*இறைவன் இருக்கின்றானா?
*இறைவன் ஏகனா? அநேகனா?
*குர்ஆன் இறைவாக்கா?
*ஏன் இறைவழிகாட்டலை ஏற்க வேண்டும்?
*மறுமை சாத்தியமா? மறுமை ஏன்?
*இஸ்லாமிய கடமைகளின் நோக்கம் என்ன?
இது குறித்து குர்ஆனும், நபிமொழிகளும் ஆழமாக விவாதித்திருக்கின்றன. பெருமானாரிடம் தோழர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு இதற்கான விடைகளைப் பெற்றார்கள். சிந்தனை, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படும் உறுதி என்றும் நிலைத்து நிற்கும். கண்மூடித்தனமான பின்பற்றுதல் தடுமாற்றத்திற்கு உள்ளாகும்.
“அறிவு என்பது கருவூலம். கேள்விகளே அதன் திறவுகோல்” (அபூதாவூத்)
“இவர்கள் குர்ஆனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?” (திருக்குர்ஆன் 47:24)
“ஷைத்தான்களைப் பொறுத்தவரை ஓர் அறிஞர் ஆயிரம் வணக்கசாலிகளை விடக் கடினமானவராக இருக்கின்றார்” (அறிஞர்களை ஷைத்தானால் எளிதில் வழிகெடுக்க முடியாது)– திர்மிதி
“சிறிதுநேர சிந்தனை பல ஆண்டு வணக்கத்தைவிடச் சிறந்தது” (நபிமொழி)
இதுவும் இதுபோன்ற எண்ணற்ற இறைமொழி, நபிமொழிக் குறிப்புகளும் சிந்தனை செய்து ஈமான் கொள்வதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.
இஸ்லாமிய போதனைகள் இந்த வகையில் அமைய வேண்டும். குறிப்பாக இளைஞர்களுக்கு, குழந்தைகளுக்கு இவ்வகையில் இஸ்லாமிய கருத்துகளை வழங்காவிடில் நாத்திகம், கம்யூனிசம், மேலைநாட்டுப் பண்பாடு, கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றின் பக்கம் அவர்கள் செல்லக்கூடும்.
இஸ்லாத்தின் வழிபாடுகள், சடங்குகள் கொண்ட ஒரு மதமாகக் கற்பிக்காமல், வாழ்வின் அனைத்து விஷயங்களுக்கும் வழிகாட்டும் மார்க்கமாக, வாழ்வியல் தத்துவமாக போதிக்க வேண்டும். இல்லையேல் வழிபாட்டில் கவனமாக இருந்து விட்டு சமூக, பொருளாதார, அரசியல் விவகாரங்களில் இஸ்லாத்திற்கு மாற்றமான வழிகளில் செல்வார்கள்.
மஸாயில்களுக்கு– மார்க்கச் சட்டங்களுக்கு இஸ்லாத்திற்கு ஓர் இடம் உண்டு. ஆனால் நாம் மார்க்கமே மஸாயில் என்று ஆக்கிவிட்டிருப்பதால் பல மோசமான விளைவுகளைத் தந்துள்ளது. மஸாயில்களைப் பற்றி பேசுவதிலும், தர்க்கிப்பதிலுமே அதிக நேரம் கழிகின்றது.
இஸ்லாம் மட்டுமல்ல, இஸ்லாத்திற்கு மாற்றமான ஜாஹிலியத் கொள்கைகளின் பலவீனங்களையும் முரண்பாடுகளையும் விளக்க வேண்டும். ஜாஹிலியத்தை விளங்காமல் இஸ்லாத்தை முழுமையாகப் புரிய முடியாது.
சூழ்நிலைகளில் கவனம்
மனிதனை உருவாக்குவதில் சூழ்நிலைகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. வீட்டுச் சூழ்நிலை, கல்வி வளாகச் சூழ்நிலை, அலுவலக சூழ்நிலை, நண்பர்கள் ஆகியவை ஒரு மனிதனைப் பெரிதும் பாதிக்கின்றது.
“ஒருவன் தன் நண்பனின் மார்க்கத்தில் (வழியில்) உள்ளான். எனவே யாரை நண்பனாகத் தேர்ந்தெடுப்பது என்பதைப் பற்றி சிந்தியுங்கள்” (திர்மிதி)
“தீயவர்களுடன் இருப்பதைவிட தனிமையில் இருப்பது நல்லது. தனிமையில் இருப்பதை விட நல்லவர்களுடன் இருப்பது சிறந்தது” (பைஹகி)
வீட்டில் இஸ்லாமியச் சூழல் நிலவ வேண்டும். தொழுகை, குர்ஆன் ஓதுதல், பயான்கள், ஆரோக்கியமான உரையாடல்கள் ஆகியவற்றால் வீடு சூழப்பட்டிருக்க வேண்டும். திரைப்படம், தீயவற்றைப் போதிக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றைப் பார்க்கும் குடும்பங்களில் உருவாகும் குழந்தைகள் எவ்வாறு இஸ்லாமிய வார்ப்பில் உருவாகும்?
பெற்றோர்களே குழந்தைகளுக்கு முதல் முன்மாதிரி ஆவார்கள். பெற்றோர்கள் தமது செயற்பாடுகளில் குறை உள்ளவர்களாக இருந்து கொண்டு, உபதேசங்களின் மூலமாகவோ அல்லது ஒரு ஹஸ்ரத்தை நியமித்து குழந்தைகளை சரிசெய்து விடலாம் என்று எண்ணிச் செயற்பட்டால் ஏமாற்றத்திற்கே ஆளாவார்கள்.
கல்வி வளாகச் சூழ்நிலைகள்
இஸ்லாமியச் சூழ்நிலை, இஸ்லாமியப் பாடத்திட்டங்களுடன் கூடிய ஆண்கள், பெண்களுக்கான தரமான தனித்தனிக் கல்வி நிலையங்களே இன்றைய தேவை. ஆனால் இவற்றைச் செயற்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளன என்பதையும் எல்லோரும் அறிவர்.
இஸ்லாமியச் சூழல் இல்லாத கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்தின் இறுதியில் (Week end days) தனிவகுப்புகளை பள்ளிவாசல்களிலும் பள்ளிக்கூடங்களிலும் இஸ்லாமிய மையங்களிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொழுதுபோக்கு அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். கார்ட்டூன்கள், கம்பியூட்டர் விளையாட்டுக்கள், பாடல்கள், கல்விக்கூடங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் குழந்தைகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கின்றன. எனவே இத்துறையில் கவனம் செலுத்தி இஸ்லாமிய வரம்புகளை மீறாத வகையில் மாற்று ஏற்பாடுகளைச் (alternate ways) செய்ய வேண்டும்.
ஜமாஅத்தாக வாழ்தல்
முஸ்லிம்கள் ஆற்ற வேண்டிய பல்வேறு பொறுப்புக்களைப் பற்றி விவாதித்தோம். இத்தனை பணிகளையும் தனிமனிதர்களாகச் செய்ய முடியாது. முஸ்லிம்கள் ஒரு குழுவாக– ஜமாஅத்தாக ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலமே இவை சாத்தியமாகும். ஜமாஅத்தாக வாழ்வதன் அவசியத்தை நபிகளார் வலியுறுத்தியதோடு மட்டுமின்றி ஒரு ஜமாஅத்தை நிறுவி முன்மாதிரியாக வாழ்ந்து உள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். “ஒரு காட்டில் வாழ்கின்ற மூன்று மனிதர்களாயிருப்பினும் சரி, அவர்களும் தமக்குள் ஒருவரை அவசியம் தங்கள் அமீராக (தலைவராக)க் கொள்ள வேண்டும்” (அல் முன்தகா)
அறிவிப்பாளர்: முஆத்பின் ஜபல் (ரலி)
‘ஆடுகளுக்கு ஓநாய் எப்படிப் பகைவனாக உள்ளதோ, தம் மந்தையை விட்டு விலகித் தனியாக நிற்கும் ஆடுகளை எப்படி இலகுவாக ஓநாய் வேட்டையாடி இரையாக்கிக் கொள்கின்றதோ, அதே போன்று ஷைத்தான் மனிதனுக்கு ஓநாயாக இருக்கின்றான். மக்கள் ஒரு கூட்டமைப்பாக வாழாவிட்டால் அவன் அவர்களைத் தனித்தனியாக மிகவும் இலகுவாக வேட்டையாடி விடுகின்றான்.எனவே, மக்களே! குறுகலான பாதையில் நடக்காதீர்கள்! மாறாக நீங்கள் ஜமாஅத் அமைப்புடனும் முஸ்லிம் பொதுமக்களுடனும் இணைந்து வாழுங்கள்!” (முஸ்னத் அஹ்மத், மிஸ்காத்)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். “சுவனத்தின் நடுவில் தன் வீட்டைக் கட்டிட எவன் விரும்புகின்றானோ அவன் ஜமாஅத்துடன் இணைந்தே இருக்க வேண்டும். ஏனெனில் தனித்த ஒரு மனிதனுடன் தான் ஷைத்தான் இருப்பான். இரண்டு மனிதர்களாகி விடும்போது அவன் தூர விலகி விடுகிறான்”
இந்த நபிமொழிகள் அனைத்தும் ஜமாஅத்துடன் வாழ்வதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
1.வணக்கங்களைச் செய்ய ஜமாஅத் தேவை. தொழுகை, நோன்பு, ஸகாத் என கட்டாயக் கடமைகள் அனைத்தும் ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டியவை.
2. முஸ்லிம்கள் பல சேவைகளை நிறைவேற்ற ஜமாஅத் அமைப்பு தேவை. பைத்துல்மால், வட்டியில்லா கடனுதவி, சமூக சேவை, கல்வி, பொருளாதார உதவித் தொகை, ஷரீஆ, பஞ்சாயத்து ஆகியவற்றைச் செய்ய ஜமாஅத் தேவை.
3. நன்மையை ஏவி, தீமையை விலக்கும் பணியை முறையாக, நிலையாக, திறமையாகச் செய்ய ஜமாஅத் தேவை.
4. அரசியலில் நமது உரிமையைப் பெற, சமூகத்தின் வலிமையைக் காட்ட ஜமாஅத் தேவை.
ஜமாஅத் வலுவுள்ளதாக இருக்க வேண்டும் எனில் முஸ்லிம்களிடையே ஒற்றுமை தேவை.
“நீங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள்” (திருக்குர்ஆன் 3:103)
எவர்கள் தம்மிடம் தெளிவான அறிவுரைகள் வந்த பின்னர் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பற்பல பிரிவினராய்ச் சிதறுண்டு விட்டார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகிவிடாதீர்கள்” (திருக்குர்ஆன் 3:105)
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொள்ளாதீர்கள்! அவ்வாறு செய்தால் உங்களிடையே பலவீனம் தோன்றிவிடும். மேலும் உங்கள் மதிப்பும் வலிமையும் அழிந்து போய்விடும். ஆகவே பொறுமையை மேற்கொள்ளுங்கள்” (8:46)
மேலே மேற்கோள் காட்டப்பட்ட இறைவசனங்கள் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமையுடன் இணைந்திருக்க வேண்டும். முஸ்லிம்களிடம் பெரும்பாலான விசயங்களில் கருத்து ஒற்றுமையே நிலவுகின்றது. ஓர் இனம், ஒரு மறை, ஒரு தூதர், ஒரு கிப்லா, ஒரு ஷரீஆ என்பதன் அடிப்படையில் வாழ்ந்து வருகின்றோம். சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருப்பது இயற்கையே. அவற்றைப் பெரிதுபடுத்தாமல், அவற்றின் அடிப்படையில் பிணங்கிக் கொள்ளாமல், “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வாழ்வது ஒன்றும் சிரமமானது அல்ல.
இயக்கவெறி, மொழிவெறி, கட்சிவெறி ஆகியன இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பலவீனப்படுத்தும் அறியாமைக்கால (ஜாஹிலியா) கோட்பாடுகள் ஆகும்.
தூய்மையான எண்ணமும் (இக்லாஸ்) தாராள மனப்பான்மையும், நேசிக்கும் மனப்பான்மையும் இஸ்லாம், முஸ்லிம் சமுதாயம் பற்றிய அக்கறையும் இருப்பவர்களிடம் பிளவுச் சிந்தனைகள் தோன்றாது.-Vidivelli
- சமரசம்