொறுப்புக் கூறு­ப­வ­ரா­கவும் இரு­ப்பார். திணைக்­க­ளத்­தினால் இவ்­வி­ட­யத்தைக் கையாள்­வது கடி­ன­மாகும். 3500 ஹஜ் பய­ணி­க­ளையும் பதி­வு­செய்து அவர்­க­ளது அனைத்து தக­வல்­க­ளையும் திரட்­டுதல், மாகாண மட்­டத்தில் அவர்­களை கூட்டி உப­தேசம் வழங்­குதல், அவர்­க­ளி­ட­மி­ரு­மி­ருந்து கட்­டணம் சேக­ரித்தல், அவர்­க­ளுக்­கான விமானம் தயார்­பண்­ணுதல், மக்­கா­விலும் மதீ­னா­விலும் அவர்­க­ளுக்­கான தங்­கு­மிடம் தயார்­பண்­ணுதல், அவ்­வாறு தயார் பண்­ணப்­பட்ட கட்­டி­டத்தின் மாடி மற்றும் அறை என்­பன போன்ற விப­ரங்­களை இங்கு வைத்தே ஹஜ் பய­ணி­க­ளுக்கு அறி­வித்தல், அவர்­க­ளுக்­கான சவூதி முஅல்லிம் ஒழுங்கு செய்தல், ஒவ்­வொரு ஹஜ் குழு­வுக்­கு­மாக இலங்­கை­யி­லி­ருந்து மௌல­வி­மார்­க­ளையும் உத­வி­யா­ளர்­க­ளையும் தெரிவு செய்தல், ஹஜ்­ஜின்­போது உணவு தயா­ரித்து வழங்­கு­வ­தாக இருந்தால் இங்­கி­ருந்தே 3500 பேருக்­கு­மான சமை­யல்­கா­ரர்கள், உத­வி­யா­ளர்கள், தள­பா­டங்கள் போன்­றன தயார்­ப­டுத்தல், போக்­கு­வ­ரத்து வச­திகள் செய்தல், ஹஜ் பய­ணி­களின் உத­விக்­காக ஹஜ் காலத்­தின்­போது ஜித்தா விமான நிலை­யத்­திலும் மக்­கா­விலும் இலங்கை விமான நிலை­யத்­திலும் குழுக்­களை அமர்த்­துதல் போன்ற ஒரு பாரிய வேலைத்­திட்­ட­மாக இது அமைந்து காணப்­ப­டு­வதால் ஒரு பாரிய மனித வளம் இதற்கு அவ­சி­ய­மா­கின்­றது.

முகவர் நிலை­யங்கள் ஒரு ஹஜ் பய­ணி­யிட­மி­ருந்து அதிக இலாபம் பெறு­வதும், அத்­தோடு அவர்­களால் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட விட­யங்கள் ஹஜ் பய­ணி­க­ளுக்கு வழங்­கப்­ப­டா­மையும், பல ஹஜ் பய­ணிகள் ஏமாற்­றப்­பட்­டி­ருப்­பதும் உண்­மையே. எனவே, ஹஜ் கமிட்டி இக்­க­டி­ன­மான பொறுப்பை இவ்­வ­ருடம் கைவிட்டு இவ்­வ­ருட ஹஜ்­ஜின்­போது நேர­கா­லத்­துடன் சென்று அனு­ப­வங்­களைப் பெற்று அடுத்த வரு­டத்­திற்­காகத் தற்­போ­தி­ருந்தே நல்­லதோர் குழுவைத் தயார்­ப­டுத்தி செயற்­ப­டு­வதே நல்­லது என்­பது எனது ஆலோ­ச­னை­யாகும். எனவே, இவ்­வ­ரு­டத்­திற்­காகப் பின்­வரும் அடிப்­ப­டையில் செயற்­ப­டு­வது நல்­ல­தாகும்.

1. ஹஜ் கமிட்டி ஐந்து அல்­லது ஆறு இலட்சம் ரூபா­வெனத் தீர்­மா­னித்தால் அதில் என்­னென்ன சேவைகள் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதைக் குறிப்­பிட வேண்டும். இக்­கட்­ட­ணத்தில் கொண்­டு­செல்ல இணங்கும் முகவர் நிலை­யங்­களை மாத்­திரம் உள்­வாங்கி ஒவ்­வொரு முகவர் நிலை­யத்­திற்கும் 100 பய­ணி­க­ளை­யா­வது கைய­ளிக்க வேண்டும். ஏனெனில், இலாபம் குறை­வாக இருப்­ப­தினால் ஓர­ள­விற்கு அவர்­க­ளது இலா­பத்­தி­னையும் கருத்­திற்­கொள்தல் வேண்டும். நூற்­றிற்கும் மேற்­பட்ட முகவர் நிலை­யங்கள் சென்ற வருடம் பதி­வா­கி­யி­ருந்­தாலும் இம்­முறை 35 முகவர் நிலை­யங்­க­ளையே நேர்­முகப் பரீட்­சையின் மூலம் தெரிவு செய்­யக்­கூ­டி­ய­தாக இருக்கும். ஒவ்­வொரு வரு­டமும் புதி­தா­கவே விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­வதால் முன்­பி­ருந்­த­வர்கள் அனை­வரும் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும் என்ற அவ­சி­யம் இல்லை. முன்­னைய வரு­டங்­களில் நல்ல முறையில் செயற்­பட்ட முகவர் நிலை­யங்­க­ளையே கருத்­திற்­கொள்ள வேண்டும். முகவர் நிலை­யங்­க­ளி­ட­மி­ருந்து போது­மா­ன­ளவு உத்­த­ர­வாதப் பணம் பெறுதல் வேண்டும். இலங்­கை­யி­லி­ருந்து பய­ண­மாகும் அனைத்துப் பய­ணி­க­ளி­னதும் கட்­டணம் ஒன்­றா­கவே இருத்தல் வேண்டும். இக்­கட்­டண முறையை உடைப்­ப­தற்­காக முகவர் நிலை­யங்கள், “சில ஹஜ் பயணிகள் கூடுதல் வசதி கேட்பதாகவும் அவர்களுக்காக கட்டணத்தை அதிகரிக்க முடியுமா” எனக் கேட்பர். இங்கு எல்லோரிடமும் சமமான கடடணமே அறவிடப்படவேண்டுமென உத்தரவிடவேண்டும். மேலும் அனுமதி மறுக்கப்பட்ட முகவர் நிலையங்கள் நீதிமன்றம் செல்வதாகக் கூறுவர். அவர்கள் ஒவ்வொரு வருடமும் நீதிமன்றம் செல்லத்தான் செய்கின்றனர். அதனை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், ஹஜ் பயணிகளுக்காகவே முகவர் நிலையங்களேயன்றி முகவர் நிலையங்களுக்காக ஹஜ் பயணிகள் இல்லை என்பதை நாம் மனதிற்கொள்ள வேண்டும்.

2. ஹஜ் கமிட்டியானது இவ்வருடத்தில் அவர்களது கட்டணத்தில் ஹஜ் கமிட்டியின்மூலம் 100 பேரையாவது அழைத்துச்சென்று பரீட்சார்த்தமாக செய்து பார்த்தால் அடுத்த வருடத்திற்கு ஒரு அனுபவமாக அமையும். இக்குழுவிற்குள் திணைக்கள அதிகாரிகள் குழு, வைத்தியக்குழு மற்றும் அமைச்சர் குழு போன்றவற்றையும உள்வாங்கக் கூடியதாக இருக்கும். இதன்மூலம் ஹாஜிகளுக்கும் பேருதவியாக அமையும். மர்ஹூம் எம். எச். முஹம்மதின் காலத்தில் இவ்வாறே மேற்கொள்ளப்பட்டது.

3. அஸீஸியாவில் இருக்கும் சிலோன் ஹவுஸில் 242 ஹஜ் பயணிகள் தங்குவதற்கான வசதிகள் உள்ளன. இதில் மிகக்குறைந்த கட்டணத்தில் இலங்கை ஹஜ் பயணிகளை தங்கவைக்கலாம். எனவே, இது விடயத்திலும் இலங்கை ஹஜ் கமிட்டி கவனமெடுத்தல் நல்லது. எனவே, புதிய அரசாங்கத்தின் புதிய ஹஜ் கமிட்டி ஆரம்பத்திலேயே பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாது விடயங்களை நுணுக்கமாகக் கையாள்வதே நல்லது.-Vidivelli

  • மெளலவி
    ஜே.மீரா மொஹிதீன் (கபூரி)

Leave A Reply

Your email address will not be published.