தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தற்சமயம் பேச்சுவார்த்தைகளில் அக்கறையில்லை. அவர்கள் இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினர் ஏற்றுக் கொள்ளாத விடயங்களையே கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுப்பதற்குப் பேச்சுவார்த்தை நடத்துவதானால் தமிழர்களுக்காகப் பேசக்கூடிய பொறுப்புள்ள பிரதிநிதிகள் எமக்குத் தேவை.
அதனால் பொதுத் தேர்தலை நடத்திய பின்னர் தமிழர்களினால் தெரிவு செய்யப்படக்கூடிய பிரதிநிதிகளுடன் எதிர்காலம் குறித்துப் பேசவருமாறு கேட்போம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தனது இந்திய விஜயத்தின்போது டில்லியில் வைத்து ‘ த இந்து ‘ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் ராஜபக் ஷவை அந்தப் பத்திரிகையின் இராஜதந்திர விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர் நேற்று முன்தினம் நேர்காணல் செய்தார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பான தங்களது அக்கறையை புதுடில்லியில் பிரதமர் மோடியும் கொழும்புக்கு விஜயம் செய்த வேளையில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் வெளிக்காட்டியிருந்தார்கள். உங்களது அரசாங்கத்திடமிருந்து பிரதிபலிப்பையும் அவர்கள் எதிர்பார்த்தார்கள். இதற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கப் போகிறீர்கள் என்று பிரதமர் ராஜபக் ஷவிடம் கேட்கப்பட்ட போது அவர், ‘இந்தியாவின் இந்த அக்கறைகளை நாம் எப்போதும் விளங்கிக் கொண்டிருக்கின்றோம். போர் முடிவுக்கு வந்த பின்னர் நாம் தேர்தல்களை நடத்தினோம். வடபகுதி மக்கள் தங்களது சொந்த முதலமைச்சரைத் தெரிவு செய்யவும் அனுமதித்தோம். எமக்குத் தோல்வியே கிடைக்குமென்று தெரிந்திருந்தும் கூட நாம் அங்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினோம். ஆனால் எதுவுமே முன்னோக்கி நகரவில்லை. எதிர்வரும் ஏப்ரலில் எமது பாராளுமன்றத் தேர்தலையும் பிறகு மாகாண சபை தேர்தலையும் நடத்தவிருக்கின்றோம். யாழ்ப்பாணத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழுவொன்றை நாம் நியமிப்போம்’ என்று இதற்கு பிரதமர் மஹிந்த பதிலளித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அதிகாரப் பரவலாக்கத்துக்கு மேலாக அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார். முன்னோக்கி செல்வதற்கான வழி இது என்பதே அவரது நம்பிக்கை. உங்கள் இருவரினதும் நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் இருக்கின்றதா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், ‘இல்லை. இல்லை. மக்களுக்கு அபிவிருத்தி தேவைப்படுகிறது. 30 வருடங்களாக அபிவிருத்தியின்றி அவர்கள் கவலைப்படுகின்றார்கள். அதனால் அந்தப் பகுதிகளை முதலில் அபிவிருத்தி செய்ய வேண்டியிருக்கிறது ‘ என்றார்.
இலங்கையின் தேசிய தின வைபவத்தில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக சர்ச்சை நிலவியது. இது தமிழர்களுக்கு கூறப்பட்ட ஒரு செய்தியாக இருந்தால் அவர்களுக்கு மீள நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு எவ்வாறு செயற்படுவீர்கள் என்று சுஹாசினி ஹைதர் கேட்ட போது, ‘உலகம் பூராகவும் பார்த்திருப்பீர்கள். தேசிய கீதம் பிரதானமாக ஒரு மொழியிலேயே இசைக்கப்படுகிறது. இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன. என்றாலும் உங்களது தேசிய தினங்களில் நீங்கள் ஒரு மொழியில்தான் தேசிய கீதத்தை இசைக்கின்றீர்கள். இதே முறைதான் இலங்கையிலும். நான் யாழ்ப்பாணம் போகும்போது பாடசாலையொன்றில் அவர்கள் தமிழில் தேசிய கீதத்தை இசைக்கிறார்கள். தேசிய கீதத்தை தங்களது விருப்பப்படி இசைப்பதற்கு மக்கள் விரும்பினால் எந்த ஆட்சேபனையும் இல்லை. சில அரசியல்வாதிகளே இதுகுறித்துப் பிரச்சினையை கிளப்புகிறார்கள். இந்தப் பிரச்சினை குறித்து பொதுமக்களுக்கு அக்கறை இல்லை என்றார்.-Vidivelli