அமுலிலுள்ள வக்பு சட்டத்தில் திருத்தங்கள் துரிதப்படுத்தப்படும்
வக்பு சபையின் புதிய தலைவர் சப்ரி ஹலீம்தீன்
தற்போது அமுலிலுள்ள வக்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் துரிதப்படுத்தப்படும். கடந்த கால அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள வக்பு சட்டத்திருத்தங்களை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன். இது தொடர்பில் பிரதமரும் கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷவுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளேன் என வக்பு சபையின் புதிய தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடிவெள்ளி’ க்குத் தெரிவித்தார்.
வக்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘1956 ஆம் ஆண்டின் வக்பு சட்டத்தில் இறுதியாக 1982 ஆம் ஆண்டே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த கால அரசாங்கத்தின் காலத்தில் வக்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்கு குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. அந்தக்குழுவில் நானும் நியமிக்கப்பட்டிருந்தேன். கமிட்டியின் திருத்த சிபாரிசுகள் சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னரே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனால் தாமதத்திற்குள்ளாகியுள்ள வக்பு சட்டத்திருத்தங்களைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான கலாசார அமைச்சர் பிரதமர் ஊடாக முன்னெடுப்பேன்.
முஸ்லிம் சமூகம் தனிமைப்பட்டிருப்பதனாலே பெரும்பான்மை சமூகத்தினருடன் பிரச்சினைகள் உருவாகின்றன. பள்ளிவாசல்கள் இன நல்லிணக்க நிலையங்களாக செயற்பட வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகிகள் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும்.
இடவசதிகளுடன் கூடிய பள்ளிவாசல்கள் சமூக மத்திய நிலையங்களாக மாற்றம் பெற வேண்டும். பள்ளிவாசல் வளாகத்தில் வாசிகசாலைகள், சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் இணைந்து வாழ வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனது பதவிக் காலத்தில் வக்பு சொத்துக்களைப் பாதுகாப்பதிலும், இன நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துவேன்.
வக்பு சட்டம் எதிர்வரும் காலங்களில் கடுமையாக அமுல்நடாத்தப்படும். பள்ளிவாசல் நிர்வாகங்கள் தங்கள் பொறுப்புக்களை நேர்மையாக முன்னெடுக்க வேண்டும்’ என்றார்.
இதேவேளை, வக்புசபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாசீன் கருத்து தெரிவிக்கையில் ‘எமது பதவிக்காலத்தில் நாம் மேற்கொண்ட வக்பு சட்டத்திருத்தங்களை சட்டமாக்கிக் கொள்வதற்கு வக்பு சபையின் புதிய தலைவர் முன்வரவேண்டும். புதிய தலைவர் அனுபவமுள்ளவர். அவர் சிரேஷ்ட சட்டத்தரணி திறமையானவர். அவர் தனது கடமையைப் பொறுப்புணர்வுடன் மேற்கொள்வார் என்ற நம்பிக்கையுண்டு.
வக்பு சொத்துகள் மக்களுக்குரியவை. அவை மக்களின் நலன்களுக்கு பயன்பட வேண்டும். அச்சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
எனது பதவிக்காலத்தில் வக்பு சட்டத்திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. திருத்த சிபாரிசுகள் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அத்திருத்தங்களை சட்டவரைஞர் திணைக்களம் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். சட்ட மா அதிபரின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்ற பின்பே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்’ என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்