இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று முன்தினம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சமயம், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ நிகழ்த்திய உரை பலரதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவையும் அவரது கட்சியினரையும் கடுமையாக விமர்சனத்துக்குட்படுத்தும் எதிரணி அரசியல்வாதியான முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான மங்கள சமரவீர எம்.பி.யே, ஜனாதிபதியின் சுதந்திர தின உரையை முதன் முதலாக வரவேற்று கருத்து வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் உரை மிகவும் சிறப்பானதாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்த அவர், உரையில் குறிப்பிட்ட விடயங்களை ஜனாதிபதி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
‘‘ஜனாதிபதியின் உரை மிகவும் சிறப்பானதாக இருந்தது. தற்போது அவர் கூறியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். மிகவும் கடினமான தீர்மானங்களை ஒரு ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் நடைமுறைப்படுத்தக் கூடியவரே சிறந்த வலுவான தலைவராவார். 1948 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் சிறந்த உரைகளை நிகழ்த்திய நன்நோக்கம் கொண்ட தலைவர்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் இது செயற்பட வேண்டிய தருணமாகும்’ என்று அவர் தனது டுவிட்டர் மூலமாக குறிப்பிட்டிருந்தார்.
அதேபோன்றுதான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸுஹைர் நேற்று விடுத்துள்ள அறிக்கையொன்றிலும் ஜனாதிபதியின் உரை வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தனது சுதந்திர தின உரையில் மக்களின் சுதந்திரத்தை வலுப்படுத்தல், சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்தல், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் தான் தலைவரென்றும் மதத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை உறுதியளித்ததும் சகலரதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இவ்வுரையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த அவரது கொள்கைகளும் சகலரையும் ஈர்த்திருக்கும் என்பது உறுதி‘‘ என சட்டத்தரணி ஸுஹைர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற தனது பதவியேற்பு நிகழ்வின்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆற்றிய உரைக்கும் சுநத்திர தினத்தின்போது அவர் ஆற்றிய உரைக்குமிடையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இருப்பதை அவதானிக்க முடிகிறது. அநுராதபுரத்தில் ஆற்றிய உரையில் அவர் முழுக்க முழுக்க சிங்கள பெளத்த மக்களை முன்னிலைப்படுத்தியே பேசியிருந்தார். எனினும் சுதந்திர தின உரையின் கருப்பொருளை கருத்துச் சுதந்திரம் மற்றும் மத சுதந்திரத்தை வலியுறுத்துவதாகவே அவர் அமைத்திருந்தார்.
மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளதைப் போன்று கடந்த காலங்களிலும் இவ்வாறு பல தலைவர்கள் சிறந்த பேச்சாளர்களாக இருந்திருக்கிறார்கள். நல்ல பல சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அவற்றை வெற்றிகரமாக செயலுருப்படுத்தியுள்ளார்களா என்பதே இங்குள்ள கேள்வியாகும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தன்னை அதிகம் பேசுபவராகவன்றி, அதிகம் செயற்படுபவராகவே இதுவரை காண்பித்திருக்கிறார். அந்த வகையில் அவர் சுதந்திர தின உரையில் முன்வைத்த கருத்துக்களை அடுத்துவரும் காலங்களில் செயலுருப்படுத்துவதற்காக திடசங்கற்பம் பூண்டு உழைக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
இலங்கையில் வாழும் சகல இன மக்களதும் கருத்துச் சுதந்திரத்தையும் மத சுதந்திரத்தையும் பொருளாதார சுதந்திரத்தையும் பாதுகாக்க அவர் தன்னாலியன்ற அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள வேண்டும். தனதுரையில் வலியுறுத்தியதைப் போன்று சகல மக்களினதும் நேசத்துக்குரிய தலைவராக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஊழலும் மோசடியும் நிறைந்த அரசியல் கலாசாரத்துக்கு முற்றப் புள்ளி வைத்து சுபீட்சமானதொரு இலங்கையைக் கட்டியெழுப்ப அவர் பாடுபட வேண்டும். அதன் மூலமாகவே சுதந்திர தின உரையில் குறிப்பிட்ட விடயங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியுமாகவிருக்கும்.-Vidivelli