புத்தளம், வணாத்தவில்லு பகுதியில் அமையப்பெற்றிருந்த பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமின் பயிற்சி முகாமில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பொலேரோ ரக கெப் வண்டியொன்றை மாவனெல்லையில் வைத்து சி.ஐ.டியினர் மீட்டுள்ளனர். வணாத்தவில்லு பயிற்சி முகாம் தொடர்பில் சி.ஐ.டி. முன்னெடுக்கும் விஷேட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கமைய, இந்த கெப் வண்டி நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த கெப் வண்டி வணாத்தவில்லு பயங்கரவாத முகாமிலிருந்து வெடிபொருட்களை வேறிடங்களுக்கு கொண்டு செல்லவும், குறித்த முகாமுக்குத் தேவையான மூலப்பொருட்களை கொண்டுவரவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சி.ஐ.டி.) அது குறித்த மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2018 டிசம்பர் மாதம் மாவனெல்லையில் புத்தர் சிலை தகர்ப்பு விவகார விசாரணைகளை கையேற்ற சி.ஐ.டி. அதுகுறித்த மேலதிக விசாரணைகளின்போது, புத்தளம், வணாத்தவில்லு முகாம் தொடர்பில் கடந்த 2019 பெப்ரவரி 19 ஆம் திகதி விடயங்களை வெளிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், சஹ்ரானால் 17 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள குறித்த கெப் வண்டி, வணாத்தவில்லு முகாம் வெளிப்படுத்தப்பட்டதையடுத்து, சஹ்ரானின் மைத்துனரால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விடயங்கள் சுமார் ஒரு வருடத்துக்குப் பின்னரேயே விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் குறித்த கெப் வண்டி மாவனெல்லை பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்த மேலதிக விசாரணைகளை சி.ஐ.டியினர் தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்