சோங்கிங், சீனா – ஜியாங்குவோ வூஹான் நகரின் சுவாச நோய்களுக்கான வைத்தியசாலையில் தனது நீண்ட நேரப் பணிக்குப் பின்னர் மிகவும் சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பினார். இவ்வைத்தியசாலை புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக செயற்படும் மருத்துவமனைகளில் ஒன்றாகும்.
52 வயது நிரம்பிய இந்த சுத்திகரிப்புத் தொழிலாளி மருத்துவப் பராமரிப்பு நாடும் நோயாளர்களினால் இவ் வைத்தியசாலை நிரம்பிக் காணப்படுவதாகக் கூறினார். வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் மேலதிகப் பணி புரியும் இவ்வைத்தியசாலைக்கான வழங்கல்கள் குறைவடைந்து வருகின்றன.
கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதிப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட இந்த புதிய வகை வைரஸ் இதுவரை 400 உயிர்களைக் காவு கொண்டுள்ளதோடு 17,000 க்கும் அதிகமான மக்களைத் தொற்றியுள்ளது. அதிகளவான உயிரிழப்புக்கள் மற்றும் தொற்றுகள் ஹூபேய் மாகாணத்திலேயே ஏற்பட்டுள்ளன.
வூஹான் நகரம் இம்மாகாணத்தின் தலைநகராகக் காணப்படுகின்றது.
மிகவும் விரைவாகப் பரவும் இந்த வைரஸ் ஹூபேய் மாகாணத்தின் மருத்துவப் பராமரிப்பு முறைமையை புரட்டிப்போட்டுள்ளது. சில வைத்திய அதிகாரிகள் சீன அரசு இந்நோய் முகாமைத்துவத்துக்கு தயாரற்ற நிலையில் இருந்ததாகக் கூறுவதுடன், சீன அரசின் நோய் முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒழுங்கற்றது எனவும் விபரிக்கின்றனர்.
எனினும், ஜியாங்குவோ கடந்த ஜனவரி 28 ஆம் திகதி தனது தொலைக்காட்சியை நோக்கிய போது அதில் செய்தி வாசிப்பாளர்கள் அரசின் “வெளிப்படைத்தன்மையான மற்றும் துரிதமான” நோய் முகாமைத்துவ செயற்பாடுகளைப் புகழ்வதையும் வூஹான் நகரவாசிகள் சிலர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நோயைக் கட்டுப்படுத்தும் இயலுமையில் மகிழ்வுடன் நம்பிக்கை தெரிவிப்பதையும் கண்ணுற்றார்.
அல்-ஜஸீறா அலைவரிசையுடன் தொலைபேசியில் உரையாடிய ஜியாங்குவோ தனது ஒற்றைப் பெயரை மாத்திரமே வழங்க விரும்பினார். அச்சந்தர்ப்பத்தில் அவர் சீனாவின் மைக்ரோ வலைப்பதிவுத் தளமான வீபோ வினை (Weibo) தொடர்ந்து பயன்படுத்தும் தனது மகனை உடனடியாகத் தொடர்பு கொண்டதாகக் கூறினார். மகனுடனான உரையாடல் இன்னும் அவரது மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
“நீ செய்திகளைக் காண்கிறாயா? அவர்கள் இதனை உண்மையாகக் கூறுகின்றனரா? எனது வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் சோர்வின் உச்ச கட்டத்துக்கே சென்றுவிட்டனர். அவர்கள் உடைந்து விழும் நிலையை அடைந்து விட்டனர். அந்தக் காணொலிகளில் மகிழ்வுடன் பேட்டியளிக்கும் மனிதர்கள் வேறொரு உலகில் வாழ்கின்றனரா?” ஜியாங்குவோவின் மகன் தனது வீபோ கணக்கில் உடனடியாக வைத்தியசாலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் கதிரைகளில் தெளிவான சோர்வுடன் உறங்கும் புகைப்படத்துடன் ஒரு செய்தியைப் பதிவிட்டார். “CCTV (சீன தொலைக்காட்சி நிறுவனம்) எதைச் சொல்கிறது என நான் அலட்டிக்கொள்ளவில்லை. எனினும் வூஹானின் நிலைவரம் மிகவும் மோசமாகவே உள்ளது” எனப் பதிவிட்டார்.
அப்புகைப்படம் துரித கதியில் ஆயிரக்கணக்கான வீபோ பயன்படுத்துநர்களால் பகிரப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான விருப்புகளையும் பெற்றுக்கொண்டது. அது கடந்த சில நாட்களில் சீனாவின் சமூக ஊடக வலைத்தளத்தில் இடப்பட்ட இவ்விடயம் தொடர்பான பல பதிவுகளில் ஒன்றாகக் காணப்பட்டதுடன் சீன அரசின் மிகவும் தணிக்கை மிக்க ஊடகத்தின் கதையினை கேள்விக்குள்ளாக்குகின்றது.
சீன அரசாங்கம் இந்நோய்ப்பரம்பல் பற்றிய விடயங்களை மிகவும் இறுக்கமான கட்டுப்பாட்டுடன் பேணி வருகின்றது. மனித உரிமைக் கண்காணிப்பகம் கடந்த ஜனவரி 30 ஆம் திகதி சீன அதிகாரத் தரப்புகள் மக்களுக்கு தகவல்களை மறைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையை குறைத்து வெளியிடுவதாகவும் தொற்றின் தீவிரத்தன்மையை குறைத்துக் கூறுவதாகவும் அப்பணியகம் குறை கூறுகின்றது. நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் குழு சீனப் பொலிசார் நோய்ப்பரம்பல் பற்றி “வதந்திகளைப் பரப்புவோர்” என்ற குற்றச் சாட்டில் மக்களை தொல்லைப்படுத்துவதாகவும் வைத்தியர் ஒருவர் இப்புதிய வைரஸ் சீனாவில் 2003 ஆம் ஆண்டு 349 மக்களை உயிரிழக்கவும் 5,300 மக்களுக்கு தொற்றியதுமான “சார்ஸ்” வைரசுக்கு ஒப்பானது என தனது சக பணியாளர்களை எச்சரித்தமைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றது.
கடந்த ஜனவரி 20 இற்குப் பின்னர் சீன அதிபர் ஸீ ஜின்பிங் தான் இந்த வைரஸ் தொற்றினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவுள்ளதாகவும் தகவல்கள் நேரத்துக்கு ஏற்ப வெளியிடப்படும் எனவும் கூறினார். அதன் பின்னரே அரச ஊடகம் இந்த அவசர நிலை பற்றிய தகவல்களை வெளியிட ஆரம்பித்தது. சில நாட்களின் பின்னர் 11 மில்லியன் சனத்தொகை கொண்ட வுஹான் நகரம் நோய்த்தடைக் காப்பு மற்றும் வெளியுலகத் துண்டிப்பு என்பவற்றை எதிர்கொண்டது. இத்துண்டிப்பு 50 மில்லியன் மக்கள் வரை அதிகரிக்கப்பட்டது. இந்நகர்வுகளுக்காக சீன அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பாராட்டினையும் பெற்றுக்கொண்டது.
எனினும், அதனைத் தொடர்ந்து வந்த நாட்களில் அதிகமான வுஹான் நகர மக்கள் சீன அரசாங்கம் இந்த அவசர நிலையினைக் கையாளும் விதத்தைக் குறை கூற சமூக ஊடகத்தை நாடத் தொடங்கினர். சமூக ஊடகப் பாவனையாளர்கள் வைத்தியசாலைகளில் போதிய கவனிப்பு வழங்கப்படவில்லை எனவும் அத்துடன் இந்நோய்ப் பரம்பல் பற்றிய தகவல்கள் மக்களை அடைவது தாமதப்படுத்தப்படுகின்றது எனவும் கூறுகின்றனர்.
கடந்த புதன்கிழமை இன்னொரு வீபோ பாவனையாளர் தனது தாத்தா வைத்தியசாலை ஒன்றின் நடைபாதை மண்டபத்தில் வீழந்து கிடக்கும் புகைப்படத்துடன் பின்வரும் பதிவேற்றத்தை மேற்கொண்டிருந்தார். “எனது தாத்தா மூன்று நாட்களாகக் காய்ச்சலுடன் காணப்படுகின்றார். எந்த ஒரு வைத்தியசாலையும் அவரை அனுமதிக்கவில்லை. அரசாங்கம் எம் அனைவரையும் இவ்வாறு மரணிக்க விடப் போகின்றதா?”
கடந்த ஜனவரி 22 ஆம் திகதி ஒரு சமூக ஊடகப் பாவனையாளர் பின்வரும் கேள்வியினைக் கொண்ட பதிவேற்றம் ஒன்றை மேற்கொண்டார். “இந்நோய்ப்பரம்பல் மக்களின் கவனத்தைக் கவர ஏன் இவ்வளவு கால தாமதம் ஆகியது?”
இக்கட்டுரைக்கு வழங்கப்பட்ட பதில்களில் பின்வரும் விடயமும் காணப்பட்டது. “இந்நோய் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு தொற்றக் கூடியது என்ற விடயத்தை அரசாங்கம் ஜனவரியின் ஆரம்பப் பகுதியிலேயே அறிந்து கொண்டது. எனினும் இன்று வரை செய்தி அறிக்கைகள் அவ்வாறான சாத்தியம் எதுவுமில்லை என்றே கூறி வருகின்றன. அவர்கள் இந்த தகவலை ஆரம்பத்தில் பகிர்ந்த எட்டு நபர்களை வதந்திகளைப் பரப்புகின்றனர் எனக் கூறி கைது செய்தனர். 200 நபர்களுக்கு மேல் இறந்த பின்னரே அரசாங்கம் பதில் வழங்க ஆரம்பித்தது. அரசாங்கமே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்”.
வூஹானின் அயல் நகரமான ஹுவாங்காங் நகரைச் சேர்ந்த இளம் நபர் ஒருவர் கடந்த ஜனவரி 30 அன்று தான் பதிவேற்றிய இணையக் காணொலி ஒன்றில் பின்வருமாறு கூறினார்: “இக்காணொலியை பதிவேற்றம் செய்தமைக்காக நான் கைது செய்யப்படலாம். எனினும் ஹுவாங்காங் நகரின் தீவிர நிலை எவ்வாறு உள்ளது என நீங்கள் அனைவரும் அறிய வேண்டும் என நான் விரும்புகின்றேன். நாங்கள் நாதியற்ற நிலையில் உதவியை எதிர்பார்த்துள்ளோம். அரசாங்கம் எம்மைக் கருத்தில் கொள்ளவில்லை”.
இந்தக் காணொலி பின்னர் அகற்றப்பட்டிருந்தது.
சீன அதிகாரத் தரப்பு வீபோ மற்றும் ஏனைய இயங்கு தளங்களில் பகிரப்படும் அனைத்து தகவல்களையும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது. அரசின் கதைகளுக்கு எதிரான அனைத்துப் பதிவுகளையும் அழிப்பதுடன் அதனை பதிவிடும் பயனர்களை தடை செய்து வருகின்றது. இச்சூழமைவில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக வீபோ பாவனையாளர்கள் இடையே காணப்படும் கோபம் மற்றும் வெறுப்பு என்பன அசாதாரண நிலைகளில் காணப்படுகின்றன.
சீனாவின் அதிக தொழில்நுட்ப அறிவுகொண்ட மக்கள் அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற இயங்குதளங்களை வீ. பீ. என் (VPN) தொழில்நுட்பம் மூலம் அணுகி செய்திகளை வெளியில் கொண்டுவருகின்றனர்.
கியூஷி சென் என்ற மிகவும் பிரசித்தமான வழக்கறிஞர் வூஹான் நகரத்துக்கு நோய்ப்பரம்பல் பற்றி அறிக்கையிடப் பயணம் மேற்கொண்டிருந்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் அங்குள்ள வைத்தியசாலைகளில் காணப்பட்ட மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறை பற்றி தனது மனக்குறையை வெளியிட்ட பதிவில் பின்வரும் விடயமும் காணப்பட்டது. “நான் சாவுக்கே அஞ்சுபவனல்ல, நான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அஞ்சுவேன் என எண்ணுகின்றீர்களா?”
யூடியூப் பக்கத்தில் வெளியுலகத் துண்டிப்புக்குள்ளான வூஹான் நகர நிலையினை விபரிக்கும் காணொலியொன்றைப் பதிவேற்றிய அந்நகரவாசி ஒருவர் பின்வருமாறு கூறுகின்றார். “இங்கு வாழ்வது நரகத்தில் வாழ்வது போலவும் சாவை எதிர்பார்த்திருப்பது போன்றும் உள்ளது.”
இவ்வாறான மற்றும் ஏனைய சமூக ஊடகப் பதிவுகள் வூஹான் நகரத்தில் இடம்பெறும் விடயங்கள் பற்றிய நெருக்கமான பார்வையை வழங்குவது மாத்திரமன்றி, அம்மக்கள் அனுபவிக்கும் துன்பங்களின் மனிதப் பரிமாணத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.
உதாரணமாக, வீ சட் (WeChat)) வலைத்தளத்தில் ஒரு பெண் தனது தாயின் மரணம் பற்றி கட்டுரை ஒன்றை விபரமாக வெளியிட்டிருந்தார்.
”எனது தாயாரின் இறந்த உடலை ஒரு வாகனம் வேகமாக எடுத்துச் சென்றது. அவ்வாகனத்தின் பின்னால் நான் அழுது கொண்டே ஓடினேன். அவ்வாறு நான் ஒருபோதும் என் வாழ்வில் அழவில்லை. நான் மனக்கசப்பையும் நம்பிக்கையற்ற நிலையையும் உணர்ந்தேன்.”
வூஹான் நகரில் நிலவும் இத்தெளிவான ஏமாற்றத்துக்கு மத்தியில் சீனாவின் சில தனியார் உடைமை ஊடகங்கள் நோய்ப்பரம்பல் பற்றிய உத்தியோகபூர்வமான கதைகளை கேள்விக்குட்படுத்த ஆரம்பித்துள்ளன. மருத்துவப் பொருட் பற்றாக்குறை பற்றிய விடயங்கள் மற்றும் உள்ளூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தும் செய்திகளை அவை வெளியிட ஆரம்பித்துள்ளன. இச்செஞ்சிலுவைச் சங்கம் நன்கொடைகளை பகிர்ந்தளிக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கைக்சின் என்ற பரவலாக வாசிக்கப்படும் செய்தி இணையத்தளம் புதிய வைரஸ் பரம்பல் பற்றி பேசியதற்காக விசாரிக்கப்பட்ட வைத்தியருடனான நேர்காணலை வெளியிட்டிருந்தது. இவ்விணையத்தளம் சீனாவில் நிலவும் பேச்சுச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் இந்நோய்ப்பரம்பலை கட்டுப்படுத்தும் முயற்சிகளைப் பாதித்துள்ளதாகக் கூறுகின்றது.
இருந்த போதிலும் கொரோனா வைரஸ் பற்றி அரச ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் மிகவும் நேர்மறையானதாகக் காணப்படுகின்றன. வூஹான் நகரில் நிலவும் தெளிவான கோபநிலை பற்றி குறிப்பிடப்படாத நிலையில் அரச தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் மணி நேரத்துக்கு ஒரு முறை ஒளிபரப்பும் செய்திகளில் நோய்ப்பரம்பலைக் கட்டுப்படுத்தும் சீனாவின் துரித முயற்சிகள் சர்வதேசச் சமூகத்தின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளதாகவும் செய்திகள் வாசிக்கப்படுகின்றன.
குளோபல் டைம்ஸ் என்ற அரச உடைமையான ஆங்கில செய்திப்பத்திரிகை அவசர நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீன அரசு மேற்கொள்ளும் பரம்பலான வெளியுலகத் துண்டிப்பு மற்றும் வூஹான் நகரில் 10 நாட்களுக்குள் கட்டப்பட்ட வைத்தியசாலை போன்ற விடயங்களில் தனது கவனத்தை குவித்து செய்திகளை வெளியிடுகின்றது.
அப்பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் பின்வருமாறு கூறுகின்றது. “சாதாரண நிலைகளில் நம்பமுடியாத சில நடவடிக்கைகள் மிகவும் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் ஒட்டுமொத்த சமுதாயமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது. இந்நோய்ப் பரம்பலுக்கு எதிரான பாரிய ஆனால் வரிசைக்கிரமமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.”
அத்துடன் குறித்த கட்டுரை ஐக்கிய அமெரிக்கா அண்மையில் சீன நாட்டிலிருந்து வருகைதரும் பிரயாணிகளை தடுப்பதற்கு அந்நாடு மேற்கொண்ட தீர்மானத்தை சாடுகின்றது.
“இறுதியாக இந்நோய்ப்பரம்பல் இல்லாதொழிந்துவிடும். 17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சார்ஸ் நோய்ப்பரம்பலின் பொழுது அதிகமான மக்கள் சீனாவைக் குறை கூறினர். ஆனால் இறுதியாக என்ன நடந்தது? எவரும் பொதுமக்கள் சுகாதாரத் தீவிர நிலை ஒன்றுக்கு எதிராகப் போராடும் சீனாவின் வல்லமையை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஏனைய நாடுகளினால் எடுக்க முடியாத பல நடவடிக்கைகளை எமது நாட்டினால் எடுக்க முடியும் என்பதால் இத்தீவிர நிலை முடிவடைந்த பின்னர் நாம் விரைவாக வழமைக்குத் திரும்புவோம்” என்று அக்கட்டுரை மேலும் கூறுகின்றது.-Vidivelli
- மூலக் கட்டுரை:
ஷாவ்ன் யுவான்,
தமிழாக்கம்: அதீக் சம்சுதீன்