விமான கொள்வனவு ஊழலில் தேடப்பட்ட கபில சந்திரசேன மனைவியுடன் சரண்
நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 19 ஆம் திகதிவரையில் விளக்கமறியல்
இலங்கை விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன, அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க ஆகியோர் நேற்று சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த இருவரும் நேற்றுக் காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்ததையடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று பிற்பகல் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கமுன்ன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
2013 ஆம் ஆண்டு எயார்பஸ் ரக விமானங்களை கொள்வனவு செய்ய பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுடன் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தையடுத்து இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளை மையப்படுத்தி கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் குறித்த இருவரையும் கைது செய்த சி.ஐ.டி. நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தது. 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இவ்வாறு சட்ட விரோதமாகக் கையாளப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் துஷித் முதலிகே நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
நேற்றைய தினம் சந்தேக நபர்கள் இருவரும் மன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது சி.ஐ.டி. சார்பில் விசாரணை அதிகாரிகளான உபபொலிஸ் பரிசோதகர் விமல் ஜயவீர மற்றும் பொலிஸ் சார்ஜன் திஸாநாயக்க உள்ளிட்டோர் மன்றில் மேலதிக விசாரணை அறிக்கையுடன் ஆஜராகினர். அவர்கள் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துஷித் முதலிகே மன்றில் பிரசன்னமானார்.
முதல் சந்தேக நபரான இலங்கை விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரனி அனுஜ பிரேமரத்னவும், 2 ஆவது சந்தேக நபரான பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டியும் மன்றில் ஆஜராகினர்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் மன்றில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துஷித் முதலிகே மன்றில் விடயங்களை முன்வைத்தார்.
“கனம் நீதிவான் அவர்களே, நேற்று ( நேற்று முன் தினம்) மாலை இவ்விரு சந்தேக நபர்களும் இன்று (நேற்று) சி.ஐ.டியில் சரணடைவதாக சட்டத்தரணி ஊடாக அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் சி.ஐ.டியில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட ஸ்டேன்டட் சார்டட் தனியார் வங்கியின் அறிக்கை பிரகாரம் வெளிப்படுத்தப்பட்டுள்ள 3 வங்கிக்கணக்குகள் 2 ஆம் சந்தேக நபருக்குரியது. அதுகுறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இவர்களைக் கைது செய்ய முன்னர் கடந்த 2016 முதல், முதல் சந்தேக நபரிடம் 7 தடவைகளும், 2 ஆவது சந்தேக நபரிடம் 3 தடவைகளும் சி.ஐ.டி. விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலம் பெற்றது. அப்போது அவர்கள் இக்கணக்கு தொடர்பில் எதனையும் கூறவில்லை.
சி.ஐ.டி. அழைக்கும்போது அவ்விருவரும் வந்து வாக்குமூலம் கொடுத்தனர்.
எனினும் தற்போது சிங்கப்பூரிலுள்ள 3 கணக்குகள் குறித்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வங்கிக் கணக்குக்கு பிரான்ஸ் நிறுவனத்திலிருந்து வைப்பு செய்யப்பட்ட 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள், பின்னர் வெளிநாட்டில் உள்ள சில கணக்குகளுக்கும் உள்நாட்டில் சில வங்கிக் கணக்குகளுக்கும் மாற்றப்பட்டுள்ளன.
இலங்கைக்குள் அந்த பணம் மாற்றப்பட்ட சில வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் செய்ய வேண்டியுள்ளது. அதுகுறித்த தகவல்களை தற்போதைக்கு வெளிப்படுத்த முடியாது. அந்த விசாரணைகளை தடையின்றி முன்னெடுக்க வேண்டுமாயின் சந்தேக நபர்கள் விளக்கமறியலில் இருக்க வேண்டும். எனவே, அந்த விசாரணைகள், வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளும் வரை சந்தேக நபர்கள் இருவரையும் குறுகிய நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கோருகின்றேன்” என்றார்.
இதனையடுத்து முதல் சந்தேக நபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன வாதங்களை முன்வைத்தார்.
“கனம் நீதிவான் அவர்களே, இந்த விசாரணைகளுக்கு நாம் பூரண ஒத்துழைப்புக் கொடுத்துள்ளோம். இவ்வளவு நாள் நாம் விசாரணைகளுக்கு எந்த இடையூறும் செய்யாமல் இனிமேல் செய்ய வேண்டிய எந்த அவசியமும் எமக்கில்லை. நாம் விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது ஒரு கற்பனையே. எனவே அதனை நிராகரித்து எனது சேவை பெறுநருக்கு பிணையளிக்கவும்” என கோரினார்.
இதன்போது குறுக்கிட்ட நீதிவான் ரங்க திஸாநாயக்க, இந்த விசாரணை 2016 முதல் இடம்பெறுகின்றன. அப்படி இருக்கையில் கடந்த ஜனவரி 31 ஆம் திகதி சந்தேக நபர்கள் தமது வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்க நீதிமன்றை நாடினர். அதனையடுத்து அவர்களைக் கைதுசெய்ய ஏற்பட்ட விஷேட தேவை என்னவென முறைப்பாட்டாளர் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரால் துஷித் முதலிகே பதிலளித்தார்.
‘கனம் நீதிவான் அவர்களே, உண்மையில் 31 ஆம் திகதி மாலையே சி.ஐ.டி. இந்த விவகாரத்தில், சந்தேக நபர்கள் வெளிநாடு செல்ல முற்படுவது குறித்த விடயத்தை கூறி ஆலோசனை கோரினர். பின்னர் அவர்களே அந்த கோரிக்கையை மீளப் பெற்றுக்கொன்டுள்ளனர்.
உண்மையில் இந்த விசாரணை சர்வதேச ரீதியில் இடம்பெறுவதாகும். இலங்கை, சிங்கப்பூர், பிரித்தானியா, அவுஸ்திரேலியா, புரூனை உள்ளிட்ட நாடுகளுடன் இவ்விசாரணை தொடர்புபட்டது.
கடந்த 2 ஆம் திகதி ஊடகங்களில் பிரித்தானியாவினால் பகிரங்கப்படுத்தப்பட்ட எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்களின் போதான இலஞ்சம் கோரிய விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டன. அதில் இலங்கையின் விபரங்களும் இருந்தன. அதுவும் கூட இதில் தாக்கம் செலுத்தியிருக்க முடியும் ‘ என்றார்.
இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, கனம் நீதிவான் அவர்களே, பிரித்தானியாவினால் பகிரங்கப்படுத்தப்பட்ட விடயங்களை நான் இம்மன்றில் இருந்தபோது வட்ஸ்அப் ஊடாக அறிந்தேன். அதனாலேயே நான், வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம் தொடர்பில் செய்த கோரிக்கையை வாபஸ் பெற்றேன்’ என்றார்.
அதன் பின்னர் 2 ஆவது சந்தேக நபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி லத்துவஹெட்டியும் பிணை கோரினார். 2016 முதல் இடம்பெறும் விசாரணைகளில், இதுவரை எந்த தடங்கல்களையும் ஏற்படுத்தாதோரை, ஒரு சிறு பகுதி எஞ்சியுள்ளதெனக் காட்டி விளக்கமறியலில் வைக்கத் துடிக்கின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் வாதிட்டார்.
எனினும் இவற்றுக்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் துஷித் முதலிகே, உள்நாட்டு வங்கிக்கணக்குகள் சிலவற்றை மையப்படுத்திய விசாரணைகளை வெற்றிகரமாக செய்துகொள்ளவே தான் இவர்களை விளக்கமறியலில் வைக்க கோருவதாகவும், அதுவும் நீண்ட நாட்களுக்கு அல்லாமல் குறுகிய நாட்களுக்குள் அதனை முடிவுறுத்த எதிர்பார்ப்பதாகவகவும் கூறினார்.
இதனையடுத்து தனது உத்தரவைப் பிறப்பித்த நீதிவான் ரங்க திஸாநாயக்க, சந்தேக நபர்கள் இருவரும் பிணையில் இருப்பின் எஞ்சியிருக்கும் விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதைக் கருத்திற்கொண்டு அவ்விருவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிதி மோசடி விவகாரம் தொடர்பில் பி14363f9 எனும் வழக்கு இலக்கத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சி.ஐ.டி. இலங்கை விமான சேவைக்கு விமானங்களை கொள்வனவு செய்யும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்து வந்தது. அதன்படி அதுகுறித்த விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்ள சி.ஐ.டி. கடந்த ஜனவரி 31 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பியது. அதனுடன் இணைத்து 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்களின் போதான பரஸ்பர ஒத்துழைப்பு சட்டத்தின் பிரகாரம் சிங்கப்பூரிலிருந்து பெற்றுக்கொண்ட விஷேட ஆவணமும் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டது. அவற்றை ஆராய்ந்த சட்டமா அதிபர் சி.ஐ.டியின் பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்கவுக்கு விஷேட ஆலோசனைகளை அனுப்பி வைத்தார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட ஸ்டேன்டட் சார்டட் தனியார் வங்கியின் மூன்று கணக்கு இலக்கங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிஸ் சொலுஷன் எனும் நிறுவனத்தின் பெயரில் உள்ள அந்தக் கணக்கு இலக்கங்கள் தொடர்பில் 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்களின் போதான பரஸ்பர ஒத்துழைப்பு சட்டத்தின் பிரகாரம் நீதி அமைச்சின் ஊடாகப் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
அதன்படி பிஸ் சொலுஷன் எனும் நிறுவனம் பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் அதன் பணிப்பாளர், ஒரே பங்குதாரர் அவரே என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அந்நிறுவனத்தின் பெயரிலுள்ள 0107130602 எனும் இலக்கத்தை உடைய வங்கி கணக்குக்கு 2013.12.27 அன்று 2 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது.
EADS HQ/ SSC பிரான்ஸ் எனும் நிறுவனம் ஊடாகவே அப் பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணத் தொகையானது பின்னர் அவுஸ்திரேலியாவின் பொதுநல வாய வங்கியில் உள்ள கபில சந்திரசேனவின் 06323610119179 எனும் வங்கி கணக்குக்கு 4 சந்தர்ப்பங்களில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. 2014.05.08 அன்று ஒரு இலட்சம் யூரோக்களும் 2014.07.07 அன்று ஒரு இலட்சம் யூரோக்களும் 2014.08.07 அன்று 2 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர்களும் 2014.09.17 அன்று 2 இலட்சம் யூரோக்களும் இவ்வாறு அந்தக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. அதன் பின்னர் 2015.11.25 அன்று 0107130602 எனும் வங்கி கணக்கு மூடப்பட்டுள்ளது. அதன் போது அதில் ஒரு சதமேனும் மிகுதி இருக்கவில்லை என சிங்கப்பூர் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட விஷேட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளில் இலங்கை விமான சேவை நிறுவனம் 2013.05.16 அன்று பிரான்ஸ் எயார் பஸ் எஸ்.ஏ.எஸ். நிறுவனத்துடன் ஏ–330 –- 900 ரக விமானங்கள் நான்கினையும் ஏ–330 –- 300 ரக விமானங்கள் 6 இனையும் கொள்வனவு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரண்டில் கைசாத்திட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் பிரான்ஸ் எயார் பஸ் எஸ்.ஏ.எஸ். நிறுவனமே EADS HQ/ SSC பிரான்ஸ் எனும் நிறுவனம் என்பதும் விசாரணைகளில் தெரியவந்தது. இதனைவிட கபில சந்திரசேன இலங்கை விமான சேவை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக 2011.08.01 அன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் 2015 ஜனவரி வரை அப்பதவியில் அவர் இருந்துள்ளார். அத்துடன் பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க என்பவர் கபில சந்திரசேனவின் சட்ட ரீதியான மனைவி என்பதும் விசாரணையாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அனைத்து விடயங்களையும் ஆராய்ந்துள்ள சட்ட மா அதிபர் முறைப்பாட்டாளர் தரப்பு அறியாத நபர்கள், நிறுவனங்களுடன் சேர்ந்து கபில சந்திரசேனவும் அவரது மனைவியும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டலாக அல்லது சட்ட விரோதமான பரிசாக பெற்றுக் கொண்டுள்ளமையும் கறுப்பு பண சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் நியாயமான சந்தேகம் எழுவதால் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டு கைது உத்தரவை பெற்றுக்கொள்ள ஆலோசனை வழங்கியிருந்தார். அதன் பிரகாரமே குறித்த கைது உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டு நேற்று அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். -Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்