சிலாபம் அம்பகந்தவில பகுதியில் அடக்கஸ்தலம் ஒன்றை மையப்படுத்தி முஸ்லிம்கள் வருடாந்தம் நடத்திவரும் கந்தூரி வைபவத்திற்கு சிலாபம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் தடையுத்தரவினைப் பிறப்பித்ததையடுத்து நேற்று நடைபெறவிருந்த கந்தூரி வைபவம் இரத்துச் செய்யப்பட்டது.
சிலாபம் அம்பகந்தவில பகுதி கத்தோலிக்க மக்களும் கத்தோலிக்க தேவாலய அருட் தந்தையும் தெரிவித்த எதிர்ப்பினையடுத்தே இக்கந்தூரி வைபவம் தடை செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சிலாபம் பஸார் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் ஜே. பயிஸ்தீனுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
குறிப்பிட்ட கந்தூரி வைபவம் இடம்பெற்றால் கிராமவாசிகளுக்கு இடையில் கலவரம் ஏற்படும் நிலை உருவாகும். அதனால் அமைதிக்கும் சமாதானத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என சிலாபம் பொலிஸார் சிலாபம் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டக் கோவை 106 (1) பிரிவின் கீழ் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி சிலாபம் பஸார் பள்ளிவாசல் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அடக்கஸ்தலத்தில் நூறு வருடங்களுக்கும் மேலாக கந்தூரி வைபவம் இடம்பெற்று வருகிறது. சிலாபம் பஸார் பள்ளிவாசலின் பரிபாலனத்தின் கீழேயே இந்த அடக்கஸ்தலம் இருக்கிறது. கந்தூரி வைபவத்தில் வருடாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழமையாகும்.
நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த இந்த அடக்கஸ்தலத்தில் நடைபெற்று வந்த கந்தூரி வைபவத்திற்கு கத்தோலிக்க மக்களும் கத்தோலிக்க தேவாலய அருட் தந்தையும் எதிர்ப்புத் தெரிவித்து தடை செய்துள்ளமை தொடர்பில் தரீக்கா கவுன்ஸில், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் சிலாபம் பஸார் பள்ளிவாசல் சட்ட ஆலோசகரும் சிலாபம் நகர சபையின் உப தலைவருமான சட்டத்தரணி சாதிகுல் அமீனை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
அம்பகந்தவிலயில் குறிப்பிட்ட அடக்கஸ்தலத்துக்கு சுமார் 2 ஏக்கர் பெறுமதியான காணி சொந்தமாக உள்ளது. இந்தக் காணியை அபகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கையாகவே இதனைக் கருதுகிறேன். ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பிருந்தே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்பு கிறிஸ்தவர்கள் அக்காணியில் அடக்கஸ்தலத்துக்கு 10 அடிகள் அருகில் சிலையொன்றினையும் வைத்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காணிக்கு வேலியொன்று இல்லை.
முஸ்லிம்கள் குழப்பங்களில் ஈடுபட விரும்பவில்லை. பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணி இது. சமாதானமாகவே இதற்குத் தீர்வுகாண விரும்புகிறோம் என்றார்.
சிலாபம் பஸார் பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவர் ஜே. பயிஸ்தீன் கருத்து தெரிவிக்கையில்; ‘நீதிமன்ற உத்தரவினையடுத்து நாம் இன்று (நேற்று) கந்தூரி வைபவத்தை நடத்தவில்லை என்றாலும் கந்தூரி நிறுத்தப்பட்டுள்ளதை அறியாது நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தரும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சிலாபம் பொலிஸாரிடம் கோரியுள்ளோம்’ என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்