உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : குற்றமற்ற இளைஞர்களை விடுதலை செய்ய முடியுமா?
பிரதி சொலிசிட்டர் ஜெனரலுடன் முஸ்லீம் எம்.பி.க்கள் சந்தித்து பேச்சு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களையடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இதுவரை காலம் எதுவித குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படாது விசாரணைகளுக்கென தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் இளைஞர்களின் விடுதலை தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹன்த அபேசூரியவைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹன்த அபேசூரியவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்குமிடையில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டமா அதிபர் திணைக்களத்தில் இடம்பெற்றது.
முஸ்லிம் இளைஞர்கள் ஏப்ரல் குண்டுத்தாக்குதல்களைக் காரணம் காட்டி இதுவரை எவ்வித குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படாமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.
இவ்வாறு அவர்கள் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் சமூகத்தில் அவர்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.
இவர்களில் சிலர் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை எதிர்நோக்கியிருப்பவர்கள் மேலும் சிலர் கற்கை நெறிகளை தொடர்ந்தவர்கள். இதனால் கல்வித்துறையிலும் இவர்கள் பின் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விளக்கமளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது விடுதலை தொடர்பில் கவனம் செலுத்துமாறும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டினர்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை செவிமடுத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற் கொள்வதாக உறுதியளித்தார்.-vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்